அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.
அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.
தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.
காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.
குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.
கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.
தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.
குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.
அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.
கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.