Home பாலியல் அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

17

பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.

பெற்ற பிள்ளைகள் என்பதாலேயே அவர்களது ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்தரங்கத்தில் தலையிடுவது தவறானது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் தருவதில் தவறில்லை.

அதே நேரத்தில் அவர்களது நண்பர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் அவசியம். பருவ வயதில் இருக்கிற தன் மகளோ, மகனோ, அதே வயதுள்ள எதிர்பாலினத்தாரிடம் சாதாரணமாகப் பேசுவதையோ, சிரிப்பதையோ பார்த்தால் கூட பலவித பயங்கரக் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி, பிள்ளைகளைப் பற்றிய தவறான கணிப்புகளை வளர்த்து விடுவார்கள்.

சில பெற்றோர் பார்க்கிற, கேள்விப்படுகிற எல்லாவற்றையும் சந்தேகப்படுவார்கள். தம் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதால் உண்டான குற்ற உணர்வை மழுங்கடிக்கிற வகையில், பல பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கி, தம் தவறை எளிதாக மறக்கடிக்கச் செய்வார்கள்.

குழந்தைகள், அதிலும் டீன்ஏஜ் பிள்ளைகள் ஏங்குவது உயிரற்ற பொருட்களுக்காக அல்ல. அதிக விலையுள்ள செல்போனோ, கேட்கும்போதெல்லாம் மறுக்காமல் கொடுக்கிற பாக்கெட் மணியோ அவர்களது ஏக்கம் தீர்ப்பதில்லை.

அவர்கள் ஏங்குவதெல்லாம் அன்புக்கு. டீன் ஏஜில் பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவழிக்க வேண்டியது மிக முக்கியம். அவர்களது உலகத்தில் தங்களையும் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள காதல் கேட்குதா?’ என மகளிடம் கொந்தளிக்காமல், அவள் போக்கிலேயே பேச்சைத் தொடர வேண்டும்.

‘அப்படியா… இந்த வயசுல அப்படித்தான் இருக்கும். அதை சீரியஸா எடுத்துக்கக் கூடாது. உன் வாழ்க்கையில இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கும். இவனைவிட பெட்டரான எத்தனையோ பேரை நீ கிராஸ் பண்ணுவே… இன்னும் உனக்கு வாலிப வயசு நிறைய இருக்கு’ எனப் புரிய வைத்து, ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல் கலந்து விளக்கலாம்.

பெற்றோர் செய்யவே கூடாத விஷயம் என்ன தெரியுமா? பிள்ளைகளை சந்தேகிப்பது. அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது மொபைலை சோதிப்பதைப் போன்ற அத்துமீறல் வேறு எதுவும் இருக்காது. ‘நம்ம குழந்தை தப்பு பண்ணாது’ என நம்பித்தான் ஆக வேண்டும். ஒருவேளை பெற்றோரின் சந்தேகம் தவறாக இருந்தால், அது அந்தக் குழந்தையைப் பெரிதும் பாதிக்கும்.

பல பெற்றோர் கண்டிப்பு, கறார் என்கிற பெயரில் குழந்தைகளின் உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர, அவர்களது மனதைப் பாதுகாக்கத் தவறி விடுகிறார்கள்.

வீட்டுக்குள் எந்த அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கித் தவிக்கிறதோ, அது கிடைக்காத பட்சத்தில், கிடைக்கிற இடத்தை நோக்கிக் கூடு பாயும். பிள்ளைகளின் உடலைப் பூட்டி வைப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க முடியாது. மனதை உங்களுக்குப் பக்கத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், உங்கள் மகள் இப்போதில்லை, எப்போதுமே உங்கள் கைகளைவிட்டுப் போக மாட்டாள்.