Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

22

இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.

புஜங்காசனம்

இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.

முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.

தனுராசனம்

தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புக்களும், தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.

இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

நாகாசனம்

இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.

இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.

பவனமுக்தாசனம்

இந்த யோகாசனத்தினால் குடலுக்கு மசாஜ் செய்தது போன்று இருப்பதோடு, வயிற்று அமிலத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், முதுகு வலியைக் குறைக்கவும், அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து அழகாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

பவனமுக்தாசனம் செய்வதற்கு தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.