உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சி நமக்கு வியப்பளிக்கிறது. சில வருடங்களுக்கு முன் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அனைத்தும் தற்போது சாத்தியமாகி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள், உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரருக்கு, ஆப்கானிஸ்தான் போரின் போது ஆணுறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பு மற்றும் விதைப்பை (scrotum) ஆகியவற்றை, 9 பிளாஸ்டிக் சர்ஜன்கள், 2 நீயுரோ சர்ஜன்கள் என மொத்தம் 11 மருத்துவர்கள், சுமார் 14 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ராணுவ வீரரின் உடலில் பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் ஆன்ட்ரூ லீ பேசுகையில்:
‘இந்த அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி, வழக்கம் போல் சிறுநீர் கழிக்க முடிவதோடு, உடலுறவிலும் ஈடுபட முடியும்’ என்றார்.
சிகிச்சைக்குப் பின் நோயாளி பேசுகையில், ‘ போரின் போது எதிர்பாராத விதமாகக் காயம் ஏற்பட்டது.
ஆனால், அது சாதாரண ஒன்று அல்ல. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது தான் நிம்மதியாக உள்ளது, மிகவும் தன்னம்பிக்கையாக உள்ளது’ என்றார் உணர்ச்சிவசமாக.
தற்போது அவரது உடல் நிலை சீராகிவிட்டதால், அவர் விரைவில் வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.