Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடலை வலுவாக்க… மனதை எளிதாக்க…

உடலை வலுவாக்க… மனதை எளிதாக்க…

66

மசாஜ் சிகிச்சை மகத்துவங்கள்!

இயற்கை எழில் சூழ்ந்த கடவுளின் பூமியில், வாழை இலை மீது ஒருவர் ஹாயாகப் படுத்திருக்க… எண்ணெய் வழிந்தோடும் அவரது உடல் தசைகளைப் பயிற்சியாளர்கள் இருவர் விரல்களால் நன்றாக அழுத்தி நீவிவிடுகிறார்கள். படுத்திருப்பவரின் நெற்றியில் மூலிகை மருந்து நிரப்பப்பட்ட மண் சட்டியில் இருந்து மருந்து சீராக விழும்…

”உடல் சோர்வு மற்றும் வலியைப் போக்கும் ஒரு சிகிச்சைதான் மசாஜ். உடலில் வலி அதிகரிக்கும்போது மசாஜ் செய்துகொண்டால் சுகமாக இருக்கும் என்கிற எண்ணமே நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், மசாஜ் என்ற வார்த்தையை அவ்வளவு எளிதாகச் சுருக்கிவிட முடியாது. அது மனித ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் ஆழ்கடல்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்

‘ஆயுர்வேதத்தில் நோய் வராமல் தடுக்க… வந்த பின்னால் சரிசெய்ய… என இரண்டுவிதமான சிகிச்சைகள் உள்ளன. மசாஜ் என்பது சிகிச்சையின் ஒரு பகுதிதான். அதை ஒரே ஒரு நாள் செய்வதால் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. பொதுவாக ஆயுர்வேத சிகிச்சைகளை ஒரு மண்டலம் (48 நாட்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு 48 நாள் சிகிச்சை பெறுவது என்பது பலருக்கும் இயலாத காரியம். எனவே, 21 நாட்கள் சிகிச்சை, 15 நாட்கள் சிகிச்சை எனச் சில மாற்றங்கள் செய்துள்ளோம்.

இதில், நச்சு நீக்குதல், திசுக்களைச் சரிசெய்தல், ரிஜூனுவேஷன் (Rejuvenation) எனப்படும் திசுக்கள் வயதாகும் தன்மையைத் தாமதப்படுத்தும் சிகிச்சைகள் ஆகியவை அடங்கும். வேலைக்குப் போய்க்கொண்டே சிகிச்சை பெற எண்ணுவதும் சரி அல்ல. காலையில் சிகிச்சை எடுத்துவிட்டு உடனே வேலைக்குச் சென்றால் மீண்டும் கோபம், எரிச்சல், டென்ஷன் என எல்லாம் வந்துவிடும். சிகிச்சை எடுத்ததற்கான பலனே இல்லாமல் போய்விடும். உடல் குணமாக ஓய்வு தேவை. உடம்பும் மனசும் முழு ஓய்வாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகள் பலன் கொடுக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. முதலில் அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எனப் பிரத்யேகமான சிகிச்சையை வடிவமைக்கிறோம்.

அவரது உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்துள்ள அளவைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடும். முதலில் உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறோம். இதற்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும். நச்சுப் பொருட்களை வெளியேற்ற வாந்தி, வயிற்றுப்போக்கு, எனிமா கொடுப்பது, மூக்கு வழியே மருந்து செலுத்துதல் போன்ற முறைகளைக் கையாள்கிறோம். மேலும், உடலில் கெட்ட ரத்தம் தேங்கிப்போய் நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு உடலின் குறிப்பிட்ட பாகங்களில் அட்டைப் பூச்சியைக் கடிக்கவைத்துக் கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுப்பது என மொத்தம் ஐந்து வகையான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம்.

இதன் பிறகு பழுதடைந்த செல்களைச் சரிப்படுத்தும் ‘ஷமனம்’ என்கிற சிகிச்சை தொடங்கும். இதில்தான் பல்வேறு வகையான மசாஜ்கள் அடங்கி உள்ளன. குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து இந்தச் சிகிச்சையைப் பெறுவதன் மூலம் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும்” என்று தெளிவாக விளக்கிய மருத்துவக் குழுவினர் ஒத்தடம் கொடுக்கும் முறைகளையும் நேரடியாகச் செய்து காட்டினர்.

மசாஜ் செய்ய எவ்வளவு?

சிகிச்சையாக இல்லாமல் வெறுமனே ஒரு நாளுக்கு மட்டும் சிகிச்சை பெறுவதாக இருந்தால், இரண்டு மூன்று வகையான ஆயுர்வேத மசாஜ் சேர்த்து வழங்கப்படுகிறது. இதற்கு தோராயமாக 1,200 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை கட்டணம். ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மசாஜ் செய்தால், அதற்கு 2,000 ரூபாய்க்கு மேல் கட்டணம். ஆயுர்வேத ஆயில் மசாஜ் மட்டும் செய்வதாக இருந்தால் இடத்துக்கு ஏற்றபடி 500 ரூபாய் முதல் கட்டணம்.

தைலதாரா:

மூலிகைகள் கலந்த எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி மசாஜ் செய்வதற்கு ‘தைலதாரா’ என்று பெயர். கட்டில் போன்ற ஒரு படுக்கையில் சிகிச்சை பெறுபவரைப் படுக்கவைத்து, பல்வேறு மூலிகைகள் கலந்த எண்ணெயை அவரது உடல் முழுக்க ஊற்றி மசாஜ் செய்கின்றனர். அபிஷேகம் செய்யப்படுவது போன்று மூலிகை எண்ணெய் அவரது உடல் முழுவதும் வழிகிறது. இது ஒரு மணி நேரம் நீடிக்கிறது. இதனால் உடலின் வெப்பம் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வெப்பத்தைச் சரிப்படுத்த ரத்த நாளங்கள் விரிந்துகொடுக்கின்றன. இதனால், உடலின் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராக நடக்குமாம். திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதால், உடலின் தசை மற்றும் மூட்டுப் பகுதிகள் வலு பெறும்.

கழுத்து – முதுகெலும்பு மசாஜ்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரும் கம்ப்யூட்டர் அல்லது டி.வி. முன்னால் மணிக்கணக்கில் பழியாய்க் கிடக்க நேரிடுகிறது. இவர்களுக்கு கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாதது. இவர்களது முதுகெலும்புத் தொடருக்கு வலு சேர்க்கும் வகையில், பிரத்யேகமாக ‘கழுத்து – முதுகெலும்பு மசாஜ்’ அளிக்கப்படுகிறது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கழுத்துப் பகுதியில் கை வைத்து மசாஜ் செய்ய ஆரம்பித்த உடனேயே, ‘சிகிச்சைக்கு வந்திருப்பவர் தினமும் எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னாள் அமர்ந்திருக்கிறார். ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறார்’ என்பது உள்ளிட்ட விஷயங்களோடு, ‘ஏ.சி-யில் இருந்து வரும் காற்று அவரது உடலில் எந்தப் பகுதியை நோக்கி பெரும்பாலான நேரம் வீசுகிறது’ என்பது வரையிலான அனைத்து விஷயங்களையும் நம் கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் தசை மாற்றங்களை வைத்தே கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள் சிகிச்சையாளர்கள்.

நவரக்கிழி

நவரை என்ற அரிசியைக்கொண்டு இந்த மசாஜ் செய்யப்படுகிறது. இதற்கு ‘சஷ்டிக பிண்ட ஸ்வேதம்’ என்று பெயர். இந்த அரிசியை மூலிகைகள் சேர்க்கப்பட்ட பாலில் வேகவைக்கின்றனர். அரிசி வெந்ததும் அந்தச் சாதத்தினைச் சுத்தமான ஒரு துணியில் கொட்டி கயிற்றால் இறுகக் கட்டிவிடுகிறார்கள். இதுதான் நவரக்கிழி. சிகிச்சை பெறுபவரின் உடல் முழுக்க இந்த நவரக்கிழியைக்கொண்டு நன்றாக அழுத்தி மசாஜ் செய்கின்றனர். நவரை அரிசியை வேகவைத்த மூலிகைப் பாலும் அருகிலேயே இருக்கிறது. அவ்வப்போது நவரக்கிழியை இந்த மூலிகைப் பாலில் முக்கி எடுத்து மசாஜ் செய்கிறார்கள். இப்படி மசாஜ் செய்யும்போது அந்தச் சின்னத் துணி மூட்டையில் உள்ள நவரை அரிசி சாதமும் மூலிகை மருந்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து கெட்டியான மாவுக் கசியலாக வெளியே வழிகிறது. இந்தச் சிகிச்சையை ஒரு மணி நேரத்துக்குச் செய்கின்றனர். இது வாதம் மற்றும் பித்தத்தைத் தணிப்பதோடு தசைகளையும் வலுவடையச் செய்கிறது. மூட்டு வலியைப் போக்கும் ஆற்றலும் இந்த சிகிச்சைக்கு உள்ளதாம்.

தக்ரதாரா:

இது தலைக்கான பிரத்யேக சிகிச்சை. தக்ரம் என்றால் மோர் என்று அர்த்தம். பாலில் நெல்லிக்காய், முத்தங்காய் போன்ற பல்வேறு மூலிகைப் பொருட்களைப் போட்டுக் காய்ச்சித் தயிர் நிலைக்கு கொண்டுவருகிறார்கள். பின்னர் இந்தத் தயிரைக் கடைந்து, அதில் வெண்ணெயை அகற்றி மோர் தயாரிக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவரைக் கட்டில்போன்ற படுக்கையில் படுக்கவைக்கின்றனர். அவர் நெற்றிப் பகுதிக்கு மேலே ஒரு பெரிய கலசம் தொங்குகிறது. மூலிகை மோர் நிரப்பப்பட்ட அந்தக் கலசத்தில் இருந்து மோரானது அவரது நெற்றிப் பகுதியில் சீராக விழும்படி கலசத்தில் சிறிய துளை இட்டுள்ளனர். குளிர்ந்த மோர் நெற்றிப்பொட்டில் விழும்போது படுத்திருப்பவரின் உடல் சிலிர்க்கிறது. நேரம் செல்லச்செல்ல உடல் நிதானமடைந்து ஓய்வு பெறும் நிலைக்கு வருகிறது. அதற்கு முன்பு அப்படி ஒரு குளிர்ச்சியான சூழ்நிலையைத் தலை பெற்றது இல்லை என்பதுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்படும். இந்தச் சிகிச்சையில், உடல் – மனம் இரண்டும் அமைதி பெறுவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது. 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.