அர்த்த என்றால் பாதி மச்ச என்றால் மீன், இந்திரா என்றால் உணர்வு. பாதியாய் உடலை வளைத்து செய்யப்படும் இந்த ஆசனத்தால் மார்புக்கூடு நன்றாக விரிவடைந்து காற்றை நுரையீரலுக்கு அனுப்புகிறது. அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து பாதிப்பினை சரி செய்கிறது.
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். மெதுவாக இடது காலை மடக்கி, இடது பாதத்தின் மீது அமரவேண்டும். அதாவது புட்டத்தை இடது பாதத்தின் மீது வையுங்கள்.
பின்னர் வலது காலை படத்தில் காட்டியது போல், இடது தொடையை தாண்டி வைக்கவும். இப்போது இடது கையினால் வலது பாதத்தை பிடித்தபடி வலப்பக்கம் திரும்புங்கள். வலது கையை பின்பக்கமாய் கொண்டு வந்து இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நிலையில் 1 நிமிடம் வரை இருக்க வேண்டும். மெதுவாய் ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இப்போது இதே போன்று வலக் காலிலும் செய்ய வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். முதுகுத் தண்டு பாதிப்படைந்தவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
பலன்கள் :
சுவாசம் நன்றாக இருக்கும். இடுப்பிற்கும், முதுகிற்கும் நெகிழ்வுத் தன்மையை தரும். கல்லீரல், சிறு நீரகத்தை செயல் புரிய வைக்கும். நுரையீரலை ஆரோக்கியப்படுத்தும்.