Home பாலியல் அந்த நாளும் இனிய நாளே…

அந்த நாளும் இனிய நாளே…

24

அந்த மூன்று நாட்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று தானே மாதா மாதம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் உங்கள் கவனக்குறைவும், அந்த நாட்களில் உங்களிடமிருந்து வீசும் வாடையும் நீங்கள் சொல்லாமலே மற்றவர்களுக்கு அந்த நாட்களைத் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? கேட்கவே தர்மசங்கடமாக இருக்கிறதா? இதோ இந்த யோசனைகள் உங்களுக்குத் தான்….

மற்ற நாட்களில் நீங்கள் எப்படியோ? ஆனால் மாதவிலக்கு நாட்களில் அதிக பட்ச சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இரண்டு வேளைக் குளியல், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றுதல் போன்றவை உங்களைப் புத்துணர்வோடு வைக்கும்.

மாதவிலக்கு நாட்களில் உபயோகிக்கிற நாப்கின்களில்தான் எத்தனை எத்தனை வகை? சிறியது, பெரியது, பக்கவாட்டில் அகலமானது, குண்டான பெண்களுக்கானது என ஏகப்பட்ட ரகங்கள்…. உங்களுடைய மாதவிலக்கு சுழற்சியையும், மாதவிலக்கின் போதான இரத்தப் போக்கின் அளவையும் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிற விஷயம் இது. உதிரப் போக்கானது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். நாப்கின்கள் உபயோகிக்க எளிதானவை. கசக்கித் துவைத்து, காய வைக்க வேண்டிய அறுவறுப்பான வேலைகள் இல்லாதவை. எனவே உங்கள் வசதிக்கேற்ற அளவில் நல்ல நாப்கின்களை அணிவதை பூப்பெய்தும் நாள் முதலே பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து டாம்பூன் எனப்படும் உறிஞ்சு குழல். இதைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. நீச்சல் மாதிரியான வேலைகளின் போதும் அணிய வசதியானது என்பதால் பல பெண்கள் டாம்பூன்களை விரும்புகின்றனர். பிறப்புறுப்பினுள் நுழைத்துக் கொள்ள வேண்டியதால், திருமணமாகாத பெண்களுக்கு இது உகந்ததல்ல என்றும் சொல்லப்படுகிறது. மற்றபடி இதை உபயோகிப்பது சிரமம் என்பதெல்லாம் சும்மா.

நாப்கினோ, டாம்பூனோ நீங்கள் எதை அணிகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உதிரப் போக்கு அதிகமிருக்கிறதோ, இல்லையோ, நான்கைந்து மணி நேரத்துக்கொரு முறை அவற்றை மாற்ற வேண்டியது அவசியம். இரத்தப் போக்கு இல்லாவிட்டாலும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, கசிவு போன்றவற்றின் விளைவாக அவற்றிலிருந்து ஒருவித வாடை வீசும்.
உபயோகித்த நாப்கின்களை எக்காரணம் கொண்டும் கழிவறைக்குள் ப்பிளஷ் செய்யாதீர்கள்.

அடுத்து மாதவிலக்கு நாட்களின் போதான உள்ளாடை. பேண்டீஸ் அணிந்தே பழக்கமில்லாத பெண்கள்கூட மாதவிலக்கு நாட்களில் மட்டும் அணிவதுண்டு. அதுவும் மாதவிலக்கு நாட்களுக்கென்றே கிழிந்து போன, சாயம் போன, பழைய பேண்டீஸ்களை பத்திரப் படுத்தி வைக்கும் பெண்களும் உண்டு. இது மிகவும் தவறு. மாதவிலக்கு நாட்களில் அணிவதற்கென்றே, இப்போது பிரத்யேக பேண்டீஸ்கள் உள்ளன. உடைகளில் கறை படிவதையும் இவை தவிர்க்கும்.

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் வந்து, உங்கள் உள்ளாடை மற்றும் உடையைக் கறைப் படுத்தி உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டதா? எப்போதும் கைவசம் கொஞ்சம் உப்பு வைத்துக் கொள்ளுங்கள். கறை பட்ட இடத்தை உப்பும், குளிர்ந்த தண்ணீரும் கலந்து அலசிட, உடனடியாக மறையும். வீட்டுக்கு வந்த பிறகு டிடெர்ஜென்ட் போட்டு அலசிக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது உபயோகிக்கப் படுகிற உள்ளாடைகளை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசிக் காய வைக்க வேண்டியது முக்கியம்.

மாதவிலக்கின் போதான உடல் நாற்றம் பல பெண்களின் பிரச்சினை. அவர்களை விட அது மற்றவர்களை அதிகம் முகம் சுளிக்க வைப்பதுதான் வேடிக்கை. மாதவிலக்கின் போதான ஹார்மோன் மாற்றங்களால்தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் வருகிறது. கர்ப்பப் பையின் உட்புறத் திசுக்கள் இரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுவதன் விளைவான நாற்றம் இது.

இதைத் தவிர்க்க மாதவிடாய் நாட்களில் காட்டன் உள்ளாடையையே அணிய வேண்டும். காற்றோட்டமானதாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போதும் முன் பக்கத்திலிருந்து, பின் பக்கம் வரை பிறப்புறுப்பு நன்றாக சுத்தப் படுத்தப்பட வேண்டும். நாற்றத்தை மறைக்க, அதிக வாசனையுள்ள சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அவையெல்லாம் பிறப்புறுப்பின் மிக மென்மையான திசுக்களை அழற்சிக்குள்ளாக்கும்.

மாதவிடாய் நாட்களில் உபயோகிக்க வென்றே பெமினைன் வாஷ் கிடைக்கிறது. அதையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.