தோள்சாய்ந்து பகிர்ந்து:ஒரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டுமென்று மனது துடிக்கிறது. நானும் அவளும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். எனக்குத் துன்பம் வரும்போது அவள் நெஞ்சில் சாய்ந்து கொள்ளவும், அவள் மடியில் படுத்துக்கொள்ளவும் என் சுக துக்கங்களை அவளிடம் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
பெண்களிடம் பேசும்போது நாக்கு, உடம்பெல்லாம் நடுங்குகிறது. எனக்கு கூச்ச மனோபாவம் மிக அதிகமாக இருக்கிறது. பிறருடன் பேச, பழகத் தயங்குகிறேன். இந்த குணம் எனது திறமை வெளிப்படத் தடையாக இருக்கிறது. வேலைக்குச் சென்றால் மனத்தில் ஏதோ பயம் தோன்றுகிறது. ஏன் என்று தெரியவில்லை. நான் என்ன செய்ய?
எனக்கொரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டும் என்று இந்த வயதில் நீங்கள் ஆசைப்படுவது ரொம்பவே இயற்கையான விஷயம் என்பதால் அது ஒரு பிரச்னை இல்லை.
நம் ஊரில் கொஞ்சகாலமாக ஆண்களையும் பெண்களையும் தனித்தனி மந்தைகளாகப் பிரித்து வைத்து பேசி, பழகி, புரிந்துகொள்ளவே வாய்ப்பில்லாமல் செய்தது உங்களின் எதிர்பாலின அதீத கூச்சத்துக்குக் காரணமாக இருக்கலாம். பெண் என்பவள் ஒரு தனி ஜீவராசி கிடையாது. அவளும் மனுஷிதான்.
“சாதாரணமாக ஒரு பையன்கிட்ட எப்படி பேசுறேனோ, அதே மாதிரி இயல்பாகப் பேசுவேன்“ என்று உங்களை நீங்களே தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டால், போகப் போக இந்த கூச்ச சுபாவமும் காணாமல் போய்விடும்.
ஆனால், உங்கள் கூச்சமும் பயமும் பெண்களோடு நின்றிருக்கவில்லையே. உறவுகள், வேலை, சுய வெளிப்பாடு ஆகிய பல முக்கிய பரிமாணங்களையும் இந்த மனநிலை பாதிப்பதனால், இந்த தேவையற்ற பதற்றத்தையும் பயத்தையும் முதலில் தணித்தாக வேண்டும். இல்லையென்றால் இது ரொம்ப ஆழமாக வேர் விட்டு உங்கள் வாழ்க்கைக்கே உலை வைத்துவிடலாம்.
இந்த தேவையற்ற பயம் ஏற்படுவதே மூளையில் மானா வாரியாகச் சுரக்கும் அட்ரீனலின் எனும் ரசாயனத்தின் விளையாட்டினால்தான். இந்த அட்ரீனலினை அடக்கி வைத்தால் பயம், பதற்றம் எல்லாம் போயேபோய் விடும்.
அட்ரீனலினை வேகமாக அடக்கவென்றே ஸ்பெஷல் மருந்துகள் உள்ளன. அவற்றைப் பிரயோகித்தால் “பயமா, அப்படின்னா?“ என்றே கேட்பீர்கள்.
அட்ரீனலினை நிதானமாக அடக்க தியானம், யோகா, மூச்சு மற்றும் தசை தளர்வுப் பயிற்சிகள் உதவும்.
துரித நிவாரணம் என்றால் மருந்தை உட்கொள்ளலாம். தாமத நிவாரணமே போதும் என்றால் பயிற்சிகள் செய்யலாம். வழி இரண்டாக இருந்தாலும் பலன் ஒன்றே.