பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு. சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள்.
இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது. சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது.
ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம். பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.
ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை. உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும். ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது.
வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும். இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை.
எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம். பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.