ஆபாச இணைய தளங்களை முழுமையாக தடை செய்ய முடியவில்லை. ஒரு இணையதளத்தை வெட்டினால், மறுபுறத்தில் புதிதாக மற்றொன்று முளைக்கிறது. இணையதளத்தில் இதுபோன்ற 4 கோடிக்கும் மேற்பட்ட இணைய பக்கங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆபாச இணையதளங்கள் அதிகரித்து வருவதால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அதற்கு முன்பு தங்களுடைய போனில் ஆபாச படத்தை பார்த்ததாக கூறியுள்ளனர். ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும¢ என்று பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற விசாரணையின்போது, “அரசு அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆபாச இணையதளங்களை தடுக்க முடியாது“ என்று இணையதள சேவை அளிப்போர் தெரிவித்தனர்.இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:இதுபோன்ற ஆபாச இணைய பக்கங்களை வெளியிடும் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளன. அங்கிருந்துதான் இணையதளத்தில் இவை சேர்க்கப்படுகின்றன. அதனால் அவற்றை தடுக்க முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.