உயிரினங்கள் தமது வாரிசுகளை உருவாக்கும் வழிமுறை என்று பார்த்தால் செக்ஸ், அதாவது பாலுறவு மூலம் மட்டுமே வாரிசுகளை உருவாக்கும் நடைமுறை பலவிதமான பின்னடைவுகளை, சிக்கல்களைக் கொண்டதொரு நடைமுறை.
ஏனென்றால், இந்த நடைமுறையில் தனக்கான துணை தேடுவதற்கு விலங்குகள் ஏகப்பட்ட நேரத்தை செலவழிக்கவேண்டும். பெரும் முயற்சி எடுக்கவேண்டும். இவ்வளவும் செய்தபிறகும் கூட பெற்றோரிடம் இருந்து வாரிசுக்குப் போகும் மரபணுக்கள் எல்லாமே நல்ல மரபணுக்களாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. டார்வின் சொன்ன திறமையானது மட்டுமே தொடர்ந்து தழைக்கும் என்பதற்கு இந்த நடைமுறைகள் எவையுமே ஏற்புடையதல்ல.
ஆனாலும் உலகில் இருக்கும் உயிரினங்களில் சுமார் 30 லட்சம் உயிரினங்கள் எதற்காக பாலுறவு மூலம் மட்டுமே வாரிசுகளை உருவாக்குகின்றன?
இத்தனைக்கும் உலக உயிரிகள் மத்தியில் வேறுவகையான வாரிசு உருவாக்க வழிகளும் இருக்கவே செய்கின்றன. பெண்ணுயிரிகள் மட்டுமே தங்களுக்குள் இணைந்து இதைவிட அதிகமான வாரிசுகளை உருவாக்க இயலும். அதற்கும் வழி இருக்கிறது.
அப்படியிருந்தும், வாரிசு உருவாக்கத்திற்கு வெறும் விந்தணுக்களை மட்டுமே அளிக்கும் ஆணினம் எதற்காக இந்த உலகில் இவ்வளவு நாள் தொடர்ந்தும் இருக்கிறது?
இதற்கான விடையை தாங்கள் கண்டறிந்திருப்பதாக Nature விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிட்டிருக்கும் ஒரு ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்திருக்கிறது. அவர்களின் ஆய்வு முடிவுகளின்படி, பாலினத்தேர்வு (sex selection) மூலம் நிகழும் இயற்கையான பரிணாம சாதக அம்சங்கள் காரணமாகவே ஆணினம் இன்றுவரை தொடர்ந்தும் இருந்து வருகிறது என்பதே அவர்கள் கண்டறிந்து கூறும் காரணம்.
வண்டினங்களின் ஆராய்ச்சி
பரிணாம வளர்ச்சியில் பாலினத்தேர்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கணக்கிடுவதற்கு மாவில் காணப்படும் பல்வேறு வகையான வண்டுகளை சுமார் பத்தாண்டுகாலம் ஆய்வுக்கூடத்தில் வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
இதில் ஒவ்வொரு வண்டினத்திலும் ஆண் வண்டுகளின் எண்ணிக்கைக்கும் பெண் வண்டுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்பட்டது. சில வண்டினங்களில் ஆண் பெண் விகிதாசாரம் ஏறக்குறைய சம அளவில் இருந்தது. வேறு சில வண்டினங்களில் ஆண் பெண் விகிதாசாரத்துக்கு இடையில் பெரும் வேறுபாடு காணப்பட்டது.
அதனைப்பயன்படுத்தி, இந்த வண்டினங்களில் ஆணினம் தொடர்ந்தும் உருவாவதற்கு ஆணினத்தில் நிலவும் போட்டி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை மட்டும் கணக்கிடுவற்கு ஆய்வாளர்களால் முடிந்தது.
ஏழு ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வில், 50 தலைமுறை வண்டுகளை இந்த ஆய்வாளர்கள் தொடர்ந்தும் கண்காணித்தனர்.
முடிவில், எந்த வண்டினத்தில் பெண் வண்டுக்காக ஆண் வண்டுகள் அதிகம் போட்டிபோட்டனவோ, அந்த வண்டினத்தில் இருக்கும் ஆண் வண்டுகள் ஆரோக்கியம் மிக்கதாகவும், நோய் எதிர்ப்பாற்றல் மிக்கவையாகவும் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு மாறாக, பாலினத்தேர்வுக்கு கடுமையாக போட்டிபோடத் தேவையில்லை என்கிற நிலைமை காணப்பட்ட வண்டினம் அதன் பத்தாவது தலைமுறையிலேயே வாரிசுகளை உருவாக்காமல் முற்றாக பட்டுப்போயின.
பாலினத்தேர்வின் பயன்பாடுகள்
இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்தியவர் பிரிட்டனின் ஈஸ்ட் ஏஞ்சலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம சூழலியல் பேராசிரியர் மேட் கேஜ்.
“யார் வாரிசுகளை உருவாக்குகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் வலிமைவாய்ந்த பரிணாம சக்தியே பாலினத்தேர்வு”, என்று அவர் பிபிசியிடம் விளக்கினார்.
வாரிசு உருவாக்கத்திற்காக ஆண்கள் மத்தியில் நிலவும் போட்டியானது மிக முக்கியமானதொரு பலனைத்தருகிறது. இதன் மூலம், நல்ல மரபணுக்களின் பரவலை அது ஊக்குவிக்கிறது. மோசமான மரபணுக்களின் தொடர்ச்சியை அது தடுக்கப்பார்க்கிறது. இதன் விளைவாக ஒரு விலங்கினத்தின் மரபணுக்களின் ஆரோக்கியம் தொடர்ந்தும் மேம்படுகிறது என்கிறார் அவர்.
தனக்கான இணையை கவரும் போராட்டத்தில் ஆணினம் தன்னையொத்த ஆணினத்துடன் தொடர்ந்து மோதி வெல்லவேண்டும். இந்த போட்டியில் வெல்லும் திறமை வாய்ந்த ஆண் விலங்கு, வேறு பலவற்றிலும் திறமை மிக்கதாக இருக்கிறது.
இதன்மூலம், பாலினத்தேர்வு என்பது முக்கியமான, திறமையானதொரு இயற்கை வடிகட்டியாக செயற்பட்டு, ஒரு விலங்கினத்தின் மரபணுக்களின் ஆரோக்கியத்தை பேணுவதோடு, அதைத் தொடர்ந்து மேம்படுத்தவும் செய்கிறது.
கலவிக்கான சடங்குகளில் ஈடுபடுவது, பல்வேறு வண்ணங்களைக்காட்டி பெண் விலங்கைக் கவர முயல்வது போன்ற பல்வேறு வகையான செயல்களை ஆணினம் மேற்கொள்வதை இயற்கையில் பல விலங்குகள் மத்தியில் பார்க்க முடியும்.
இதுபோன்ற செயல்களை ஆண் விலங்குகள் செய்வதற்கான முக்கிய காரணம், அவை தம் இனம் அழியாமல் காப்பதற்கான முக்கிய முயற்சியே என்பதை இந்த ஆய்வு புரியவைத்திருக்கிறது.