வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும், பெண்களுக்குக் கூடுதல், கவனம் தேவைப்படுகிறது. பொதுவாகப் பெண்களுக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வலிப்புகளை உருவாக்கும் தன்மை உடையது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவக் காலம், குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன், ரசாயன மாற்றங்கள் வலிப்பு நோயைப் பாதிக்கக்கூடும்.
வலிப்பு உள்ள ஒரு பெண், கருத்தரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அது போலவே, கருத்தரித்த பெண்களுக்கு முதன்முறையாக வலிப்பு வந்தால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு, முகப்பரு, எடை கூடுவது, முடி உதிர்வது, பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOD) போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டே பெண்களுக்கு வலிப்பு நோய் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வலிப்பு நோய் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதத் தடையும் இல்லை. தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பெறுவது, போன்றவை இயல்பாக எல்லோரையும் போல இருக்கும் என்பதால் அச்சம் தேவை இல்லை.
திருமணத்துக்காக, வலிப்பு நோய்க்கான மாத்திரைகளைக் குறைப்பதோ, மாற்றுவதோ அல்லது நிறுத்திவிடுவதோ வலிப்பு வரக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும். தாயின் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் அது நல்லதல்ல.
வலிப்பு உள்ள பெண்கள், கூடுமானவரை கருத்தடை மாத்திரைகளை (ஹார்மோன் பில்ஸ்) தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, மாற்று கருத்தடை முறைகளைக் (காப்பர்-டி, பெண் உறை போன்றவை) பின்பற்றுவது நல்லது.
பிரசவ கால ஜன்னியில் (Eclampsia), கர்ப்பிணிகளுக்கு வலிப்பு வரக்கூடும். ரத்தக் கொதிப்பு அதிகமாவதால் ஏற்படும் மூளை பாதிப்பே இதற்குக் காரணம். உடனே மருத்துவரால் கவனிக்கப்பட வேண்டிய நிலை இது.
தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
மகப்பேறு காலத்தில் தாய்க்கோ, சிசுவுக்கோ அல்லது இருவருக்குமோ ஏற்படும் வலிப்பு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால், மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வலிப்பு மாத்திரைகளால் 2 முதல் 3 சதவீதம்வரை, பிறக்கும் குழந்தைக்கு ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட வலிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களின் குழந்தைகளுக்கு ஊனம் இருக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.
வலிப்புகளால் ஏற்படும் விளைவுகள், மருந்துகளால் வரும் பக்கவிளைவுகளைவிட மோசமானவை. அதனால், மகப்பேறு காலத்தில் வலிப்புகளைக் கட்டுப்படுத்துவதே முதன்மையாகக் கருதப்படும்.
வலிப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்; தாய்ப்பாலில் வலிப்பு மருந்துகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், பயப்பட வேண்டாம்.