Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நாள் முழுவதும் களைப்பா?

நாள் முழுவதும் களைப்பா?

34

தூக்கம் கலைந்த பின்னரும், உடலானது சோர்வுடன் ஆற்றல் இல்லாமல் இருப்பது போல் உள்ளதா? இத்தகைய சோர்வினால் பல நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு கூட எடுத்துள்ளீர்களா? எப்போது ஒருவருக்கு இப்படி அதிகம் வேலை செய்யாமல் அளவுக்கு அதிகமான களைப்பு ஏற்படுகிறதோ, அப்போது உடலின் மேல் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உடலில் ஒருசில பிரச்னைகள் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வுடன் இருக்கும். உடலில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள். அதுமட்டுமின்றி, ஒருசில பழக்கவழக்கங்களாலும் உடல் அதிக அளவில் களைப்படைகிறது. ஆகவே திடீரென்று உங்கள் உடலில் போதிய எனர்ஜி இல்லாமல் அதிக களைப்புடன் இருப்பது போல் உணர்ந்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இங்கு உடலானது எப்போதும் களைப்புடன் இருப்பதற்கான சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதய நோய்:

நாள்பட்ட சோர்வு இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் இதய நோய் இருந்தால், இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதுடன், உடலில் உள்ள செல்களுக்கு போதிய ரத்தத்தை செலுத்த முடியாமல், உடல் எனர்ஜியின்றி களைப்புடன் இருக்கும்.

காலை உணவை தவிர்ப்பது:

8 மணிநேர தூக்கத்திற்கு பின், உடல் சீராக செயல்பட ஆற்றல் தேவைப்படும். அத்தகைய ஆற்றல் காலை உணவின் மூலம் தான் கிடைக்கும். ஆனால் தற்போது பலர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று, காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர். இப்படி தினமும் செய்து வந்தால், என்ன தான் மற்ற நேரங்களில் வயிறு நிறைய உணவை உண்டாலும், அவை உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு பதிலாக, கொழுப்பை அதிகரித்து, உடலில் உள்ள களைப்பை நீக்காமல் இருக்கும். எனவே எப்போதும் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது.

குறைவாக தண்ணீர் குடிப்பது:

உடலில் எனர்ஜியின் அளவை சீராக பராமரிக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை சரியான அளவில் தினமும் பருகாமல் இருந்தால், உடலில் மெட்டபாலிசம் எதுவும் இல்லாமல், உடலுறுப்புக்கள் வறட்சியடைந்து, சரியாக செயல்படாமல் போகும். இதன் காரணமாக, உடலானது மிகுந்த சோர்வுடன் இருக்கும்.

ஜங்க் உணவுகளை உண்பது:

ஜங்க் உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதால் தான், அவற்றை உண்ட பின்னர் உடல் மந்தமாக இருக்கும். இப்படி இதனை அதிகம் உண்டு வந்தால், பின் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் பருமனடைந்துவிடும்.

உடற்பயிற்சியை தவிர்த்தல்:

தற்போது அனைத்து அலுவலகங்களிலும் வேலைப்பளு அதிகம் இருப்பதால், இரவில் தாமதமாக தூங்குவதுடன், அதிகப்படியான அசதியினால் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், எப்போதும் சோர்வுடன் இருக்க நேரிடுகிறது. எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.

அதிகப்படியான தூக்கம்:

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 8 மணிநேர தூக்கம் அவசியம் தான். ஆனால் சிலர் விடுமுறை தானே என்று 10 முதல் 12 மணிநேரம் தூங்குவார்கள். இப்படி வார இறுதி நாட்களில் தூங்கியவாறே இருந்தால், அப்போது உண்ணும் உணவுகள் உடலில் எனர்ஜியை அதிகரிக்காமல், மாறாக கொழுப்புக்களாக உடலில் தங்கிவிடும். ஆகவே விடுமுறை நாட்களிலும் ஒரே மாதிரி செயல்படுங்கள். அதாவது, சரியாக தூங்கி எழுந்து, சரியான நேரத்தில் உணவினை உட்கொண்டு, வேலைகளை செய்து வாருங்கள்.

மன இறுக்கம்:

சில நேரங்களில் சிலருக்கு மன இறுக்கம் அதிகம் இருந்தாலும், சோர்வு அதிகம் ஏற்படும். ஏனெனில் மன இறுக்கம் அதிகம் இருக்கும் போது, மூளையானது எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிடும். எனவே மன இறுக்கத்தில் இருந்து வெளிவர நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பிடித்தவருடன் நேரத்தை செலவழிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்று செய்ய வேண்டும்.

வைட்டமின் பி12 குறைபாடு:

நீங்கள் சைவமாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படக்கூடும். ஏனெனில் இந்த சத்தானது அசைவ உணவுகளில் தான் அதிகம் இருக்கும். எனவே சைவ உணவாளர்கள் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.