பாலியல் தொல்லை:வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும், அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை.
காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது. நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.
உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.
பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.
பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள், சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும்.
எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.
பெண்களின் உடை, நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், பணிக்கு செல்லும் தங்களின் மனைவி, சகோதரி, மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.