Home பாலியல் பிறப்புறுப்பில் துர்நாற்றம்

பிறப்புறுப்பில் துர்நாற்றம்

70

பிறப்புறுப்பில் துர்நாற்றம்

பிறப்புறுப்பிலிருந்து எதேனும் விரும்பத்தகாத வாடை வீசுவதை பிறப்புறுப்பில் துர்நாற்றம் என்கிறோம்.உடலின் நிலை சாதாரணமாக உள்ள ஒருவருக்கு, பிறப்புறுப்பானது அங்கு சுரக்கும் சில சுரப்புத் திரவங்களின் (வெளியேறும் திரவங்கள்) மூலம் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும்.ஆண் குறியில் சிறிதளவு துர்நாற்றம் இருப்பதைப் போலவே, பிறப்புறுப்பிலும் அதன் இதழ் பகுதியிலும் (வல்வா) சிறிதளவு துர்நாற்றம் இருப்பது சாதாரணம் தான். மற்றவர்கள் உணரும் அளவிற்கு அது இருக்காது.அந்த நாற்றம் அருவருப்பூட்டும் வகையில் மாறி அதிகமானால் அது சங்கடமாக இருக்கும்.
ஒரு பெண் வழக்கமாக தவறாமல் குளித்தால், பிறப்புறுப்பில் துர்நாற்றம் அவ்வளவாக இருக்காது. ஒரே நாளில் வெவ்வேறு நேரத்தில் இந்த துர்நாற்றத்தின் அளவு மாறிக்கொண்டே இருக்கலாம், சாதரணமாக வியர்ப்பதாலும் இது ஏற்படலாம்.மாதவிடாய் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இதன் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.

வழக்கத்திற்கு மாறான விதத்தில் பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படக் காரணங்கள் என்ன?
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படலாம், சுத்தமாக இருப்பதாலேயே இதனைத் தவிர்க்க முடியும்.
அடிக்கடி உங்கள் பிறப்புறுப்பின் வாசனை மாறுவதாகத் தெரிந்தால், ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். கடுமையான துர்நாற்றம் அல்லது வித்தியாசமான (உதாரணமாக “மீன்” வாடை) துர்நாற்றம் இருந்தால், அது பிரச்சனையாக இருக்கலாம் (பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் இருக்கலாம்). இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

ஏதேனும் பிரச்சனையால் இப்படி துர்நாற்றம் ஏற்படுவதாக இருந்தால், கூடவே அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட வேறு சில அறிகுறிகளும் தென்படும், உதாரணமாக பிறப்புறுப்பில் ஏதேனும் வெளியேறலாம், அரிப்பு ஏற்படலாம், எரிச்சல் இருக்கலாம். பிறப்புறுப்பில் துர்நாற்றம் உள்ளது, ஆனால் வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், வேறு பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே ஆகும்.
பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நோய்த்தொற்று சம்பந்தமான காரணங்களும் இருக்கலாம் நோய்த்தொற்றல்லாத காரணங்களும் இருக்கலாம்.

பெரும்பாலும் பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்படக் காரணமாக இருப்பவை:
பிறப்புறுப்பில் பாக்டீரியா: பிறப்புறுப்பில் அளவுக்கு அதிகமான பாக்டீரியாக்கள் வளர்ந்து தங்கியிருக்கும் நிலை.பெரும்பாலும் பிறப்புறுப்பில் ‘மீன்’ வாடை வீசக் காரணமாக இருக்கும் நோய்த்தொற்று இதுவேயாகும்.
ட்ரைக்கோமோனியாசிஸ்: பாலியல்ரீதியாகப் பரவும் ஒரு நோய்த்தொற்று.இந்த நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு, பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் மெல்லிதாகவும் நுரை கொண்டதாகவும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் இருக்கும்.
கேண்டிடா தொற்று: கேண்டிடா எனும் யீஸ்ட்டாலும் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று ஏற்படலாம், இது ஏற்பட்டிருந்தால் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளை-சாம்பல் நிறத்தில் பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறும்.

கீழ் இடுப்புப்பகுதி அழற்சி (பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்) (PID): பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்று, இதனாலும் துர்நாற்றம் ஏற்படலாம்.பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறலாம்.
பிறப்புறுப்பின் இதழ் பகுதியில் புண்: பிறப்புறுப்பின் இதழ் பகுதியில் புண், குறிப்பாக டானோவேனோசிஸ் அல்லது கேங்க்ராய்டு காரணமாக ஏற்படும் புண்
பிறப்புறுப்பில் ஏதேனும் பொருள்களை மறந்து விட்டுவிடுதல்: டேம்பன், பிறப்புறுப்பில் பயன்படுத்தும் டயஃப்ரம் அல்லது ஸ்பாஞ்சு போன்றவற்றை எடுக்காமல் விட்டுவிடுதல்.
விபத்து, அறுவை சிகிச்சை அல்லது பிறப்பின் போது ஏற்படும் காயத்தினால், பிறப்புறுப்பில் இருந்து மலக்குடலுக்கு அல்லது சிறுநீர்ப்பைக்கு துளைப் புண் (ஃபிஸ்டுலா) உருவாதல்
பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கான நோய்த்தொற்றல்லாத காரணங்கள்:
அதிகமாக வியர்த்தல் (குறிப்பாக அதிக உடல் எடை கொண்ட பெண்கள்)
வயிறு உப்புசம் அல்லது மலச்சிக்கல் காரணமாக துர்நாற்றம் கொண்ட வாயு வெளியேறுதல்
சிறுநீர் தானாக வெளியேறுதல் – அம்மோனியா நாற்றம்
சுத்தமாக இல்லாமை
பிறப்புறுப்பு இதழ் பகுதியில் புற்றுநோய்
உளவியல் பிரச்சினைகள்

எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும்?
பிறப்புறுப்பில் தொடர்ந்து துர்நாற்றம் இருந்தால், பரிசோதனை செய்துகொள்வதற்காக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
பிறப்புறுப்பின் pH-ஐ சோதித்தல், பிறப்புறுப்பு அல்லது பிறப்புறுப்பு இதழ் பகுதிகளைத் துடைத்தெடுத்து சோதனை செய்தல் மற்றும் தேவைப்பட்டால் தோல் திசுச் சோதனை போன்ற முறைகள் மூலம் சோதனை செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் துர்நாற்றம் உள்ளதா எனக் கண்டறியப்படுகிறது.

எளிதில் பின்பற்றக்கூடிய பொதுவான தீர்வுகள்:
தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளை மிருதுவான தன்மை கொண்ட சோப்பு கொண்டு அதிக நீரூற்றிக் கழுவுதல்
மிகவும் இறுக்கமான உள்ளாடை அணிவதைத் தவிர்த்தல்
அடிக்கடி உள்ளாடைகளை மாற்ற வேண்டும்
எடையைக் குறைத்தல்
அதிக ஆற்றலுள்ள அல்லது வாசனை சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம். பிறப்புறுப்பில் நீரைப் பீய்ச்சியடித்துக் கழுவுவது நல்லதல்ல, அப்படிச் செய்வது பிறப்புறுப்பில் இருக்கும் சாதாரண நுண்ணுயிர்களின் சமநிலையைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. பிறப்புறுப்புக்கான டியோடரண்ட்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவை எரிச்சலை ஏற்படுத்தி ஒவ்வாமை (அலர்ஜிக்) விளைவுகளை ஏற்படுத்தலாம்.