தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
நீர்க்கடுப்பு ஏற்பட காரணம் என்ன?
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.
அதிகமாக வியர்த்தால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.
சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.
கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.