Home பெண்கள் வல்வோடினியா (பெண்ணின் இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வலி

வல்வோடினியா (பெண்ணின் இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வலி

157

பெண்களின் அந்தரங்கம்:வல்வோடினியா என்பது என்ன?

வல்வோடினியா என்பது, பெண்ணின் பிறப்புறுப்புத் திறப்பில் (வல்வா) விவரிக்க முடியாத, நீடிக்கும் வலி இருக்கும் பிரச்சனையாகும். பெரும்பாலும், லேசான இறுக்கம் போன்று உருவாக்கி, எரிச்சல் போல மாறும், அப்போது வேறு நோய்த்தொற்றுகள் அல்லது சருமப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்தப் பிரச்சனை இருக்கும் பெண்கள் நீண்ட நேரம் உட்கார முடியாது, பாலுறவில் ஈடுபடுவதும் சிரமமாக இருக்கலாம்.

வல்வோடினியா எந்த வயதுப் பெண்களையும் பாதிக்கலாம், பெரும்பாலும் இது நீடித்திருக்கின்ற, மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒரு பிரச்சனையாக இருக்கும்.

காரணங்கள் (Causes)
வல்வோடினியா பிரச்சனையை ஏற்படுத்துகின்ற துல்லியமான காரணம் எது என்பது பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுள்ளன. பின்வருபவை இதனை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது:

தோலில் உள்ள நரம்பு இழைகளில் உணர்ச்சி அதிகரித்தல் அல்லது எரிச்சல் ஏற்படுதல்
பெண்ணுறுப்பில் நோய்த்தொற்றுகள்
ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்
பிறப்புறுப்புத் திறப்புப் பகுதியில் அழற்சியை ஏற்படுத்தும் பொருள்களின் அளவு அதிகரித்தல்
மரபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சம்பந்தப்பட்ட காரணிகள்
அறிகுறிகள் (Symptoms)
பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

பிறப்புறுப்பு பகுதியில் வலி
அப்பகுதியில் வலி, எரிச்சல் அல்லது வேதனை
உடலுறவின்போது வலி
அரிப்பு
பிறப்புறுப்பின் திறப்புப் பகுதி முழுவதும் வலி இருக்கலாம், இது ஜெனரலைஸ்டு வல்வோடினியா எனப்படுகிறது. பிறப்புறுப்பின் திறப்பைச் சுற்றியுள்ள திசுக்களில் மட்டும் பிரச்சனை இருக்கலாம் இதனை லோக்கலைஸ்டு வல்வோடினியா என்கிறோம். லோக்கலைஸ்டு வல்வோடினியா என்பது பிறப்புறுப்பின் திறப்பைச் சுற்றியுள்ள திசுக்களில் உண்டாகலாம் அல்லது கிளிட்டோரிஸ் பகுதியிலும் உண்டாகலாம்.

நோய் கண்டறிதல் (Diagnosis)
மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகள் பற்றித் தெரிந்துகொள்ள சில கேள்விகள் கேட்பார். வேறு ஏதேனும் நோய்த்தொற்று அல்லது சருமக் கோளாறுகள் இல்லை என உறுதிப்படுத்துவதற்காக, மருத்துவர் பெண்ணுறுப்பு இதழ் (வல்வா), பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவங்கள் ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்வார்.

யீஸ்ட் மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுகள் உள்ளதா என சோதிக்கும் வழக்கமான கல்ச்சர் பரிசோதனைகள் செய்யப்படலாம்.

ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் மற்றும் டெஸ்ட்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளைக் கண்டறியும் சோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்.

காட்டன் ஸ்வாப் சோதனை செய்யப்படலாம். இதில் பெண்ணுறுப்பின் இதழ்ப்பகுதியில் வலி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக லேசாக அழுத்தம் கொடுத்து சோதிக்கப்படும்.

சிகிச்சை (Treatment)
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகளோ வழங்கப்படலாம். அவை வல்வோடினியா பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவக்கூடும்.

சுய கவனிப்பு:

100% காட்டன் உள்ளாடைகளை அணியலாம், லூசான ஆடைகளை அணியலாம்
பபிள் பாத், சோப் மற்றும் ஃபெமினின் வைப்ஸ் போன்ற நறுமணப் பொருள்கள் சேர்த்த தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்
உட்காரும்போது வலி உண்டாவதைச் சமாளிக்க வளைய வடிவ குஷன்களைப் பயன்படுத்தலாம்
ஜெல் மற்றும் லூப்ரிகென்ட் பொருள்கள்: குறிப்பிட்ட பகுதியில் உணர்விழக்கச் செய்யும் ஆயின்ட்மென்ட்டுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இவற்றைப் பயன்படுத்துவதால் அறிகுறிகளில் இருந்து தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். உடலுறவின்போது ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க, உடலுறவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு லிடோகெயின் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படலாம். லூப்ரிகென்ட் மற்றும் ஜெல்கள் (அக்வாஸ்) பெண்ணுறுப்பு இதழ்களை மிருதுவாக்கி ஈரப்பதமூட்ட உதவக்கூடும்.

மருந்து: ஸ்டிராய்டுகள், ஆன்டிகன்வல்சன்ட்டுகள் அல்லது டிரைசைக்கிளிக் ஆன்டிடிப்ரசன்டுகள் போன்றவை அளவுக்கு அதிக நரம்புத் தூண்டல்களைக் குறைக்க உதவக்கூடும்.

ஃபிசியோதெரபி: ஃபிசியோதெரப்பி மருத்துவர் கீழ் இடுப்புத்தளப் பகுதிக்குரிய பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். அதோடு, வலியைக் குறைப்பதற்காக டிரான்ஸ்கியூட்டநீயஸ் எலக்ட்ரிக் நெர்வ் ஸ்டிமுலேஷன் கொடுக்கலாம்.

பயோஃபீட்பேக்: இந்த முறையில் அறிகுறிகளுக்கு உங்கள் உடல் எதிர்வினை ஆற்றும் விதங்களை மாற்றுவது எப்படி என்று உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் வலியைக் குறைக்கலாம். வலியைக் குறைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுவதே இந்த சிகிச்சையின் நோக்கமாகும். கீழ் இடுப்புப்பகுதித் தசையானது சுருங்கும்போதுதான் வலி ஏற்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் கீழ் இடுப்புப்பகுதி தசைகளைத் தளர்த்த உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும்.

அறுவை சிகிச்சை: லோக்கலைஸ்டு வல்வோடினியாவாக இருந்தால் பாதிக்கப்பட்ட திசு அல்லது தோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும்.

தடுத்தல் (Prevention)
இந்தப் பகுதியில் உராய்வு ஏற்படாமல் தவிர்ப்பதே, இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க சிறந்த வழியாகும். காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்துதல், நறுமணப் பொருள்கள் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் போன்றவையும் இந்தப் பிரச்சனையைத் தடுக்க உதவலாம். இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளை அளவுக்கு அதிகமாகக் கழுவுதல் மற்றும் நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சிக்கல்கள் (Complications)
பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

மனக் கலக்கம்
மன இறுக்கம்
தூக்கத்தில் தொந்தரவு
பாலியல் உறவில் செயல்திறன் குறைதல்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்கள் இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வலி இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். யீஸ்ட் அல்லது பாக்டீரிய நோய்த்தொற்றாலும் பிற மருத்துவ அல்லது சருமப் பிரச்சனைகளாலும் இந்த வலி ஏற்படலாம் எனவே பிற பிரச்சனைகள் இல்லை என்பதை மருத்துவர் சோதித்து உறுதிப்படுத்துவார்.