பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் உடல் எடை அதிகரிப்பு முக்கியமானது. அதிலும் ஒருசில பெண்களுக்கு வழக்கத்தை விட உடல் எடை கிடுகிடுவென உயர்ந்து விடும். எடை அதிகரித்துவிட்டால், அதிரடியாக அதை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. போதுமான அளவு சத்துணவுகளை சாப்பிட்டு மிதமான முறையில் எடைக்குறைப்பில் ஈடுபடவேண்டும். உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்பிணி பெண்கள் உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை:
* கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
* கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும்.
* பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும்.
* எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும்.
* உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.