மகப்பேறு பிரச்சினைதான் இன்றைய இளம் தலைமுறையினரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை மகப்பேற்றினை பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை பார்ப்பதும் மகப்பேறு பிரச்சினைக்கு காணரமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். வேலைப் பளுவுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஒரு லட்சத்து இருபதாயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்ற முறையில் வேலை செய்பவர்கள் அதாவது அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரப் பணி செய்யும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் 80 சதவீதம் கூடுதல் காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை சப்-பெர்ட்டிலிட்டி என்று சொல்கிறார்கள்.
தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்யும் பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.