நாம் புதிய உறவுகளை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது தான் பெரும்பாடாக இருக்கும். சொந்த-பந்தம், கணவன்-மனைவி, நண்பர்கள் என்று இன்றைய காலகட்டத்தில், நீண்ட கால உறவு என்பது வெறும் கானல் நீர்தான். இத்தகைய உறவுகளை நீட்டித்துக் கொண்டிருப்பது அவ்வளவு எளிதல்ல.
ஏகப்பட்ட தியாகங்கள், எதற்கும் வளைந்து கொடுக்கும் பண்புகள், கடுமையான முயற்சிகள் ஆகியவை மூலமாகத் தான் நல்ல தரமான உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். சில சமயம் எவ்வளவோ முயற்சிகளையும், தியாகங்களையும் கொட்டித் தீர்த்தாலும் அவை தோல்வியில் தான் சென்று முடியும். அதற்குப் பின் அந்த இருவருக்கும் இடையிலான ஒரு உறவை நினைத்துப் பார்க்கவும் முடியாது.
இப்படி உறவுகள் அடியோடு முறிந்து போய் விடுவதற்கான 5 அறிகுறிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பரஸ்பர மரியாதை குறைதல்
ஒரு நல்ல உறவுக்குத் தேவை பரஸ்பர மரியாதை தான். காதலோ அல்லது நட்போ, ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு நடந்து கொள்வது அவசியம். அப்படியின்றி, ஒருவரையொருவர் அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தாலோ, புண்படுத்திக் கொண்டிருந்தாலோ அந்த உறவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வந்துவிடும் என்பதை மட்டும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.
எப்போதும் எதிரெதிர் மனநிலை
இரண்டு பார்ட்னர்களும் ஒரேவிதமான மனநிலையுடன் எப்போதும் இருந்தால் தான் அது நல்ல, நீண்டகால உறவுக்கான அடித்தளமாக இருக்க முடியும். இந்த அடிப்படை அம்சம் கூட இல்லாத வாழ்க்கை, எந்த நிமிடத்திலும் துண்டிக்கப்படலாம்.
தொடர் விவாதங்கள்
எல்லா உறவுகளிலும் சில ஏற்றத் தாழ்வுகள் இருப்பது சகஜம் தான். அந்த இருவருக்கிடையில் அடிக்கடி விவாதங்கள் ஏற்பட்டாலும், அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் இதுப்போன்ற விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால், அவர்களுடைய உறவில் ஏற்படும் விரிசலும் அதிகரித்துக் கொண்டு தான் செல்லும்.
நேரம் ஒதுக்குவதில் அலட்சியம்
சொந்தமோ, காதலோ, நட்போ… எந்த உறவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவர் திளைக்கும் போது முறையே அந்த மகிழ்வையும், சோகத்தையும் பகிர்ந்து கொள்ள அடுத்தவர் நேரத்தை ஒதுக்கவில்லையென்றால், அந்த உறவுக்கு விரைவில் ‘மூடுவிழா’ தான் நடக்கும்.
ஆர்வம் இழத்தல்
ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருடைய பார்ட்னர் அந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தால் அவருக்கு அந்த உறவு போரடித்து விட்டது என்று தான் அர்த்தம். இருவரும் இதுகுறித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் அந்த உறவுக்கு உடனே குட்-பை தான்!