தேன்நிலவு’, புதுமணத் தம்பதிகள் இளமையை இனிக்க இனிக்க அனுபவிக்கும் பயணம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கலாம். தேன்நிலவு தேவையற்ற செலவு வைக்கும் ஒரு சடங்கு என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கலாம். உண்மையில் தேன்நிலவு என்பது என்ன? தேன்நிலவு இனிமையாக அமைய என்ன செய்ய வேண்டும்? சில யோசனைகள்…
புதுமணத் தம்பதிகளுக்கு இல்லற வாழ்வின் இனிய ஆரம்பமாக தேன்நிலவு அமைய வேண்டும். எந்த இடத்திற்கு தேன்நிலவு பயணம் சென்றால் மனம் அமைதி அடையும், ஆனந்தம் பெருகும் என்று தம்பதி இருவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்டுப் பெறலாம்.
புதுமண தம்பதியின் பந்தத்தை மேலும் உறுதிப்படுத்தவும், எதிர்கால வாழ்விற்காக திட்டமிடவுமே `தேன்நிலவு சுற்றுலா’ ஒரு சம்பிரதாய கடமையாக பின்பற்றப்படுகிறது. இதை வெறும் பொழுதுபோக்கு சுற்றுலாவாகவோ, வீண் பணச் செலவாகும் ஒரு காரியம் என்றோ எண்ணிவிடக் கூடாது. திருமண செலவுகளுடன் சேர்ந்து இதுவும் ஒரு செலவாக கருதி இனிய அனுபவமாக தேன்நிலவை கொண்டாட வேண்டும்.
வெளிநாட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று நாம் பல விஷயங்களை ஒதுக்கிவிடுகிறோம். அந்தப் பட்டியலில் தேன்நிலவையும் சேர்த்து புறக்கணிக்கக் கூடாது. வாழ்க்கையில் பிணைப்பை ஏற்படுத்தும் அடிப்படைப் புரிதலுக்கு வழிவகுக்கும் தேன்நிலவு புதுமணத் தம்பதிக்கு அவசியமானது என்பதை தம்பதியின் பெற்றோர் உணர்ந்து, அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
திருமணம் என்பது பெரியோர்கள், உறவினர்கள் கூடி நின்று நடத்தும் ஒரு சடங்குதான். அதன்பிறகு தம்பதியர் வாழப்போகும் நீண்ட வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம்தான் தேன்நிலவு. அவர்கள் மனம் விட்டு பேசிக்கொள்ள தனிமையான, இனிமையான, சுதந்திரமான சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் தேன்நிலவுப் பயணம்.
சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் இருவரை ஒன்று சேர்த்து விடுவதில்லை. இரு மனங்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்போதுதான் நெருக்கம் ஏற்படுகிறது. அந்த நெருக்கம் அன்பாக மலர்ந்து மண வாழ்க்கையில் இனிமை சேர்க்கிறது.
எங்கோ பிறந்த இருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது என்பது பெரிய விஷயம். அதற்குண்டான ஆயத்தங்களை செய்து கொள்ள அவர்களுக்கு போதிய அவகாசம் தேவைப்படும். தேன்நிலவு என்பது அந்த அவகாசத்தை உருவாக்கித் தர பெற்றோர் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு சம்பிரதாயமாகும். அதுவே புதுமணத் தம்பதியின் இல்லறத்துக்கு பெரும் நன்மையைச் சேர்க்கும்.
பொதுவாக தனிமை பல நல்ல விஷயங்களை செய்கிறது. குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு அவர்களுடைய விருப்ப, வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தை திட்டமிடவும், குடும்ப உறவுகளை பற்றி அறிமுகப்படுத்தவும், குடும்ப பழக்க வழக்கங்களை சொல்லவும், வருங்கால வாழ்க்கைக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளவும் இந்த (தேன்நிலவு) தனிமை பயன்படும்.
மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததும், அந்தத் தம்பதியின் தலையில் பொறுப்புகளையும், கடமைகளையும் சுமத்தக்கூடாது. இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதை அவர்கள் இருவருமே உணர வேண்டும். அந்த உணர்வு ஒருவருடைய அன்பை வெளிப்படுத்தவும், தங்களுடைய அன்பால் மற்றவரை ஆசுவாசப்படுத்தவும் வேண்டும். அதற்கு தேன்நிலவே துணைபுரிகிறது.
அன்பைப் பகிர்ந்து கொண்டால்தான், துன்பம் வரும்போது ஒருவருக்காக, மற்றொருவர் எப்படிப்பட்ட பாரத்தையும் சுமந்து கொண்டு துணையாக வரும் மனப்பக்குவம் அவர்களிடம் ஏற்படும். அதுபோலவே இந்த இனிய நாட்கள் மனதில் என்றும் மறக்காமல் பசுமையான நினைவுகளாக நிற்கும். சோதனையான காலங்களில் மீண்டும் நினைத்து பார்க்க வைத்து, பிணைப்பை ஏற்படுத்தும் உறவுப்பாலமாகவும் விளங்கும்.
இத்தனை இனிமையும், தனித்துவமும் மிக்க தேன்நிலவை, `இது தேவைதானா?’ என்ற ஒற்றைக் கேள்வியை குறுக்கிட வைத்து தவற விட்டுவிடாதீர்கள்!