ஆண்குறி மொட்டின் முத்துக் குருக்கள் என்பது என்ன? (What are Pearly Penile Papules?)
ஆண்குறியின் மொட்டுப் பகுதியில் சிறு சிறு குருக்கள் தோன்றும். மருத்துவத்துறையில் இவற்றை பின்வரும் பெயர்களால் குறிப்பிடுவர்:
ஹிர்சுட்டாய்டு பாப்பில்லோமா
ஹிர்சுட்டீஸ் பாப்பில்லாரிஸ் ஜெனிட்டாலிஸ்
ஹிர்சுட்டீஸ் கொரோனே கிளாண்டிஸ்
இந்தக் குருக்களால் தீங்கு எதுவும் இல்லை. இவை சுகாதாரமின்மையால் வருபவையும் இல்லை, பால்வினை நோய்களால் இவை ஏற்படுவதில்லை. இவை புற்றுநோயின் அடையாளமல்ல. மொத்த ஆண்களில் 8 முதல் 43% பேருக்கு இந்தப் பிரச்சனை வருகிறது.
காரணங்கள் (Causes)
இதற்கு துல்லியமான காரணம் என்ன என்பது பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை நமது முன்னோர்களான மனிதக் குரங்குகளில் ஆண்குறியின் முள்ளெலும்பு நீட்சிகளின் அடையாளங்களாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். இவை பாலியல் இன்பத்தை அதிகரிப்பதற்கான அமைப்பாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
மொட்டு முனைத்தோல் அகற்றாத ஆண்களுக்கே இது அதிகம் உள்ளது.
20-40 வயதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு உண்டாகிறது.
அறிகுறிகள் (Symptoms)
ஆணுறுப்பின் கோளவடிவ மொட்டு முனைப் பரப்பில் ஏற்படும் சிறு குருக்கள் தவிர வேறு அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.
இந்த கட்டி போன்ற குருக்கள் 1 மில்லிமீட்டருக்க்ம் குறைவானது முதல் 3 மில்லிமீட்டர் வரையிலான நீளம் கொண்டிருக்கலாம், இவற்றின் நிறம் இளஞ்சிவப்பு, மஞ்சள் வெண்மையாக இருக்கலாம்.
நோய் கண்டறிதல் (Diagnosis)
இதனைக் கண்டறிய பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. ஆணுறுப்பு மொட்டின் தோற்றத்தை வைத்தே உங்கள் மருத்துவர் இதனை உறுதிப்படுத்த முடியும். சிலசமயம், அவற்றின் குறிப்பிட்ட உடற்கூறு அம்சங்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதிப்படுத்த, அப்பகுதியில் இருந்து சிறு திசு எடுத்துப் பரிசோதனை செய்யப்படலாம்.
சிகிச்சை (Treatment)
இவற்றால் எந்தக் கெடுதலும் இல்லை என்பதால் பெரும்பாலும் இவற்றுக்கு சிகிச்சை தேவையில்லை. இவற்றால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றை அகற்ற பின்வரும் வழிமுறைகளை மருத்துவர் பரிந்துரைக்கக்கூடும்:
மின்சார அறுவை சிகிச்சை: இம்முறையில் குருக்களை உலர்த்த மின்சாரம் பயன்படுத்தப்படும், பிறகு அவை உரசித் தேய்த்து அகற்றப்படும்.
கார்பன்-டை-ஆக்சைடு லேசர் ஆவியாக்கம்: உயர் ஆற்றல் கொண்ட ஒளிக்கதிர்களை செலுத்தி இவை சிதைத்து அகற்றப்படும்.
உறையவைத்தல் (கிரியோதேரப்பி): இம்முறையில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி இந்தக் குருக்கள் உறையவைக்கப்பட்டு பிறகு அகற்றப்படுகின்றன.
அறுவை சிகிச்சை: ஸ்கால்பெல் உபகரணத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு குருவும் தனித்தனியாக வெட்டி அகற்றப்படுகிறது.
கதிர்வீச்சு சிகிச்சை: கதிர்வீச்சைப் பயன்படுத்தி குருக்கள் அழிக்கப்படும்.
சிக்கல்கள் (Complications)
இந்தக் குருக்கள் உள்ளவர்களுக்கு மனக்கலக்கம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும், அவற்றைப் பற்றிய கவலை இருக்கும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அவர்களின் பாலியல் திறன் குறித்த அவர்களின் சுய மதிப்பீடு குறையக்கூடும்.
தடுத்தல் (Prevention)
இவற்றைத் தடுப்பதற்கு என்று வழிகள் எதுவும் இல்லை. ஆனாலும் ஆணுறுப்பு மொட்டு முனைத் தோலை அகற்றுவதால் இந்தப் பிரச்சனை தோன்றும் வாய்ப்பு குறையக்கூடும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டில் குருக்கள் இருந்தால், நீங்களாகவே அவற்றை அகற்ற முயல வேண்டாம். மருக்களை அகற்றப் பயன்படும் கிரீம்களைப் பயன்படுத்தி அகற்ற முயற்சிக்கவும் கூடாது. இது குறித்து உங்களுக்குக் கவலை இருந்தால், உங்கள் மருத்துவரிடம் செல்லவும்.