Home பெண்கள் அழகு குறிப்பு தங்க ஒளி தருதே தக்காளி… அழகிய முகம்!

தங்க ஒளி தருதே தக்காளி… அழகிய முகம்!

29

சாம்பார், சட்னி, தொக்கு என சமையல் வெரைட்டிகளில் கைகொடுக்கும் ‘’ தக்காளி’, ஒரு பியூட்டீஷியனும் கூட! குறைந்த செலவில், நிறைந்த அழகை வாரித் தரவல்லது தக்காளி!

ஒட்டிப்போன கன்னங்களை ‘புஸ்புஸ்’ ஆக்குகிறது இந்தத் தக்காளி கூழ்.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள்.

முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து .

வாரம் இரு முறை இப்படிச் செய்து வர, ‘குஷ்பு’ கன்னங்கள் கிடைக்கும்.

நாற்பது வயதை நெருங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்துவிடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.

தக்காளி விழுது, பாதாம் விழுது… தலா அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவர, சுருக்கம் இருந்த சுவடுகூடத் தெரியாது.

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் ப்ளீஸ்… உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது, இந்தத் தக்காளி பேஸ்ட்.

உருளைக்கிழங்கு துருவல் சாறு & 1 டீஸ்பூன், தக்காளி விழுது & அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்துபோய் முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி ஃபேஷியல் ஸ்க்ரப்.

ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள் ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.

சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய்விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது.

ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளிவீசும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம் விழுந்து சோக ராணியாக வலம் வருகிற உங்களை உற்சாக தேவதையாக்குவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக்கொள்ளுங்கள்.

இமைகளின்மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே, கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியதுபோல் கருவளையம் இருக்கிறதா? கவலை வேண்டாம்! இருக்கவே இருக்கிறது தக்காளி பேஸ்ட்.

தக்காளி சாறு & அரை டீஸ்பூன், தேன் & அரை டீஸ்பூன், சமையல் சோடா & ஒரு சிட்டிகை… இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். சங்குக் கழுத்துக்கு அர்த்தமே உங்கள் கழுத்துதான் என்றாகி விடும்!
கே & ப

‘‘என் நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன்…’’

‘‘முதலில், இது ஏன் ஏற்படுகிறதுஎன்று சொல்கிறேன். தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். -இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங் கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும்.

இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.

கசகசா & 2 டீஸ்பூனுடன், 10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள்.

மெல்லிய ஆர்கண்டி துணியை ‘ஜில்’ தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை ‘பத்து’ போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.

இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின்போது முகத்துக்கு ‘க்ரீம்Õ போடு வதைத் தவிர்ப்பது நல்லது.

கூடுதல் டிப்ஸ்: கூந்தலுக்கு இறுக்கமாக ‘க்ளிப்’ போடாதீர்கள். சுத்தமான சீப்பால் நெற்றியில் படாதவாறு வாரிக் கொள்ளுங்கள். குளிர்ந்த தண்ணீரால் மட்டுமே முகம் கழுவுங்கள்.’’