ஆண்குறி துளைப் பிறழ்வு என்பது என்ன? (What is hypospadias?)
இது ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிறவிப் பிரச்சனையாகும், இந்தப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு பிறக்கும்போதே, அவர்களின் சிறுநீர்க் குழாயின் திறப்பு ஆண்குறிக்கு அடியில் அமைந்திருக்கும். சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீரை வெளியேற்றப் பயன்படும் குழாய் போன்ற அமைப்பே, சிறுநீர்க் குழாய் எனப்படும். வழக்கமாக ஆண்களுக்கு சிறுநீர்க் குழாயின் திறப்பு ஆண்குறியின் முனையில் அமைந்திருக்கும்.
பிறக்கும் 250-300 குழந்தைகளில் ஒருவருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.
அறிகுறிகள் (Symptoms)
பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். பெரும்பாலும், சிறுநீர்க் குழாயின் திறப்பு ஆண்குறி முனைக்கு அடியில் காணப்படுவதே இதன் அறிகுறியாகும். சிலருக்கு, ஆண்குறியின் நடுப்பகுதி அல்லது தொடக்கப் பகுதியில் சிறுநீர்க்குழாய் திறப்பு காணப்படலாம்.
மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
சிறுநீர் வழக்கத்திற்கு மாறாக சிதறித் தெளிப்பது
சிறுநீர் கழிக்கும்போது உட்கார்ந்து கழிக்க வேண்டிய அவசியம் இருப்பது
ஆண்குறி விறைப்பு நிலையில், கீழ்நோக்கி வளைந்து காணப்படுவது
ஆண்குறி, முனைத் தோலால் மூடிக் காணப்படுவது.
காரணங்கள் (Causes)
இந்தப் பிரச்சனைக்கான சரியான காரணங்கள் என்ன என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சில சமயம் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் வேறு சிலருக்கும் ஏற்படுகிறது (மரபியல்).
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
தாய்க்கு பின்வரும் காரணிகள் இருப்பின், இந்தப் பிரச்சனை குழந்தைக்கு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது:
அதிக உடல் எடை
வயது 35க்கு மேல் இருப்பது
கருவுறுதலுக்கான சிகிச்சைகள் (புரோஜெஸ்ட்டிரோன் செலுத்துதல்)
ஹார்மோன் போன்ற சேர்மங்களான பூச்சிக்கொல்லி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் இதற்குக் காரணமாகலாம் எனக் கருதப்படுகிறது.
புகைபிடித்தல்
நோய் கண்டறிதல் (Diagnosis)
பெரும்பாலும், மருத்துவமனையில் குழந்தை பிறக்கும் போதே இப்பிரச்சனை கண்டறிந்து உறுதிப்படுத்தப்படுகிறது. உடலைப் பார்த்து ஆய்வு செய்வதன் மூலமே இதனைக் கண்டறிந்து உறுதிப்படுத்தலாம். சில சமயம், வேறு பிற பிறவிப் பிரச்சனைகள் உள்ளதா எனக் கண்டறிவதற்காக, பிற சோதனைகளும் படமெடுத்தல் சோதனைகளும் செய்யப் பரிந்துரைக்கபப்டலாம்.
சிகிச்சை (Treatment)
இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. குழந்தைக்கு 18 மாதங்கள் நிறைவடையும் முன்பே, அறுவை சிகிச்சைக்கு மூலம் இதனைச் சரிசெய்வது நல்லது என்று பல சிறுநீரக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த அறுவை சிகிச்சையில், ஆண்குறி நேராக்கப்பட்டு, முனைத் தோல் திசுக்களை எடுத்துப் பொருத்துவதன் மூலம் சிறுநீர்க்குழாய் திறப்பை சரியான இடத்தில் அமையும்படி பொருத்தப்படுகிறது. இதனைச் சரிசெய்ய பல முறை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.
தடுத்தல் (Prevention)
பெரும்பாலும் இந்தப் பிரச்சனையைத் தடுக்க முடியாது. எனினும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்தப் பிறவிக் கோளாறு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:
புகைபிடித்தலைத் தவிர்த்தல்
மது மற்றும் பிற வேதிப்பொருள்களால் (இவை நாளமில்லா சுரப்பிகளை பாதிப்பவை) பாதிக்கப்படுவதைத் தவிர்த்தல்
உடல் எடையை ஆரோக்கியமான அளவில் வைத்துக்கொள்ளுதல்
தினமும் 400-800 mcg ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ளுதல்
மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ளுதல்
சிக்கல்கள் (Complications)
இந்தப் பிரச்சனை இருந்தால், குழந்தைக்கு கழிப்பறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பதில் சிக்கல் ஏற்படலாம், பெரியவர்களான பிறகு அவர்களுக்கு விறைப்பின்மைப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்கள் குழந்தைக்கு சிறுநீர்க் குழாய் திறப்பு ஆண்குறியின் முனையில் இல்லாமல் வேறு இடத்தில் அமைந்திருந்தால் அல்லது சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள் இருப்பதுபோல் தெரிந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.