லண்டன்: இங்கிலாந்தில் தனது காதலன் இன்னொரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது காதலி, பிளேடை எடுத்து தனது காதலனின் வாயிலிருந்து காது வரைக்கும் அறுத்து விட்டார். ரத்தம் கொட்டக் கொட்ட காதலர் மருத்துவமனைக்கு ஓடினார். தற்போது அந்தக் காதலிக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. வாய் கிழிந்து போன காதலுக்கு மருத்துவமனையில் தையல் போட்டு சிகிச்சை நடந்து வருகிறது. அந்தப் பெண்ணின் பெயர் ஜாய்லின் கன்னிங்காம். 30 வயதாகும் இவரது காதலர் பெயர் சீன் ஹார்மன். இருவரும் யார்க் நகரைச் சேர்ந்தவர்கள். காதலர்களும் கூட.
சம்பவத்தன்று தனது காதலை ஒரு பொது இடத்தில் வைத்துப் பார்த்துள்ளார் கன்னிங்காம். அப்போது ஹார்மன் இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தார். மேலும் அவருக்கு வாயோடு வாய் வைத்து முத்தமும் கொடுத்து படு “டீப்பான டிஸ்கஷனில்” இருந்துள்ளார். இதைப் பார்த்து கொந்தளித்து விட்டார் கன்னிங்காம். நேராக காதலனிடம் போன அவர், அவர்களைப் பிரித்து விட்டு கடுமையான சண்டையில் குதித்தார். வாய்ச் சண்டை முற்றவே பையில் வைத்திருந்த பிளேடை எடுத்து காதலன் வாயில் விட்டு காது வரைக்கும் சர்ரென்று இழுத்து வெட்டி விட்டார். வலியால் அலறித் துடித்த ஹார்மன் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 18 தையல்கள் போடப்பட்டது. ஆனால் வெட்டுக் காயம் நிரந்தரமாக வடுவாக இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கன்னிங்காம் கைது செய்யப்பட்டார். அவரை யார்க் கிரவுன் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். முதலில் பேசும்போது தெரியாமல் கை பட்டு அதில் இருந்த மோதிரத்தால் காயம் ஏற்பட்டு விட்டதாக கூறினார் கன்னிங்காம். ஆனால் நீதிபதி, கை பட்டு இவ்வளவு பெரிய காயம் ஏற்படும் என்று கிடுக்கிப் பிடி போடவே உண்மையை ஒத்துக் கொண்டார் கன்னிங்காம். விசாரணைக்குப் பின்னர் கன்னிங்காமுக்கு இரண்டரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.