கணவன் – மனைவி உறவு என்பது ஒரு தனி உலகம். எப்படி தாயில் இருந்து குழந்தை பிறந்து தனி உயிராக பிறவி எடுக்கிறதோ.. அப்படி தான் திருமண உறவும். திருமணத்திற்கு முன் நீங்கள் உங்கள் அப்பா, அம்மாவின் உலகில் ஓர் அங்கமாக இருந்திருப்பீர்கள். திருமணத்திற்கு பிறகு, இருவேறு உலகில் இருந்து வெளிவந்து… கணவன் – மனைவியாக வேறொரு புதிய உலகை அமைத்துக் கொள்கிறீர்கள்.
அந்த உலகில் நீங்கள் உங்கள் குழந்தை, உங்கள் சந்தோசங்கள், துக்கங்கள், வெற்றி, தோல்வி போன்றவை அமையும்.
இப்படியான உங்கள் புதிய உலகமானது சரியானதாக அமைகிறதா? அதில் ஏதேனும் சிக்கல் உருவாகி இருக்கிறதா? என்பதை எப்படி அறிந்துக் கொள்ள முடியும். முடியும், அதற்கும் சில வழிகள் இருக்கின்றன…
அடங்கிப் போகிறீர்களா?
திருமணமான நாளில் இருந்து இன்று வரை நீங்கள் மட்டுமே அடங்கிப் போகிறீர்களா? உங்க துணை சின்ன, சின்ன விஷயங்களில் இருந்து, முக்கிய முடிவுகள் வரை தான் எடுப்பது தான் சரி, தனது முடிவு தான் இறுதியானது என்ற மனப்பான்மை கொண்டிருக்கிறாரா? ஆம்! நீங்கள் ஒரு சிக்கலான உறவில் தான் இருந்து வருகிறீர்கள். திருமண பந்தத்தில் ஒருவருக்கு ஒரு விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போகலாமே தவிர, பணிந்து போகக் கூடாது.
சுதந்திரம் பெறுகிறீர்களா?
உங்களுக்கான, உங்களது சுதந்திரம் உங்க துணையின் கைகளில் சிக்கிக் கிடக்கிறதா? ஒவ்வொரு காரியமும் துணையிடம் கூறிவிட்டு செய்வது வேறு, அனுமதி பெற்று செய்வது வேறு. கூறிவிட்டு செய்வது உங்கள் சுதந்திரம் உங்கள் கைகளில் இருப்பதை காட்டுகிறது. அனுமதி பெற்று செய்வது உங்கள் சுதந்திரம் துணையின் கையில் அடைப்பட்டு கிடப்பதை காட்டுகிறது. அனுமதி பெற்றே எல்லா வேலைகளும் செய்கிறீர்கள் எனில், நீங்கள் ஒரு சிக்கலான திருமண பந்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
உணர்வுகள் வெளிப்படுத்த முடிகிறதா?
உங்கள் உணர்வுகளை உங்கள் கருத்துகளை எந்த ஒரு சூழலிலும் வெளிப்படுத்த முடிகிறதா? முடியவில்லையா? இந்த அரசாங்கமே நினைத்தாலும் கூட உங்கள் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை பறிக்க முடியாது. ஒருவேளை, உங்களுக்கான இந்த உரிமைகள் உங்கள் உறவில் சரிவர கிடைப்பதில்லை எனில், நீங்கள் ஒரு சிக்கலான உறவில் தான் பயணித்து வருகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
உடன் பிறந்தவர்கள்…
பெரும்பாலான நல்ல குடும்பங்களை பிரிப்பதே உடன் பிறந்தவர்கள் தான். வெளியே சிரித்துக் கொண்டே உள்குத்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். உன் பொண்டாட்டி இப்படி பண்ணிட்டா, என்ன மதிக்கவே இல்ல, எனக்கு மரியாதையே இல்ல… என்று கண்டதை பேசி நகமும், சதையுமாக இருப்பவர்களை, பிரித்துவிட்டு போய்விடுவார்கள். உங்கள் வாழ்விலும் இப்படியான வில்லிகள், வில்லன்கள் இருக்கிறார்களா? இந்திய குடும்பங்களில் மட்டுமே இப்படியான சண்டை, சச்சரவுகள் அதிகம் காணப்படுகின்றன.
புரிதல் இருக்கிறதா?
உண்மையாகவே ஒரு ஆண், பெண் திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டார்கள் என்பதை.. பார்வையை வைத்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதை வைத்து நாம் புரிந்துக் கொள்ளலாம். அவர்களிடையே வார்த்தைகள் பேசுவதை காட்டிலும், உணர்வுகள் அதிகம் பேசும். ஒருவேளை உங்கள் துணையுடன் இந்த புரிதல் உங்களுக்கு சரியாக இல்லை எனில் நீங்கள் இருவரும் இன்னும் சரிவர நேரம் செலவழித்து பழகவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அந்தரங்கம்!
உங்கள் இருவருக்குள் போதுமான அந்தரங்க நேரம் கிடைக்கிறதா? ஒருவருக்காக மற்றொருவர் நேரம் ஒதுக்குகிறீர்களா? என்ஜின் சரியாக ஓட எப்படி ஆயில் வேண்டுமோ, அப்படி தான் இல்லறம் சரியாக ஓட நேரம் சரியாக ஒதுக்க வேண்டும். நேரம் குறைய குறைய உங்கள் இருவருக்குள்ளான எல்லை கோடு அதிகரித்துக் கொண்டே போகும், நீங்கள் விலகி நின்றுக் கொண்டே தான் இருப்பீர்கள். எனவே, உங்களுக்கான ப்ரைவேட் ஸ்பேஸ் மற்றும் டைம் சரியாக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
துரோகம்!
உங்களுக்கு தெரியாமல் உங்கள் துணை ஏதாவது செய்கிறாரா? ஒரு உறவை அழிக்கும் புற்றுநோய் தான் துரோகம். விளையாட்டாக பேசுவது வேறு, விளையாட்டாக பேசிக் கொண்டே தங்கள் திருவிளையாடலை காண்பிப்பது வேறு. துரோகம் செய்யும் போது சுவையாக தான் இருக்கும். ஆனால், அதன் விளைவு மிகவும் கசப்பானது.
தாம்பத்தியம்!
தாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக இணைவது அல்ல. தாம்பத்தியம் கணவன், மனைவி நெருக்கத்தை அதிகரிக்க செய்யும் கருவி. அவர்களுக்கும் இணக்கம் மற்றும் அரவணைப்பு அதிகரிக்க செய்யும்.
சீரான இடைவேளையில் தாம்பத்தியம் மிகவும் அவசியம். தாம்பத்தியம் அற்ற உறவு இல்லறத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைந்து போக செய்யும். முடிந்த வரை தாம்பத்தியத்திற்கு பெரும் இடைவேளை விட வேண்டாம். இது கூட சில சமயம் துணையை துரோகம் செய்யத் தூண்டலாம்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம், பூமியில் தம்பதிகள் அக்னி சாட்சியாய் இணையச் செய்கிறது. அந்த உறவை அதே அக்னிக்கு இரையாக்கி விடாதீர்கள்.