பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் ‘காதலினால் சாகாம லிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்…’ என்கிறார் பாரதி. மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும் போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல்
அல்ல… காதலுக்குக் காரணமான ஹார்மோன். ஆமாம்… அது மட்டுமல்ல… நீங்கள் யார் என்பதை உங்கள் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன. அட… இதென்ன புதுக்கதை? ஹார்மோன்கள் என்பவை உடலை இயக்கும் ஒருவித ரசாயனங்கள்தானே… அவை எப்படி நமது ஆளுமையைத் தீர்மானிக்கும் என்கிறீர்களா? அது அப்படித்தான்! அமைதி, ஆத்திரம், கோபம், குரூரம், காதல், காமம், பயம், பதற்றம்… இப்படி மனித வாழ்க்கை யில் மாறி மாறிக் கிளர்ந்தெழுகிற அத்தனை உணர்ச்சிகளின் பின்னணியிலும் இருப்பவை ஹார்மோன்களின் விளையாட்டே… காதலில் ஈடுபடும்போது செரட்டோனின் என்கிற ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். பிரகாஷ் ராஜ் படத்தில் வருகிற போது, உங்களுக்கான வரை அடையாளம் காண்கையில் மண்டைக்கு மேல் பல்பு எரிவதும், ஷங்கர் படத்தில் வருகிற மாதிரி, காதலில் விழும் போது பூக்கள் பூப்பதும், பட்டாம்பூச்சி பறப்பதும்… இந்த செரட்டோனின் செய்கிற வேலைகள்தான். காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்கும் போது, மிதக்கிற மாதிரியான ஒரு உணர்வைப் பெறுவதும் இதனால்தான்.ஆக்சிடோசின் என இன்னொரு ஹார்மோன் உண்டு. அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது. ஆனால், இது வெறும் காதலுக்கு மட்டுமின்றி, பாசத்துக்கும் காரணமானது. குறிப்பாக அம்மாவுக்கும் குழந்தைக்குமான நெருக்கத்தின் போது இது ஊற்றெடுக்கும். பிறந்த குழந்தையை அணைத்தபடி தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கும், பால் குடிக்கிற குழந்தைக்கும் இந்த ஆக்சிடோசின் அளவு கடந்து சுரக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு அம்மா எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால், ஸ்பரிசத்தினால் அதிகமாகிற ஹார்மோன் இது. அடிக்கடி தொட்டுக் கொள்ளாத, முத்தமிடாத கணவன் – மனைவியிடையே இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். தவிர பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம். அதனால்தான் அவள் எப்போதும் கணவன் என்கிற ஒரே ஆணுடன் மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவாள். பெண்ணை ஒரே ஆணுடன் உறவு கொள்ளச் செய்கிற மாதிரி, ஆணுக்கு பல காதல்களில், உறவு களில் நாட்டத்தை ஏற்படுத்தவும் டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோனே காரணம். இந்த ஹார்மோன் பெண்களுக்கும் இருக்கும். அது அளவு கூடும்போது, அவளுக்கும் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறது விஞ்ஞானம். டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடும்போது, அன்புக்கும் அரவணைப்புக்கும் காரணமான ஆக்சிடோசின் அளவை அது குறைத்து விடும். அதனால்தான் ஆண்களால் ஒரு உறவை சுலபமாக முறித்துக் கொண்டு, இன்னொன்றுக்குத் தாவ முடிகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான டோபமைன் என்கிற ஹார்மோன் சந்தோஷத்துக்குக் காரணமானது. டோப் என்றால் போதை என அர்த்தம். காதலோ, காமமோ எதிலும் ஒருவித போதை நிலைக்குக் கொண்டு போவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய இடமுண்டு. அடுத்தவரின் மேல் ஈர்ப்பையும் உண்டாக்கக் கூடியது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் என இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் இருக்கும். இந்த இரண்டும் அவர்களுக்கு மாதம் முழுக்க ஏறுவதும், இறங்குவதுமாக நிலையற்று இருக்கும். ஈஸ்ட்ரோஜென் என்பதுதான் அவர்கள் பெண்மையை உணரச் செய்வது. ஆணையும் பெண்ணையும் இணைப்பதிலிருந்து, இருவரையும் ஆழமாக நெருங்கச் செய்வது, பாலியல் ஆர்வத்தைத் தருவது, பெண்ணுக்கு முடியழகைத் தருவது, அழகான உடல் வளைவைத் தருவது என எல்லாம் ஈஸ்ட்ரோஜெனால் வருவதே. ஒரு பெண் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவளுக்கு இந்த ஹார்மோனின் அளவு குறைவாக இருக்கலாம். மாதவிலக்கான 15 நாட்களுக்குப் பிறகு புரோஜெஸ்டிரான் சுரப்பு குறையும். அந்த நாட்களில் அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. பாதித் தூக்கத்தில் விழித்துக் கொள்வதும், மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாமலும் படபடப்புடன் இருக்கவெல்லாம் இதுவே காரணம். கர்ப்பப்பை கோளாறு என்று சொல்லிக் கொண்டுதான் அந்த 25 வயதுப் பெண்ணை எங்களிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்கள். மருந்துகள் கொடுத்தோம். அடுத்த நாளே பிரச்னை சரியாகும் என நினைத்தவர்கள், மருந்து வேலை செய்யக் கூட அவகாசம் கொடுக்காமல், இன்னொரு மருத்துவமனையைத் தேடிப் போக, அங்கே அந்தப் பெண்ணுக்கு உடனடியாக கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அவசரமாக கர்ப்பப்பையையும் அகற்றிவிட்டார்கள். அப்படி அகற்றிய போது சினைப்பைகளையும் சேர்த்து எடுத்திருக்கிறார்கள். கர்ப்பப்பையை அகற்றும் போது, சினைப்பையை அகற்றக்கூடாது. அதுதான் பெண்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் சுரக்கும் இடம். சினைப்பையை அகற்றியதன் விளைவாக அந்த 25 வயதுப் பெண், 40 வயது தோற்றத்துக்கு மாறியதுடன், அதீதமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். சினைப்பைகளை அகற்றி விட்டதால், அவருக்கு மாத்திரைகள் வடிவிலான ஹார்மோன்களை கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத தால், அந்தப் பெண் தீவிர மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டு, ஒரு நாள் தற்கொலையும் செய்து கொண்டார். இப்போது புரிகிறதா… ஹார்மோன்கள் என்பவை உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தானவையும் கூட. எலிசபெத் டெய்லர் தனது 65வது வயதில் 11வது திருமணம் செய்து கொண்டார். அவர் ஈஸ்ட்ரோஜென்னை இழந்திருந்தால், அந்த வயதில் இளமையாக உணர்ந்திருக்க மாட்டார். செயற்கையாக ஈஸ்ட்ரோஜென் எடுத்துக் கொண்டார். ஓபரா வின்ஃப்ரேவுக்கும் இதே பிரச்னை. மெனோபாஸுக்கு பிறகு தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்ததாகவும், ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகே பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்ததாகவும் தனது பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறார்.கார்ட்டிசால் என்கிற ஹார்மோன், அவசர காலத்து நடவடிக்கைகளின் போது ஊற்றெடுக்கக் கூடியது. உதாரணத்துக்கு யாருடனாவது சண்டை யிடும் போது… ஓட வேண்டியிருக்கையில்… பிரச்னைகளை எதிர்கொள்வதில்… இப்படி உடனடி ஆற்றலுக்கு உதவக் கூடியது இது. வாசோப்ரெசின் என்கிற ஹார்மோனை வாஞ்சை யானது என்றே சொல்லலாம். ஆண்களுக்குக் காதல் உணர்வைக் கொடுத்து, குடும்பத்தைப் பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பையும் கொடுக்கக்கூடியது. புரோலாக்டின் என இன்னொன்று…குழந்தை பெற்ற ஒரு பெண், ஏதோ ஒரு கூட்டத்தில் தன் குழந்தை இல்லாமல் நின்று கொண்டிருப்பாள். வேறு யாருடைய குழந்தையோ பசியால் அழும். அந்த அழுகைச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் நிற்கிற அந்தத் தாய்க்கு அவளையும் அறியாமல் பால் சுரந்து, உடைகள் நனையும். இந்த ஹார்மோனின் அளவுகடந்த சுரப்பினால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாகவே செக்ஸ் ஆர்வம் குறையும். இன்னும் இப்படி அட்ரீனலின், எபிநெர்ஃபின், நார்எபிநெஃப்ரைன் என வேறு சில ஹார்மோன்களும் ஆண், பெண் உடலில் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.சரி… இப்போது எதற்கு ஹார்மோன் புராணம் என்கிறீர்களா? உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களின் பின்னணியில் இப்படி சில ஹார்மோன்களின் வேலைகள் கூட காரணமாக இருக்கலாம். உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பது, எண்ணங்களின் எழுச்சி, துணையுடனான உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிப்பது என எல்லாவற்றிலும் ஹார்மோன்களின் திருவிளையாடல் இருக்கும். பெண்ணுக்கு மீசை, தாடியை வளரச் செய்வதன் பின்னணியிலும், ஆணுக்கு அதை வளரவிடாமல் செய்வதன் பின்னணியிலும்கூட ஹார்மோன்களே நிற்கின்றன. ஹார்மோன்களின் அறிவியலைப் புரிந்து கொள்வதுகூட கணவன்-மனைவிக்கிடையிலான அன்யோன்யத்தை அதிகரிக்கும் என உணர்த்தவே இத்தனை தகவல்கள். ‘நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா/ பொம்பிளையா…?’ என துணையின் மேல் நெருப்பு வார்த்தைகளைக் கக்குவது சுலபம். அப்படி வசை பாடச் செய்த பிரச்னையின் பின் மறைந்து நிற்கிற ஹார்மோன் கோளாறுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நலம். ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடிக்கவும், சரி செய்யவும் ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… தினமும் உங்கள் துணையைக் கட்டி அணையுங்கள். முடிந்தபோதெல்லாம் முத்தமிடுங்கள். ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள். உடனே உங்கள் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்து, ஆக்சிடோசின் சுரக்கும். அது உங்கள் இருவருக்கும் இடையில் பிணைப்பைக் கூட்டும். ஆறுதலான, இதமான ஒரு உணர்வைத் தரும். காதல் கூடும். காதலினால் சாகாமலிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்.