யோகா என்பது பண்டைய இந்தியாவின் பாரம்பரியப் பொக்கிஷம். இது மனித இனத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் பரிசு. 5000 ஆண்டுகளுக்கும் மேலாக யோகப் பயிற்சிகள் இந்தியா மற்றும் பிற பகுதிகளில் இருந்தவர்களால் செய்யப்பட்டு வருகின்றன. மனதையும் உடலையும் ஒன்றிணைப்பதை யோகா முன்னிறுத்துகிறது. உடல் மற்றும் மனநலத்தை அடைவதற்கான புனிதமான ஆன்மீக வழியாகவும் யோகா உள்ளது. இது ஒரு வகை உடற்பயிற்சியல்ல. இது நமக்குள்ளே நாம் அடங்கி அமைதியடையும் உணர்வைக் கண்டறிவதற்கு உதவும் ஒரு வாழ்க்கை முறையாகும்.
தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்சிலவற்றைப் பார்ப்போம்:
1. யோகா உடல்நலத்தை மேம்படுத்துகிறது:
உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட யோக ஆசனங்களைச் செய்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
யோகாசனங்கள் செய்யும்போது நாம் ஐசோமெட்ரிக் முறையில் செயல்படுகிறோம். அதாவது உடல் தசைகள் மிகக் குறுகிய நேரமே இறுக்கமடைகின்றன. இதன் மூலம் உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
யோகாசனங்கள் உடலின் இறுக்கத்தைக் குறைத்து எலும்பு இணைப்புகளின் அசையும் தன்மையை மேம்படுத்துகின்றன.
யோகாசனங்கள் செய்யும்போது அடிவயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு மசாஜ் செய்ததுபோன்ற பலன் கிடைக்கிறது, இதனால் செரிமானமும் கழிவகற்றமும் மேம்படுகிறது.
யோகாசனங்கள் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கின்றன. இதனால் உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவுகின்றன.
யோகாசனங்கள் நரம்பு மண்டலத்திற்கும் இதமளிக்கின்றன.
2. யோகா மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது:
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோபம், சோகம், கவலை என பல்வேறு உணர்ச்சிகளை அடைகிறோம். இப்படி உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் சமயங்களில் நமது சுவாசமும் அதற்கேற்ப சீரற்ற முறைகளில் நடைபெறுகிறது. அதே போல் சிலசமயம் ஏதேனும் அதிர்ச்சியான செய்தியைக் கேட்டாலும் சிலருக்கு சிறிது நேரம் மூச்சடைத்துவிடும். இதுபோன்ற சூழ்நிலைகள் பரிவு நரம்பு மண்டலச் (சிம்பத்திட்டிக்) செயல்பாட்டை (‘ஃபைட் ஆர் ஃப்ளைட் எதிர்வினை’ என்று அழைக்கப்படும்) அதிகரிக்கலாம். பிராணாயாமப் பயிற்சிகள் (ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சிகள்) மெதுவாகவும் மென்மையாகவும் சீரான துடிப்புடனும் சுவாசிக்க உதவும். மேலும், பிராணாயாமப் பயிற்சிகளின் போது மெதுவாக நீண்ட நேரம் மூச்சை வெளியில் விடுவதால் நமது துணைப்பரிவு நரம்பு மண்டலச் செயல்பாடு (ஆசுவாசப்படுத்தும் எதிர்வினை) தூண்டப்படுகிறது. ஆகவே, மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்த பிராணாயாமம் உதவுகிறது.
3. யோகா உறவுகளை மேம்படுத்த உதவுகிறது:
எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த, கொந்தளிப்புள்ள, சந்தேகங்கள் நிறைந்த மனம் அமைதியாகவோ நிறைவுடனோ இருக்க முடியாது. இந்த நிலையில் மனம் இருந்தால், ஒருவரால் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது. இதனால் உறவுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். மனதின் எதிர்மறைத் தன்மையைக் குறைத்து அமைதியை மேம்படுத்த தியானம் உதவுகிறது. நீங்கள் இரக்கத்துடனும், கருணையுடனும் பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையுடனும் இருக்க தியானம் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உறவுகளும் மேம்படும்.
4. யோகா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது:
பொதுவாக, நமது மகிழ்ச்சி வீடு, கார், உறவுகள் போன்றவற்றில் தான் உள்ளது என்று நினைக்கிறோம். ஆனால் அவை நிரந்தரமற்றவை, எந்த நேரமும் இல்லாமல் போய்விடலாம், இதனால் எந்த நேரத்திலும் சோகம் நம்மைத் தாக்க வாய்ப்புள்ளது. யோக தத்துவங்கள் நமக்குள்ளே உள்நோக்கிப் பயணம் செய்யவும், நம்மை நாம் உணரவும் அறிவுறுத்துகின்றன. இதனால் எதனாலும் பாதிக்கப்படாத மகிழ்ச்சி கிடைக்கும்.
5. யோகா செல்வத்தைப் பெருக்கிறது:
யோகாவைப் பொறுத்தவரை செல்வம் என்பது ‘ஞானம்’ அல்லது ‘மெய்யறிவு’ என்பதே. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே வாழ்க்கையின் சாரம், முக்கிய நோக்கம். யோக தத்துவங்கள் இதையே வலியுறுத்துகின்றன, யோகப் பயிற்சிகள் இவற்றை அடைய உதவுகின்றன.