Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியை எப்படித் தொடங்குவது, பலன் பெறுவது?

உடற்பயிற்சியை எப்படித் தொடங்குவது, பலன் பெறுவது?

32

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய முதல் முக்கிய அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள்! அடுத்து என்ன? உடற்பயிற்சி செய்வது என்று முடிவு செய்வதே ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய முதல் முக்கியப் படிதான் என்றாலும் முடிவு செய்வது மட்டுமே பலன் கொடுக்காது. செயல்படுத்துவது மட்டுமின்றி அதை விடாமல் தொடர்வதும் தான் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெற முக்கியம்.

மகிழ்ச்சியான உடற்பயிற்சிப் பழக்கத்தைத் தொடங்கி, நிறுத்தாமல் தொடர்வதற்கு உதவும் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலக்கை அமைத்துக்கொள்ளுங்கள் – உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, உண்மையில் அடையக்கூடிய ஒரு இலக்கை அமைத்துக்கொள்வது முக்கியம். உதாரணமாக, மூன்று மாதத்தில் 5 கி. கி. எடை குறைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே ஒரு இலக்கை அமைத்துக்கொள்ளலாம். இந்த இலக்கை எழுதி, அடிக்கடி உங்கள் பார்வையில் படும்படி பல்வேறு இடங்களில் ஒட்டிவையுங்கள். தொடர்ந்து இதனை உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, ஃப்ரிட்ஜில் ஓட்டலாம், குளியலறை, கண்ணாடி, உங்கள் படுக்கையறை, வேலை செய்யும் இடம் போன்ற இடங்களில் ஒட்டி வைக்கலாம்.

தொடக்கத்தில் மிதமாகச் செய்யவும் – பொதுவாக நாம் புதிதாக ஏதேனும் தொடங்கும்போது, அதீத ஆர்வத்தில் தொடக்கத்திலேயே அதிகமாகச் செய்துவிடுவோம். உடற்பயிற்சிக்கும் அது பொருந்தும்! பலர், முதல் நாளிலேயே அதீதமாக உடற்பயிற்சி செய்துவிடுவதுண்டு. இப்படிச் செய்வதால், உடற்பயிற்சியானது உடலுக்கு நன்மைக்குப் பதிலாக கெடுதலே செய்யும். முதலில் மிதமான பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டியது முக்கியம். முதலில் குறைந்தது 30 நிமிடம் வரை மிதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரிக்க வேண்டும், உடல் பழகப் பழக, சிறிது சிறிதாக கடுமையான பயிற்சிகளுக்கு மாற வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் – உடற்பயிற்சிகளால் விரும்பிய பலன்களைப் பெற வேண்டுமானால், தொடர்ந்து நீண்ட காலம் செய்ய வேண்டும். சொல்லப்போனால், பல் துலக்குவது குளிப்பது போன்று உடற்பயிற்சியையும் ஒரு அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்பது நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங், ஜிம் பயிற்சிகள், பைலேட் பயிற்சிகள் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற எதுவாகவும் இருக்கலாம். அதை தினசரி பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகும்.

செய்வதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும் – நாம் செய்வதை மகிழ்ச்சியோடு செய்தால், அதைத் தொடர்ந்து செய்து வெற்றியடைய முடியும். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும். இந்த தினசரி பழக்கத்தை உங்களுக்குப் பிடித்தமான ஒரு செயலாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணமாக, பூங்காவில் நடக்கிறீர்கள் என்றால் நண்பர்களுடன் பேசுங்கள், சிரிக்கும் குழுக்களில் சேர்ந்துகொள்ளுங்கள், இசை கேளுங்கள், புதிய நண்பர்களைப் பெறுங்கள், இன்னும் நீங்கள் விரும்பும் பலவற்றைச் செய்து உடற்பயிற்சியை மகிழ்ச்சியான அனுபவமாக்கிக்கொள்ளலாம்.

உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுங்கள் – இந்தச் செயலில் ஈடுபடும் முன்பு, உங்கள் உடலைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். அப்போது தான் உங்கள் தேவைக்குப் பொருத்தமான பயிற்சிகளை நீங்கள் தேர்வு செய்து செய்ய முடியும். முடிந்தால், உங்களுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சிகளைப் பரிந்துரைக்க ஒரு நிபுணரிடம் அறிவுரை பெறுங்கள்.

உடற்பயிற்சி செயல்படும் விதத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள் – சரியான முறையில் செய்தால் மட்டுமே உடற்பயிற்சிகள் பலன்களைக் கொடுக்கும். எந்த உடற்பயிற்சியைச் செய்யும்போதும் அதற்கான சரியான தோரணையில் உடலை வைத்திருக்க உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, யோகா செய்கிறீர்கள் எனில், சரியான தோரணைகளைக் கற்றுக்கொள்ள, முதலில் ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சிக்கு என குறிப்பிட்ட நேரம் இல்லை – உங்களுக்குள்ள 24 மணிநேரத்தில் உடற்பயிற்சிக்கென்று தனியாக நீங்கள் நேரம் ஒதுக்கினாலும், மற்ற சமயங்களில் நீங்கள் செய்யும் பிற செயல்களும் உடற்பயிற்சியாகலாம். மின் தூக்கி (லிஃப்ட்) அல்லது நகர்படியில் (எஸ்கலேட்டர்) செல்லாமல் படியில் ஏறிச் செல்லுங்கள், சிறு தொலைவுகளுக்குச் செல்லும்போது வாகனத்தில் செல்லாமல் நடந்து செல்லுங்கள், வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக சிறிய பயிற்சிகளைச் செய்யுங்கள். இப்படியெல்லாம் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த நல்ல பழக்கத்தை தினசரி தொடரலாம்.

உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மனதின் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆரோக்கியமான உடற்பயிற்சிகளின் தொகுப்பைப் பின்பற்றுவது மன அழுத்தத்தையும் போக்கும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதே உடற்பயிற்சியைச் தொடங்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுங்கள்!