முதல் 3 மாதங்களின் போது போலிக் அசிட்டை மட்டும் தவறாமல் ஒவ்வொரு நாளும் எடுங்கள். (மூளைக் குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதனைத் தடுப்பதற்கு இது மிகவும் அவசியமானதொன்றாகும்) எக்ஸ்றே எடுக்க வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் ஏனைய மருந்துகளை எடுக்க வேண்டாம். வாந்தி எடுத்தல் சாதாரண நிகழ்வாக இருந்தாலும் தாங்கமுடியாத வாந்தியாக இருப்பின் வைத்தியரை அணுகவும்.
அடுத்த 3-6 மாதங்களின் போது அயன், விற்றமின் சி, கல்சியம் ஆகிய குளிசைகளை எடுப்பதுடன் போலிக்கசிற்ரைத்தொடர்ந்து உட்கொள்ளவும். கிழமைக்கு முன்னர் நுண்ணாய்தல் (scan) பண்ண வேண்டும். ஏற்புத் தடுப்பு மருந்து ஊசி குடும்பநல மாது வைத்தியரின்ஆலோசனைகளுடன் போடப்படல் வேண்டும்.
இறுதி 6-9 மாதங்களின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விடயங்களைக் கவனத்திற்கொள்ளவும். கர்ப்பிணிக் காலத்தில் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய விடயங்கள் தாங்க முடியாத வயிற்றுவலி இருத்தல். வயிற்றுவலி இருந்தாலோ இல்லாவிட்டாலோ யோனிவழியில் இருந்து இரத்தம் போதல். யோனி வழியில் இருந்து நீர் போதல் தலையிடி, தலைச் சுற்று, கண்பார்வை மங்குதல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிக்கல், முகமும் கை காலும் வீங்குதல், வாந்தி எடுத்தல். மருந்து எடுத்த பின்னரும் காய்ச்சல் மூன்று நாட்களைவிடக் கூடுதலாக இருத்தல். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் துடிப்புக் குறைதல் அல்லது இல்லாதிருத்தல் தயவுசெய்து கீழே தரப்பட்ட விடயங்களை வாசித்து விளங்கிக்கொள்ள முயற்சிப்பது சாலச் சிறந்ததாகும்.
நீங்கள் கருத்தரித்திருப்பதை முதல் முறையாக அறிந்ததும் இதனை குடும்பநல மாதிடம் அறிவித்து பதிவுசெய்து கொள்ள வேண்டும். உரிய திகதிகளில் கிளினிக்கிற்கு வருவதுடன் பதிவேடுகளையும் முதற் பிள்ளைகளின் பதிவேடுகளையும் மற்றும் தங்களுடைய ஏனைய மருத்துவக் குறிப்புப் புத்தகங்களையும் அவசியம் கொண்டுவரவும். உரிய திகதிகளில் குறித்த நேரத்திற்கு நேரம் தவறாமல் வருவதற்கு முயற்சிக்கவும் உங்களுக்கு கடைசியாக வந்த மாதவிடாய்த் திகதியில் சந்தேகம் வந்தாலும் அல்லது ஒழுங்கில்லாத மாதவிடாய் வந்தாலும் இவற்றை குடும்பநல மாதிடமும் வைத்தியரிடமும் முதல் முறை செல்லும் கிளினிக் கில் அறிவிக்க வேண்டும்.
நீங்கள் கருத்தரித்திருப்பின் 07-12 வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் முதற்தடவையாக நுண்ணாய்தல் (scan) செய்து கொள்வது சிறந்ததாகும். எனினும் முதல் 20 வாரங்களுக்குள் ஒரு தடவையேனும் நுண்ணாய்தல் (scan) செய்திருத்தல் அவசியமாகும். கிளினிக்கில் கொடுக்கப்படும் திரிபோஷாவை பிரதான உணவாக பயன்படுத்த வேண்டாம். திரிபோஷாவை உப உணவாக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் மகப்பேற்றுக்குத் தேவையான உடைகளையும் பொருட்களையும் தயார் செய்து வைத்தால் அவசரமாகப் பிள்ளை பிறக்கும் போது பெரும் உதவியாக இருக்கும். உங்களது குழந்தைக்கு பீ.சீ.ஜீ (B.C.G) வக்சின் ஏற்றியதா? இல்லையா? என்பதைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாயின் யோனி வழியில் உள்ள வெட்டு தைத்த பின்னர் உள்ள காயமும் குழந்தையின் தொப்புளை சுற்றியுள்ள காயமும் விரைவில் காய்ந்துவிடும். மருந்துகள் எவற்றையும் பூச வேண்டியதில்லை. அவற்றினைச் சுத்தமாகவும் நீரில் கழுவிய பின்னர் உலர் வாகவும் வைத்திருந்தாலே போதுமானதாகும்.
சத்திர சிகிச்சையின் பின்னரான வெட்டுக்காயம் குணமாவதற்கு தரப்படும் குளிசைகளைப் பாவிப்பதுடன் காயத்தினைச் சுத்தமான நீரினால் கழுவிய பின்னர் உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும். ஆனால் காயத்தில் இருந்து சீழ்வடிவு இருப்பின் வைத்தியரை அணுகவும்.
குழந்தை பிறந்த பின்னர் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் தாய்ப்பாலுடன் மேலதிக சத்துணவுகளை கொடுக்க வேண்டும்.ஒரு வருடத்தின் பின்னர் பெரியவர்கள் உண்ணும் உணவைச் சேர்க்க வேண்டும். தாய்ப்பாலை இரண்டு வருடங்கள் தொடர்ந்து கொடுக்கலாம். விடுதியில் இருந்து வீடு செல்லும் போது குழந்தையின் பிறப்பு பதிவு செய்வதற்கான நடைமுறைகளை விடுதித் தாதியரிடம் அறிந்து கொள்ளவும்.
குழந்தை பிறந்த பின்னர் எதிர்பார்க்க முடியாத கருத்தரிப்பைத் தடுப்பதற்கு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அது தொடர்பான விளக்கங்களை குடும்பநல மாதுக்களிடம் அல்லது வைத்தியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம். உங்களுடைய கர்ப்பத்தின் பின்னரான காலங்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட மிகவும் சரியான விளக்கங்களை அல்லது அனுபவங்களை மட்டும் ஏனைய கர்ப்பிணித் தாய்மார்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.