Home ஆண்கள் ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வழிகள்

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வழிகள்

69

உடலின் பிற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதைப் போலவே, ஆணுறுப்பையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆணுறுப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், துர்நாற்றம், எரிச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)

உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன.
இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம்.
உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when washing the penis)

மென்மையான சோப்பு: வாசனைப் பொருள்கள் சேர்க்கப்படாத, மென்மையான சோப்பைப் பயன்படுத்தவும். நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் பெரும்பாலானவை வாசனை தரும் வேதிப்பொருள்களையும் பிற சுத்தப்படுத்தும் வேதிப்பொருள்களையும் கொண்டவை. அவை ஆணுறுப்பைப் பாதிக்கக்கூடியவை. அவை மெல்லிய ஆணுறுப்புத் தோலில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

உங்கள் தோல் எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தால் அல்லது உங்களுக்கு சரும ஒவ்வாமைகள் இருந்தால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுக்க உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

மொட்டு முனைத்தோல் அகற்றாத ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning uncircumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். பிறகு ஆணுறுப்பின் தண்டிலும் விந்தகங்களிலும் அதைத் தேய்த்து சுத்தம் செய்யவும்.
ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாகும்.
மொட்டு முனைத்தோலை கூடுமானவரை பின்னுக்கு இழுக்கவும். இயற்கையாக எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மட்டும் இழுக்கவும். அதற்கு மேல் இழுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படிச் செய்வதால் ஆணுறுப்பு சேதமடைந்து காயம் ஏற்படலாம்.
மொட்டு முனைத்தோலுக்கு அடியில் சோப்பு போட்டு, சோப்பு போகும்படி நன்றாகக் கழுவவும். தோலுக்கு அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றும் வகையில் சோப்பு நுரையைத் தேய்த்துக் கழுவவும்.
பிறகு முனைத் தோலை வழக்கமான நிலைக்கு இழுத்து விடவும்.
மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்ட ஆணுறுப்பை சுத்தம் செய்தல் (Cleaning circumcised penis)

மென்மையான, வாசனையற்ற சோப்பு போட்டு உங்கள் கைகளில் தேய்த்து நுரைக்கச் செய்யுங்கள். ஆணுறுப்பின் தண்டு, முனைப் பகுதி மற்றும் விந்தகங்களில் நுரையைத் தேய்த்து சுத்தம்செய்யவும், பிறகு நீரால் நன்றாகக் கழுவி நுரையைப் போக்கவும்.
மொட்டு முனைத்தோல் இல்லையென்றாலும், ஆணுறுப்பின் மொட்டை சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் அங்கு வியர்வை, பாக்டீரியா, பிற அழுக்குகள் சேர்ந்திருக்கலாம்.
கழுவிய பிறகு நன்கு உலரவிடவும் (Drying after washing)

ஆணுறுப்பை சுத்தம் செய்த பிறகு மென்மையான டவலைக் கொண்டு முன் தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியையும் பிற பகுதிகளையும் விந்தகங்களையும் துடைக்கவும். ஆனால் மெதுவாகத் துடைக்க வேண்டும், அதே சமயம் கூடுமானவரை உலர்த்த வேண்டும். இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அதிக ஈரம் இருந்தால் யீஸ்ட் நோய்த்தொற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஆணுறுப்பை சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டிய பிற விஷயங்கள் (Other precautions to follow while cleaning the penis)

ஆணுறுப்பை அளவுக்கு அதிகமாகக் கழுவக்கூடாது. மிகவும் அடிக்கடிக் கழுவினால் அல்லது கடினமான அல்லது வாசனை உள்ள சோப்பைக் கொண்டு கழுவினால் ஆணுறுப்பில் வலியும் எரிச்சலும் உண்டாகலாம்.
சிலர் உடலுக்குப் போடும் பவுடரை இனப்பெருக்க உறுப்புப் பகுதியிலும் பயன்படுத்துவார்கள். ஆணுறுப்பில் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும். முன் தோலுக்கு அடிப்பகுதிக்கு பவுடர் சென்றுவிட்டால் எரிச்சலும் அசௌகரியமும் உண்டாகலாம். சிறுநீர்க் குழாயில் பவுடர் நுழைந்துவிட்டால் சிறுநீர்க்குழாய் எரிச்சல் ஏற்படலாம். சமீபத்தில், பெண்களுக்கு சினைப்பைப் புற்றுநோய் உண்டாவதற்கும் டால்கம் பவுடருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கப் பகுதிகளில் பவுடர் போட்டுவிட்டு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், பெண்ணுறுப்பில் டால்கம் பவுடர் நுழைந்து அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அந்தரங்கப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டவும். முடியின் தண்டு வியர்வையை அப்படியே சேகரித்து வைக்கும், இறந்த செல்கள் மற்றும் எண்ணெயையும் (சீபம்) தங்கவைக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இந்தப் பகுதியில் இருக்கும் ரோமங்களை வெட்டினால், நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். இப்பகுதியில் ஷேவிங் செய்வதால் ஷேவிங் ரேசரால் புண்கள் ஏற்படலாம், அரிப்பு ஏற்படலாம், ஆகவே ஷேவிங் செய்வதைவிட வெட்டுவதே நல்லது.
உடலுறவிற்கு முன்பும் பிறகும் ஆணுறுப்பைக் கழுவவும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புப் பகுதி சுத்தமாக இருக்கும். உங்களுடன் உடலுறவில் ஈடுபடும் இணையருக்கும் பாதுகாப்பானது. உடலுறவிற்குப் பிறகு, உடல் திரவங்களை ஆணுறுப்பிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமாகும். இந்தத் திரவங்கள் பாக்டீரியா வளர்ச்சிக்கு எதுவாக இருக்கலாம், குறிப்பாக அவை உலர்ந்தபிறகு பாக்டீரியாக்கள் எளிதில் பெருகலாம். டிஷூ பேப்பரை வைத்துத் துடைக்க வேண்டாம், சுத்தப்படுத்த சோப்பையும் நீரையும் பயன்படுத்தவும்.