மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டில் வழக்கு
மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத் மிகவும் பாதிக்கப்பட்டார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
காரணமின்றி சண்டை
வழக்கில் கூறி இருந்ததாவது:-
திருமணமான நாள் முதல் என் மனைவி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாள். அவள் அளவு கடந்த செக்ஸ் ஆசை கொண்டிருந்தாள். பிடிவாத குணம் கொண்டு, மூர்க்கத்தனமாகவும், சர்வாதிகாரி போலவும் நடந்து கொண்டாள். காரணமே இல்லாமல் என்னுடன் சண்டை போட்டு வந்தாள்.
எனக்கு போதை ஊசி போட்டு வந்ததுடன், மது பானம் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினாள்.
மிரட்டல்
பாலுறவுக்கு மறுத்தபோதெல்லாம், தரக்குறைவான வார்த்தைகளால் என்னைப் பேசினாள். அவளது வார்த்தைகளுக்கு பயந்தே பல நேரங்களில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.
இடைவிடாமல் 3 ‘ஷிப்டு’களில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது கூட செக்ஸ் தொல்லை கொடுத்தாள். நான் அதற்கு இணங்காவிட்டால், வேறு ஆணைத் தேடிப்போய் விடுவேன் என மிரட்டலும் விடுத்தாள். என் உணர்வினைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை.
ஆபரேஷனுக்கு மத்தியிலும்…
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எனது மனைவி அவளது சகோதரி வீட்டில் நாம் இருந்து கொள்ளலாம் என கூறி கட்டாயப்படுத்தினாள். அங்கும் அவள் எனக்கு செக்ஸ் தொல்லை தந்தாள்.
அவளது நிலையை உணர்ந்து நான் அவளை மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று, சிகிச்சை அளிக்க விரும்பினாலும், அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. யாரிடமும் என்னைப்பற்றி சொன்னால், நடப்பதே வேறு என மிரட்டினாள்.
இனியும் அவளுடன் இணைந்து என்னால் வாழ முடியாது. எனவே எனக்கு அவளிடமிருந்து விவாக ரத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
விவாகரத்து
வழக்கு விசாரணையின்போது யாமினி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து, சரத்துக்கு யாமினியிடமிருந்து விவாக ரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் நீதிபதி, “இந்த வழக்கில் வழக்குதாரரின் மனைவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்குதாரரின் வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. எனவே அவரது வாக்குமூலத்தை ஏற்று, அவருக்கு விவாகரத்து வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என குறிப்பிட்டுள்ளார்.