சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான்.
ஆனால், சிறு வயதிலேயே வெட்கப்பட ஆரம்பிக்கும் அவர்கள், பெரியவர்கள் ஆகும் போது அது அவர்களுக்கு தயக்கமாக மாறிவிடுகிறது.
வீட்டிற்கு யாராவது வந்தால் ஓடிப்போய் ஒழிந்துகொள்ளுதல், வெளி இடங்களுக்கு அழைத்துச்சென்றால் யாரிடமும் சேராமல் ஒதுங்கி இருத்தல் போன்றவைகளை பெற்றோர்கள் சிறுவதிலேயே மாற்ற வேண்டும்.
மேலும் இவ்வாறு வெட்கப்படும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடனும் மற்றும் இதர மக்களிடமும் நட்பு கொள்ள விரும்ப மாட்டர்கள்.
வெட்கப்படும் குணம் குழந்தையின் கல்விச் செயல்திறனை பாதிக்கும். இந்த குணம் சக மாணவர்களுடன் அவர்கள் பழக விடாமல் தடுக்கும்.
அது மட்டுமில்லாமல் வளரும் பருவத்தில் குடும்பத்துடன் இருக்கும் தொடர்பையும் இவர்கள் குறைத்துக் கொள்வார்கள் மற்றும் உறவினர்களை அறவே மறுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
கோபப்பட்டு திட்டாதீர்கள்
உறவினர்கள் மற்றும் நன்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது வெட்கப்பட்டு ஒதுங்கும் குழந்தையை திட்டாதீர்கள். அவர்கள் மிகவும் வெட்கப்படும் குணம் உள்ளவர்கள் என்றும் பிறரிடம் கூறுவது தவறு.
மாறாக குழந்தைகள் மகிழும் வண்ணம் ஏதேனும் ஒரு காரியத்தை செய்து அவர்களை வரும் விருந்தினருடன் சகஜமாக பழகச் செய்ய வேண்டும்.
ஊக்குவித்தல்
வீட்டில் இருக்கும் போதும், பள்ளியில் இருக்கும் போதும் அண்டை வீட்டாருடனும், மற்ற மாணவர்களுடனும் பழக மற்றும் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களின் நண்பர்களை வரவழைத்து விளையாட விடுங்கள். அவர்கள் செய்யும் சேட்டைகளையும், வீட்டை அலங்கோலப்படுத்துவதையும் நாம் சகித்துக் கொண்டு சுத்தம் செய்யத்தான் வேண்டும்.
ஏனெனில் நமது குழந்தையின் வளர்ச்சியே நமக்கு மிகவும் முக்கியமாக அமைகிறது. அவர்கள் வயதில் இருக்கும் குழந்தைகளுடன் நேரம் கழிக்கும் போது பேசும் திறன், பகிர்தல் மற்றும் உறவு முறைகள் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.
குறை கூறாதீர்கள்
உங்கள் குழந்தைகளை எப்போதும் வெட்கப்படும் பிள்ளை என்று அவனிடமோ அல்லது மற்றவர்களிடமோ கூறுவது அவர்களை பாதிக்கும். இது அவர்களின் நடத்தை பற்றிய கவலையை அவர்களுக்கு தரும்.
மற்றவர்களிடம் அப்படி கூறுவதால், அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக எண்ணுவார்கள். இவ்வாறு நாம் அவர்களை வர்ணிக்கும் போது இது அவர்களின் குணங்களில் ஒன்றாகவும், அதை மாற்றவே முடியாது எனவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
வெளியில் அழைத்து செல்வது
இத்தகைய குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் அவர்களை வெளி இடங்களுக்கு அதிகமாக அழைத்து செல்ல வேண்டும்,இது, அவர்களின் கூச்சத்தை பெருமளவு குறைக்கும்.