இரகசியகேள்வி-பதில்:டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் எழுதுகிறேன். எனக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். நான் ஒரே மகள். ரொம்பவும் வசதியான குடும்பம். வாழ்க்கையில் ஆசைப்படுகிற எல்லாம் நடந்திருக்கிறது.
உறவிலேயே திருமணம் செய்து வைத்தார் அப்பா. திருமணமாகி, எங்களுக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக 2 குழந்தைகள். என் கணவருக்கு 2 சகோதரர்கள். கணவர் உள்பட எல்லோரையும் மாமா என்றுதான் கூப்பிடுவேன். மூத்த சகோதரர் தானுண்டு, தன் வேலையுண்டு என இருப்பார். இளையவர் மிக ஜாலியான டைப். எப்போதும் பாட்டும், கேலியும், கிண்டலுமாக என்னுடன் அரட்டை அடிப்பார்.
எனக்குப் பிடித்த பாடலை அனுப்புவது, பிடித்த ஐஸ்கிரீமை தேடி வாங்கி வந்து தருவது என என்னிடம் ரொம்ப அன்பாக இருப்பார். நான் நன்றாகப் பாடுவேன். முறைப்படி சங்கீதம் கற்றவள். என்னுடன் சேர்ந்து அவரும் பாடுவார். நன்றாக துணி தைப்பேன். தையலுக்கான பொருள்களைத் தேடி வாங்கி வந்து தருவார்.
அவருக்கும் திருமணமாகி விட்டது. என் கணவர் மிக மிக நல்லவர் என்றாலும், என்னையும் அறியாமல் அவரது இளைய சகோதரரின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. ஒரு நாள் என் கணவர் ஊரில் இல்லை. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அக்கம் பக்கத்திலும் யாருமில்லை. வீட்டுக்கு வந்த என் கணவரின் சகோதரர், வேலைக்காரம்மாவை ஏதோ வாங்கி வரச் சொல்லிக் கடைக்கு அனுப்பினார்.
அப்படியொரு சந்தர்ப்பத்தை நானே ஏற்படுத்தித் தந்தேனா, அது தானாக அமைந்ததா எனத் தெரியவில்லை. இருவரும் தவறு செய்து விட்டோம். முதல் முறை திட்டமிடாமல் நடந்த அந்த விஷயம், அதையடுத்து 2 முறைகள் நடந்தது. என் கணவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்ற உணர்வு உறுத்துகிறது. என் பெயரில் நிலம் வாங்கி வைத்திருக்கிறார். எனக்கென ஒரு கார் வாங்கிக் கொடுத்து, டிரைவரை வேலைக்கு வைத்திருக்கிறார்.
என் மீது அவ்வளவு அன்பு கொண்டவருக்குத் துரோகம் செய்து விட்டேனே எனத் துடிக்கிறேன். என்னால் நடந்ததை மறக்க முடியவில்லை. கணவரின் சகோதரரையும் மறக்க முடியவில்லை. தற்கொலைக்கு முயன்று, என் தோழியால் காப்பாற்றப்பட்டேன். இத்தனைக்குப் பிறகும் நான் எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்? பண்டிகை, குடும்ப விசேஷங்களில் நான் என் கணவரின் சகோதரர் முகத்தில் எப்படி முழிப்பேன்? இதிலிருந்து நான் எப்படி மீள்வது? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்புச் சகோதரி, அன்பான கணவர், அழகான பிள்ளைகள் என நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. உங்களுக்கு நடந்த இந்த விஷயம், நிறைய பெண்களின் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அண்ணன், தம்பியாகவே இருந்தாலும், எந்த ஆணிடமும் பெண்கள் இடைவெளி வைத்துப் பழக வேண்டியது முக்கியம். உணர்ச்சி வேகத்தில் தவறு செய்து விட்டு, பிறகு வருத்தப்படுவதில் பலனில்லை. பிறகு எதற்கு நமக்கெல்லாம் ஆறாவது அறிவு?
சரி… நடந்தது நடந்து விட்டது. நீங்கள் நினைக்கிற மாதிரி தற்கொலை இந்தப் பிரச்னைக்கு மட்டுமில்லை, எந்தப் பிரச்னைக்குமே தீர்வாகாது.
முதல் வேலையாக, உங்கள் கணவரின் சகோதரருடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் கணவரே அழைத்துப் பேசச் சொன்னாலும், ஏதோ வேலையில் இருக்கிற மாதிரி காட்டிக் கொள்ளுங்கள். விசேஷ தினங்களில் அவரை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், நடந்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவர் இருக்கும் திசையைவிட்டு விலகி, வேறு இடத்தில், வேறு நபர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்.
நீங்கள் அவரைத் தவிர்க்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்துங்கள். பாட்டு கற்றவர் என்கிறீர்கள். பணத்துக்குப் பிரச்னை இல்லை என்கிறீர்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சங்கீதம் கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள். இலவசம் என்பதால் நிறைய பேர் வருவார்கள். உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. அடுத்து தையல் தெரியும் என்கிறீர்கள்.
உடைகளை டிசைன் செய்வது, தைத்துக் கொடுப்பது போன்றவற்றையும் தொடங்கலாம். அதற்காக சின்னதாக ஒரு கடை வைக்கலாம். இந்த இரண்டிலும் ஈடுபட்டாலே நீங்கள் பிசியாவீர்கள். அனாவசிய சிந்தனைகளை அசைபோட நேரமோ, தேவையோ இருக்காது. தவறு செய்வது சகஜம்தான். ஆனால், அதிலிருந்து வெளியே வர வேண்டிய மனதும், நம்பிக்கையும் முக்கியம். இனிமேலாவது உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை வைத்துக் கொண்டு, அந்நிய ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பாருங்கள்.
————————————————————
எனக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எங்களுடையது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம். எனக்கு 14 வயது இருக்கும் போது, பக்கத்து வீட்டு இளைஞனுடன் காதல் வந்தது. அந்த வயதில் காதலைப் பற்றியோ, எதிர்கால வாழ்க்கையைப் பற்றியோ பெரிய பயமோ, தெளிவோ இல்லை. வயதுக் கோளாறால் வந்த விஷயம். அந்த இளைஞனுடன் எனக்கு அப்போது உடல் ரீதியான தொடர்பும் இருந்தது.
அது தவறு என்பது கூட அந்த வயதில் எனக்குத் தெரியவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளத்தானே போகிறோம் என்று சொல்லிச் சொல்லியே அவன் என்னைப் பலமுறை உபயோகித்திருக்கிறான். நானும் அதை நம்பினேன். ஒரு கட்டத்தில் திடீரென அவர்களது குடும்பமே வேறு ஊருக்கு மாற்றலாகிப்போய் விட்டது. எதுவுமே நடக்காதது போல அவனும் சென்று விட்டான். அதன் பிறகு எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்த வயதில் நடந்த விஷயங்களை வீட்டில் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்கிற பயத்தில் நானும் அப்படியே மறைத்து விட்டேன். காலம் ஓடி விட்டது. படிப்பெல்லாம் முடித்ததும் எனக்கு வீட்டில் கல்யாணம் செய்து வைத்தார்கள். கணவர் மிகவும் நல்லவர். அளவுகடந்த பக்திமான். பூஜை, விரதம் என எப்போதும் ஆன்மிக சிந்தனையிலேயே இருப்பார். பாவ, புண்ணியங்களுக்குப் பயப்படுவார்.
அப்படிப் பல விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, தவறு செய்தவர்களை கடவுள் தண்டிக்காமல் விட மாட்டார் என்று அடிக்கடி என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். அன்றிலிருந்து என் நிம்மதியெல்லாம் போனது. கணவர் காலையில் பூஜை செய்ய ஆரம்பித்தாலே எனக்குள் உதறல் ஏற்படுகிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. இவ்வளவு ஏன்..? நாங்கள் அந்தரங்கமாக இருக்கும் நேரத்தில்கூட எனக்குக் குற்ற உணர்வு வாட்டுகிறது. அவருக்கு உண்மையாக இல்லையோ என்கிற உறுத்தல் அதிகரிக்கிறது.
சிறு வயதில் எனக்கு நடந்த அந்த விஷயம் என்னையும், அந்த இளைஞனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என் நெருங்கிய தோழிகளிடம்கூட பகிர்ந்து கொண்டதில்லை. அதனால் இத்தனை வருடங்கள் கழித்து அதைப் பற்றி யாரிடமாவது பேசவே கூச்சமாகவும், பயமாகவும் இருக்கிறது. நாளுக்கு நாள் எனக்குள் அதிகரிக்கிற குற்ற உணர்விலிருந்து மீள என்னதான் வழி? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்புத் தோழி, தவறு செய்யாத மனிதர்களே உலகத்தில் இல்லை. தவறு செய்கிற எல்லோரையும் கடவுள் தண்டிப்பார் என்றால், இந்த உலகத்தில் யாருமே நிம்மதியாக வாழ முடியாது. கடந்த காலத்தைப் பற்றி தயவு செய்து நினைக்காதீர்கள். அறியாத வயதில், புரியாமல் ஏதோ தவறு செய்து விட்டீர்கள். அதன் பிறகு நல்லபடியாகத் திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கும் தாயாகி, 10 வருடங்களைக் கடத்தி விட்டீர்கள்.
இப்போது போய், பழைய விஷயங்களை நினைத்துக் குற்ற உணர்வில் புழுங்குவதில் அர்த்தமில்லை. தவறு செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என உங்கள் கணவர் பொதுவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை நீங்கள் உங்கள் கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திப் பார்த்து, அனாவசிய மன உளைச்சலில் தவிக்கிறீர்கள். உங்கள் குழந்தையே ஏதோ ஒரு தவறு செய்கிறது என வைத்துக் கொள்ளுங்கள்.
பிஞ்சு வயதில் அது செய்கிற தவறை நீங்கள் பெரிதுப்படுத்துவீர்களா? சிரித்தபடி மன்னித்து விட மாட்டீர்களா? சாதாரண மனிதர்களாகிய நமக்கே மன்னிக்கிற மனோபாவம் இருக்கும் போது, படைத்த கடவுளுக்கு இருக்காதா? இறையன்பு எல்லாவற்றையும் மன்னித்து ஏற்கும். கவலை வேண்டாம். நடந்த விஷயங்களை உங்கள் கணவரிடம் சொல்ல வேண்டாம். அதனால் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு வந்து விடாது. இத்தனை காலம் சொல்லாமல் வாழ்ந்த மாதிரியே, மீதி காலத்தையும் வாழப் பழகுங்கள்.
நீங்கள் அதீத படபடப்பில் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கணவருடனான அந்தரங்க உறவு நேரத்தில் அவரை மட்டுமே நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயங்களை மட்டுமே நினைத்துக் கொள்ளுங்கள். நல்ல சிந்தனைகள் அதிகரிக்க, அதிகரிக்க தேவையற்ற சிந்தனைகள் தானாக அழிக்கப்படும்.
உங்களுக்கு பெண் குழந்தை என்கிறீர்கள். அவளை சரியாக வளர்ப்பதில் கவனம் கொள்ளுங்கள். எது சரியான ஸ்பரிசம், எது கெட்ட ஸ்பரிசம் என அவளுக்கு வித்யாசம் சொல்லிக் கொடுங்கள். ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். யாரிடமும் ஏமாறாமல் இருக்க வழிகளைக் காட்டுங்கள். தேவைப்பட்டால் மனநல மருத்துவரை அல்லது ஆலோசகரை சந்தித்து உங்கள் மன உளைச்சலுக்கு கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சரியாக வாழ்த்துகள்.