Home சூடான செய்திகள் ஏன் அமலா பாலை வீட்டு சிறைப்படுத்த துடிக்கிறார்கள் இவர்கள்?

ஏன் அமலா பாலை வீட்டு சிறைப்படுத்த துடிக்கிறார்கள் இவர்கள்?

29

இங்கு விவாகரத்துக்கு பிறகு பெண்ணான ஒருவள் என்னென்ன சங்கடங்களை, தடைகளை, சமூக வார்த்தைகளை தாண்டி / தாங்கி வாழ வேண்டியுள்ளது என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

விவாகரத்துக்கு பிறகு பெண் என்பவள் ஓர் அறைக்குள் அடங்கிவிட வேண்டும் என்பது தான் இந்த சமூகத்தின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு ஒரு ஆண் அவனது வாழ்க்கையை சாதரணமாக எடுத்து செல்லலாம், எப்போதும் போல வாழலாம், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கலாம். ஏன், விவாகரத்தான அந்த ஆண் அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர இந்த சமூகமே அவரை இந்த செயல்களில் ஈடுபட கூறி அறிவுறுத்தும். ஆனால், இதையே ஓர் பெண் செய்தால்? அவள் மறுநாள் மீண்டும் வேலைக்கு சென்றால்? சிரித்து நால்வருடன் பேசினால்? தோழிகளுடன் ஒரு பயணம் மேற்கொண்டால்? அவளுக்கு உணர்ச்சியே இல்லை, உடனே வேறு ஒருத்தனை தேட ஆரம்பித்துவிட்டால், அவளுக்கு முன்னேவே வேற ஒருத்தன் கூட தொடர்பு இருக்கும், அதான் இவன அத்துவிட்டு, சந்தோசமா இருக்கா… என பல வார்த்தை அம்புகள் அவளை நோக்கி பாய துவங்கும். விவாகரத்து என்பது பெரும்பாலும் நம் சமூகத்தில் பெண்களுக்கு மட்டுமே ஒரு பிரச்சனையாகவும், தடையாகவும், சாபக்கேடாகவும் இருக்கிறது…

அமலாவிற்கு ஏகபோக எதிர்ப்பு! இந்தாண்டு ஆரம்பத்தில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சியாக அமைந்தது அமலா – விஜய் விவாகரத்து. இதன் பிறகு சில நாட்கள் கழித்து அமலா தன் வாழ்கையை இயல்பாக வாழ துவங்கினார். சமூகம் அவர் மீதான பார்வையை எதிர்மறையாக மாற்றியது. அது சமீப நாட்களாக எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அமலாவிற்கு உணர்சிகளே இல்லை, விவாகரத்து ஆனது போலவே தெரியவில்லை. அவர் சந்தோசமாக இருக்கிறார். மாடர்ன் ஆடைகள் உடுத்துகிறார். அவருக்கு வேறு நபருடன் தொடர்பு என எக்கச்சக்கமான மீம்கள், பதிவுகள் சமூக தளத்தில் பரவுகின்றன.

அமலா மட்டுமல்ல… இது அமலாவுக்கு மட்டும் நடக்கும் விஷயங்கள் அல்ல. அமலா நடிகை என்பதால் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. மற்றபடி விவாகரத்து செய்த ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தில் இதுபோன்ற அவச்சொல்களை கேட்டு, கேட்டு சகித்துக் கொண்டு தான் வாழ்கின்றனர். ஏன் விவாகரத்துக்கு பிறகு பெண்கள் வாழவே கூடாது.

இது என்ன மாதிரியான அளவுக்கோல்? ஒரு ஆண் விவாகரத்துக்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் வாழ அனுமதிக்கும் இந்த சமூகம். ஒரு பெண் விவாகரத்துக்கு பிறகு சாதாரணமாக வாழ்ந்தால் கூட அவர் மீதான கண்ணோட்டத்தை மாற்றுவது ஏன்? அவர் மீதும், அவரது குணாதிசயங்கள் மீதும் தவறான கண்ணோட்டத்தை புகுத்துவது ஏன்? இது என்ன மாதிரியான அளவுகோல்?

வீட்டு சிறைப்படுத்த வேண்டுமா? விவாகரத்து ஆகிவிட்டால் அந்த பெண் சில காலத்துக்கு வீட்டு சிறை அனுபவித்துவிட்டு வந்தால் தான் நல்லவளா? இல்லை என்றால் அவள் கலங்கமானவளா? செயல், வேளைகளில் தான் சம உரிமை இல்லை என்றால்? ஒரு சமூக பார்வையிலும் கூட ஆணாதிக்கம் ஆட்டிப்படைக்கும் என்பது தீண்டாமையை விட பெரிய பாவசெயல் அல்லவா.

உணர்சிகள் வெளிப்படுத்த கூடாதா? சிரிப்பு வந்தால் சிரிக்க கூடாது, ஜோக் அடிக்க கூடாது. அவருக்கு பிடித்த காரியங்களை சிறிது காலத்திற்கு ஒதுக்கிவிட்டு துறவி வாழ்க்கை வாழ வேண்டும். இல்லையேல் நடிகைகளை வசைப்பாடுவது போல தான் எல்லா பெண்களையும் வசைப்பாடும் நமது சமூகம்.

நினைத்து, நினைத்து ஏங்க வேண்டுமா? வேண்டாம் என விட்டு சென்றவனை, மகிழ்ச்சியளிக்க தவறியவனை, பாதுகாக்க மறந்தவனை விவாகரத்துக்கு பிறகும் நினைத்து, நினைத்து ஏங்கி வருந்தினால் தான் அவர் நல்ல பெண். இல்லையேல் அவர் மோசமானவர். ரீல் லைப், ரியல் லைப் எல்லா பக்கமும் இது தான் நாம் காண்பவையாக இருக்கிறது.

மற்றொரு ஆணுடன் பேசினாலே அபத்தமா? விவாகரத்து ஆனபிறகு ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் பேசலாம் காதல் கொள்ளலாம். ஆனால், ஒரு பெண் இதை செய்தால் அவளுக்கு இன்னும் அரிப்பு அடங்கவில்லை, அவள் வேசி, கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள பார்கிறார் என மாறுப்பட்ட பார்வையை புகுத்தும் இந்த சமூகம். சாதித்தால் இந்தியர்கள், உயிரிழந்தால் தமிழர்கள் என்ற செய்தி தலைப்பை போல.

உங்கள் வீடென்றால் இப்படி செய்வீர்களா? விவாகரத்து ஆனபிறகு இயல்பாக உங்கள் வீட்டில் ஒருபெண் வாழ்ந்தால் நீங்கள் மகிழ்ந்து தானே போவீர்கள். அவர் முகத்தில் புன்னகையை காண தானே விரும்புவீர்கள். ஆனால், இதுவே சமூகத்தில் வேறு ஒரு பெண் என்றால் மட்டும் ஏன் பார்வையும், கண்ணோட்டமும் மாறுகிறது. விவாகரத்துக்கு பிறகு ஒரு பெண் அவளது வேலைகளை தொடர கூடாதா? சாதிக்க கூடாதா? இதற்கான விமோசனம் தான் என்ன???