பொதுவாக தலைமயிர் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
எமது உடலில் உள்ள ஹோர்மோன்களான antrogen மற்றும் Estrogen என்பவற்றுக்கிடையேயான வேறுபாடு அதிகமாக இருப்பது ஒரு காரணம்.
இதற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். அதைத்தவிர தைரொயிட்டு (Thyroit) சுரப்பியின் மிதமிஞ்சிய செயற்பாடு அல்லது அதிகுறைவான செயற்பாடுகள் இரண்டும் உடல் நலத்தை மற்றுமின்றி முடி உதிர்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாம் பாவிக்கும் சில நோய்களுக்கான மருந்துகள் கூட தலைமுடி உதிர்வில் பங்கு கொள்கின்றன என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
உதாரணமாக குருதி உறைதலை தடுக்கும் மருந்துகள், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு பாவிக்கும் வில்லைகள், உயர் குருதி அழுத்தத்திற்கு பாவிக்கும் மருந்துகள் மற்றும் steroid என்பவற்றின் பக்க விளைவுகள் முடி உதிர்வுக்கு காரணமாக அமையும்.
மிதமிஞ்சிய அளவில் எடுக்கும் விற்றமின் ஏ யும் இதற்கு ஒரு காரணம்.
இவ்வாறு மருந்துகளால் ஏற்படும் முடி உதிர்வை, எடுக்கும் மருந்துகளை முறைப்படி பயன்படுத்துவதால் தவிர்த்துக்கொள்ள முடியும்.
முடி உதிர்வை பின்வரும் வழிகளை கடைபிடிப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.
v சுகாதாரமான தலைமுடி பராமரிப்பு
v சீரான தலை முடி பராமரிப்பு
v ஆரோக்கியமான உணவு, உறக்கம்
v சீரான மனநலம்
தலைமுடியை நன்கு பராமரிக்கவும் தலைமுடியின் வளர்ச்சி வேகத்தை அதிகபடுத்தவும் சில குறிப்புகள்.
உங்கள் தினசரி உணவில் கட்டாயம் பழவகைகளையும் மரக்கறி வகைகளையும் கீரைவகைகளையும் சேர்த்துக்கொள்வதுடன், இறைச்சி மற்றும் மீன் வகைகளும் உள்ளடங்குவது அவசியமாகும்.
காரணம் தலைமுடி கெரட்டின் எனும் புரதத்தால் அமையப்பட்டதொன்று என்பதால் நாம் அதிகளவு புரத உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.
உதாரணமாக கோழி, மீன், முட்டை, சோயா வகைகள் பீன்ஸ் போன்றவற்றை கூறலாம். இவ்வகையான உணவுகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் எனும் புரத மூலக் கூறுகளின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.
உடலுக்கு தேவையான கொழுப்பு உணவுகள் முக்கியமாக Omega_3 அதிகமுள்ள கொழுப்பு உணவுகள் ஆரோக்கியமான உடலுக்கும் மற்றும் முடிக்கும் அவசியமாகும்.
மிதமிஞ்சிய கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.
இரும்பு (Iron) மற்றும் zine அதிகமுள்ள உணவுகள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் அவசியமாகும்.
இரும்புச்சத்தானது உடலின் சகல பகுதிகளுக்கும் தேவையான ஒட்சிசனை கொண்டு செல்ல அவசியமாகிறது.
zine விற்றமின் இறந்த உடற்கலங்களை புதுப்பிப் பதற்கு அவசியமாகிறது.
அது மட்டு மன்றி மயிர் கால்களை சுற்றி உள்ள மயிர்களின் பளபளப்புக்கு காரணமான எண்ணெயை சுரக்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயற்பாட்டை சீராக செயற்பட வைக்கின்றது.
zine அதிகமுள்ள உணவுகளானவை, வறுத்த தானியம் மற்றும் பருப்பு வகைகள், நிலக்கடலை, கொக்கோ அதிகம் உள்ள சொக்லெட் (Dark Chocolate) பூசணிக்காய் போன்றவற்றை கூறலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், வறண்ட தலைமயிர் உள்ளவர்களும் zine அதிக பயன்படுத்தவேண்டும்.
இரும்புச்சத்தின் செயற்பாட்டுக்கு விற்றமின் C யின் சேர்க்கை அவசியமாகும் எனவே இரும்புச்சத்து உள்ள உணவுகளுடன் விற்றமின் C அதிகமுள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
எனவே, முடிந்த வரை ஆரோக்கியமான உணவுவகைகளை தகுந்த அளவில் நாம் உட்கொண்டு வந்தால். உடல் நலம், ஆரோக்கியமான, அமைதியான மன நலத்திற்கு காரணமாக அமையும்.
தலைமுடி பராமரிப்பு பற்றி பார்க்கும் போது மிதமிஞ்சிய அழகு சாதனங்களும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் முடி அலங்காரங்களும் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக அழகு நிலையங்களில் பாவிக்கும் தலை முடிகளை சீராக்கும் பதார்த்தங்கள், இரசாயன கலவையாகவே அதிகம் இருக்கும். இவற்றை முறை தவறி பயன்படுத்துவதாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் முடியின் தடிப்பு குறைந்து மெல்லிய மயிர்களாக மாறுவது மட்டுமின்றி முடி உதிர்வுக்கும் காரணமாக அமையும்.
அடிக்கடி தலை முடியை உலர்த்துவதற்கு செயற்கை வெப்பத்தை பயன்படுத்துவதும் மிதமிஞ்சிய வெப்பமும் தலைமுடி உதிர்வுக்கு காரணமாகும்.
எனவே முடிந்தளவு தலைமுடியை உலர்த்துவதற்கு மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
அடிக்கடி தலைமுடியை சீப்பால் சீவுவதால் தலை முடி வளரும் என கூறப்பட்டாலும், மிதமிஞ்சிய அழுத்தத்தை முடிக்கு கொடுக்கும் போது தலைமுடியின் மயிர்க்கால்கள் வெளியே இழுக்கப்படுகின்றன.
இச்செயற்பாடு காலப்போக்கில் முடி உதிர்வுக்கு காரணமாக அமைந்து விடும்.
மிகமிக முக்கியமான விடயம் தலை முடி நனைந்த நிலையில் சீப்பால் சீவுவதும் அழுத்தி துடைப்பதும் முடி உதிர்வை அதிகப்படுத்தும்.
தலை முடி ஈரமாக இருக்கும் நிலையில் அதன் உறுதி தன்மை குறைவதால் இலகுவில் பாதிப்படைய வாய்ப்புண்டு.
தலை முடியில் அதிக அழுத்தம் கொடுக்கும் விடயங்களில் கூடிய கவனம் எடுப்பது நல்லது.
குறிப்பாக, இறப்பர் நாடாக்களை கொண்டு தலை முடியை இழுத்து கட்டும் போதும் மேலதிகமாக கிளிப் வகைகளை அழுத்தமாக முடியை இழுத்து செருகும் போதும் தேவையற்ற அழுத்தத்திற்கு தலைமுடி உட்படுகிறது.
இம் மிதமிஞ்சிய அழுத்தம் தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும்.
தலைமுடியை கழுவும் போது கூடுதல் கவனம் செலுத்தல் வேண்டும்.
உங்கள் தலைமுடியின் எண்ணெய் தன்மைக்கு ஏற்ப கிழமைக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் shambo அல்லது Conditioner பயன்படுத்தலாம்.
இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் போது இவை தலைமுடியில் இயற்கையாக உள்ள எண்ணெய்த் தன்மையை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.
இதனால் வறண்ட தலைமுடியாக மாறுவதுடன் தலை முடி உதிர்வும் அதிகமாகும்.
v இரவு நித்திரைக்கு போகும் முன் தலையை இதமாக மாசாஜ் செய்து கொள்ளுங்கள்.
v தலைமுடி ஈரமாக உள்ள நிலையில் கூடிய கவனம் எடுக்கவும்.
v குறைந்தளவான வெப்பத்தை தலைமுடி உலர்த்த பயன்படுத்தவும்.
v ஆரோக்கியமான உணவில் அதிக நாட்டம் எடுங்கள்.
v Steroid மருந்துகளை வைத்திய ஆலோசனை இன்றி தொடர்ந்து பாவிப்பதை தவிருங்கள்.
v இரசாயனம் சேர்க்கப்பட்ட தலைமுடி சீராக்கிகளை தவிர்த்து இயற்கை மூலிகைகளை பயன்படுத்தவும்.