குழந்தைகளை வளர்ப்பது என்பது பெண்களின் வேலையாக இருந்தது. இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. பெரும்பாலான பெண்கள் பணிக்கு செல்வதால், ஆண்களும் அந்த கடமையை செய்ய வேண்டியதாகிவிட்டது. அப்பாவைவிட அம்மாவிடம்தான் குழந்தைகள் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை.
அப்பாக்கள் இனி தப்பிக்க முடியாது
தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும் சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்யவேண்டியதாகிவிட்டது. ‘குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்கள் ஈடுபடவேண்டும்’ என்று மேலைநாடுகள் வற்புறுத்துகின்றன. அமெரிக்காவில் ஆண்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி பெறும் ஆண்கள், மனைவிக்கு உதவுகிறார்கள்.
குழந்தைகளை பராமரித்து மனைவி தனது வேலைகளை பார்க்கவும், ஓய்வெடுக்கவும் அனுமதிக்கிறார்கள். வேலைக்கு போகும் பெண்களுக்கு ஆண்கள் வழங்கும் அந்த உதவி அவசியமானதாகவே இருக்கிறது. அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும்– அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறையளித்து விடுகிறார்கள்.
அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும் அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைந்துகொள்கின்றன. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்துகொள்கின்றன.
பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும். குழந்தைகளின் தேவை என்ன என்பது எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாட தேவையான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட மேலாக, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம்.
இத்தனையும் கிடைத்தால் குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும். குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகிப் பழகித்தான் அழுகையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்று வலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு குழந்தைகளை பராமரிக்க பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள், அப்பாக்களை புகழ்ந்து தள்ளுகின்றன. ‘‘குழந்தைகளை புரிந்துகொண்டு செயல்படும் திறன் அப்பாக்களுக்கு அதிகம் இருக்கிறது. அதனால் குழந்தைகள் அப்பாக்களிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றன. அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாகிவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முகமாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்கவைப்பார்கள்’’ என்றெல்லாம் அந்த நிறுவனங்கள் புகழ்கின்றன. போகிற போக்கை பார்த்தால், இனி அப்பாக்கள் கூடுதலான இந்த வேலையில் இருந்து தப்பமுடியாதுபோல்தான் தெரிகிறது.