ஆண், பெண் எல்லோருக்குமே வாழ்நாள் முழுதும் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள, நெருங்கிய பாந்தமாகத் தொடர்ந்து உடன் பயணிக்க, ஒரு சொந்தம் தேவை என்ற உணர்வு இருக்கும், அதை நோக்கிய ஒரு நகர்வாகவே திருமணம் உள்ளது. திருமணத்தில் கிடைப்பது பாலுறவு சந்தோஷமும், காதல் அனுபவங்களும் மட்டுமல்ல. அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். பல சமயங்களில் பலவற்றைத் தியாகம் செய்ய நேரலாம். பல சமயங்களில் அது கடினமாக இருக்கும். தற்காலத்தின் பரபரப்பான வாழ்க்கை முறை, சிலசமயம் இணையரின் யதார்த்தை மீறிய எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் பலருக்கு திருமண வாழ்வில் பல சமயங்களில் மிகுந்த அயர்ச்சியும் சலிப்பும் உளைச்சலும் ஏற்படலாம். இவற்றால் உறவிலும் சிக்கல்கள் உண்டாகலாம்.
திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் அதிகரிக்க அதிகரிக்க, விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களை நாடும் இணையர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலான புகார்களை ஆராய்ந்து பார்க்கும்போது, பின்வருபவையே பிரதான பிரச்சனைகளாக உள்ளன:
எந்த உறவும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, காலம் மாற மாற, சமூகம் மற்றும் நமது குடும்பச் சூழல் மாற மாற, உறவும் பல நிலைகளை அடையும், பல மாற்றங்களை அடையும் என்ற உண்மையை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
ஆளுமை குறித்து ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அதீத அல்லது யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளால் ஏற்படும் முரண்பாடுகள்
இணையரின் சம உரிமை அல்லது சமத்துவத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமை அல்லது ஏற்க முடியாமை
ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்
உணர்வுரீதியாக நெருக்கமாக இருந்து பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் போவது
உளவியல் சிக்கல்கள் அல்லது நேரமின்மை அல்லது உடல்நலப் பிரச்சனைகளின் காரணமாக இருவரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ பாலியல் ஈடுபாடு இல்லாமல் போவது, ஆர்வம் குறைவது.
தாலி கட்டுதல், மோதிரம் மாற்றுதல் போன்ற சடங்குகளை செய்துவிட்டால் மட்டுமே ஒரு தம்பதியர் திருமண பந்தத்தில் இணைந்துவிடுவதில்லை. உள்ளார்ந்த உணர்வுடன் தம்பதியராக வாழ்வதற்கு, மிகுந்த அன்பும், அர்ப்பணிப்பும், புரிதலும் தேவைப்படும். வாழ்க்கையின் சூழல் மாறும்போதும் பல்வேறு போராட்டங்கள் எதிர்வரும்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத திடமனம் வேண்டும். உதாரணமாக குழந்தை பெற்றவுடன் ஏற்படும் கூடுதல் சுமையும் மன அழுத்தமும் திருமண வாழ்வில் சிக்கலையும் உரசலையும் ஏற்படுத்தலாம். அதையெல்லாம் எப்படி சமாளித்து உங்கள் அன்பு உறவைப் பராமரிக்கிறீர்கள் என்பது தான் சவால்!
இது போன்று தம்பதியருக்கு இடையே ஏற்படும் இடைவெளி அல்லது சிக்கல்களை, பலரும் உடனடியாக கவனித்து, தகுந்த நடவடிக்கை எடுத்து சரி செய்ய முயற்சிப்பதில்லை. பெரும்பாலும் இதற்கு இணையரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் ஆர்வமின்றி இருக்கலாம், அல்லது சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் காரணமாக இருக்கலாம், அல்லது இருவரும் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளாததால் இருக்கலாம், நம்பிக்கை குறைவால் இருக்கலாம், குடும்ப உறுப்பினர்கள் தேவையின்றி இருவரின் உறவில் குறுக்கிடுவதால் இருக்கலாம். இவை தம்பதியர் இருவருக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ள நெருக்கத்தைப் பாதிக்கலாம்.
தம்பதியருக்கான சிகிச்சை என்பது என்ன? (What is Couple Therapy?)
தம்பதியர் தங்கள் உறவைப் பற்றிய ஆழ்ந்த புரிதலைப் பெறுவதற்கும், சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், உறவினை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவுகின்ற ஒரு வகை உளவியல் ஆலோசனை சிகிச்சையே தம்பதியருக்கான சிகிச்சையாகும். இதில் பல்வேறு சிகிச்சை அணுகுமுறைகள் பயன்படுத்தப்படும்.
பலப்பல தம்பதியர் தங்களுக்குள் நிலவும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக நிபுணர்களின் உதவியை நாடி வந்தவண்ணம் உள்ளனர், ஆசை ஆசையாக உருவாக்கிக்கொண்ட திருமண பந்தத்தை விவாகரத்து எனும் முடிவின் மூலம் இழந்துவிடாமல் காக்க, இதனை அவர்கள் கடைசி உபாயமாகக் கருதுகின்றனர். நிபுணர்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும்போது, நடுநிலைமையோடு அவர்கள் கூறுவதைக் கேட்பார்கள், அவர்களின் பிரச்சனைக்கான மூல காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு விளக்குவார்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுரைகளையும் கூறுவார்கள்.
பல சூழ்நிலைகளில், இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் பாலுறவு சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும். சிலருக்குள் பாலுறவே நடந்திருக்காமல் இருக்கலாம். இன்னும் சில தம்பதியரில் ஒருவர் மிக பாலுறவில் முரட்டுத்தனமாக இருக்கலாம், எப்போதும் பாலுறவைப் பற்றிய நினைவே கொண்டிருப்பவராக இருக்கலாம், அல்லது சிலருக்கு பாலுறவில் சுத்தமாக ஆர்வமே இல்லாமல் இருக்கலாம். இது போன்ற பலவித பிரச்சனைகள் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்தப் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும்போது பாலியல் சிகிச்சையும் தேவைப்படலாம்.
எப்போதும் இணையரை சந்தேகப்படுதல், நம்பிக்கையின்மை, மனக்கலக்கம், சார்ந்திருக்கும் நோய் (கிளிங்கிங் சின்ட்ரோம்), ஈகோ பிரச்சனைகள் போன்ற பல உளவியல் பிரச்சனைகளும் தம்பதியரின் உறவில் விரிசலை ஏற்படுத்தக் காரணமாகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் உளவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கி பிரச்சனைகளைத் தீர்க்க தீர்வளிப்பார்கள்.
எந்த உறவும் நல்லபடியாக இருப்பதற்கு, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுவது மிக முக்கியம். தம்பதியர் இதுபோன்று ஆலோசனைக்கு வரும்போது, பெரும்பாலும் அவர்களை பலநாள் மனதில் புதைத்து வைத்திருந்த கோபங்கள், குறைகள், எதிர்பார்ப்புகளைப் பற்றி மனம் விட்டுப் பேசுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தம்பதியருக்கான சிகிச்சை, தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம்விட்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது, பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்கான செயல்முறையில் கவனம் செலுத்துகிறது. தம்பதியர் தங்களுக்கு இடையே ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளை அடையாளம் கண்டு, தங்களிடம் உள்ள குறைகளைப் பற்றிப் புரிந்துகொண்ட, எதிர்மறையான விஷயங்களைப் புரிந்துகொண்ட அவற்றையும் தாண்டி, நல்ல விஷயங்களைக் கருத்தில்கொண்டு சிறப்பான முறையில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு உறவை நல்லபடியாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியான இல்லற வாழ்வைத் தொடர, இது போன்ற ஆலோசனைகள் உதவுகின்றன.
திருமணம் செய்துகொள்வதும், விவாகரத்து பெறுவதும் எளிது, ஆனால் தம்பதியராக வெற்றிகரமாக, அன்போடு வாழ்க்கையை நடத்துவது அவ்வளவு எளிதல்ல, அன்பு, மரியாத, புரிதல் எல்லாவற்றையும் இழக்காமல் காத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்!