எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?
உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயதுமுதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.
ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஓமோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது.
ஓமோன்கள் என்றால் என்ன?
ஓமோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறு பிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஓமோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.
ஓமோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஓமோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஓமோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.
காணப்படும் முதல் மாற்றம் என்ன?
பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.
விதைகள் பெருப்பதேன்?
விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய்;ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்துகளைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறுகுழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோமீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஓமோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.