உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான வகையில் கூடுதல் இன்பத்தை இந்த ஆணுறை வழங்கும் என்று இந்த ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
‘சூப்பர் காண்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறை, வழக்கமாக ரப்பரிலிருந்து எடுக்கப்படும் லேட்டக்ஸிலிருந்து தயாரிக்கப்படாமல், ஹைட்ரோஜெல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மேலும் ஆங்கிலத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் இதில் சேர்க்கப்படுவதால், இந்த ஆணுறை பால்வினை நோய்களுக்கு எதிராகவும் செயல்படும் என்று தாங்கள் நம்புவதாக, இந்த ஆய்வுக்குத் தலைமையேற்றுள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் மஹுவா சௌத்திரி பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியிடம் தெரிவித்தார்.
தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் இந்த நோய் எதிர்ப்பு இரசாயனங்கள் எச்ஐவி தொற்று பரவுவதை தடுக்கும் வல்லமை கொண்டது என்பது தமது ஆய்வில் தெரிய்வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
எனினும் இந்த ஆணுறைத் தயாரிப்பு இப்போது சோதனை கட்டத்திலேயே உள்ளது என்றும், அதன் விலை தற்போது ஒரு அமெரிக்க டாலர் அளவுக்கு வருகிறது எனவும் டாக்டர் சௌத்திரி தெரிவித்தார்.condom2
ஆனால் ஆரம்பகட்ட சோதனை முறையிலான தயாரிப்பு வெற்றி பெற்று, வர்த்தக ரீதியிலான தயாரிப்பு தொடங்கும்போது அதன் விலை நூற்றில் ஒரு பங்காக குறைந்து மிகவும் மலிவான விலைக்கு வரும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியனரின் அறக்கட்டளை கொடுத்த உதவி மற்றும் ஊக்கத்தின் காரணமாகவே இந்த புதிய ஆய்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்றும் பேராசிரியர் மஹுவா சௌத்திரி பிபிசியிடம் கூறினார்.