விந்தக சுய பரிசோதனை என்பது விந்தகப் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியச் செயப்படும் பரிசோதனையாகும். விந்தகப் புற்றுநோய் குணமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, கூடியமட்டும் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிவது முற்றிலும் குணம் பெற மிக உதவியாக இருக்கலாம்.
விந்தகத்தின் மீது வீக்கம் போன்று இருப்பதே விந்தகப் புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். சில சமயம் விந்தகம் முழுதுமே வீங்கிக் காணப்படலாம். சில ஆண்களுக்கு, கட்டி பெரிதாகாத வரை அல்லது பரவாதவரை அது இருப்பதே தெரியாமல் போகலாம். பெரும்பாலும், ஒரு ஆணுக்கு விந்தகப் புற்றுநோய் இருக்கிறது என்பது மருத்துவர்களின் பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்வதை விட, அவர்களாகவே அல்லது அவர்களின் துணைவர் கண்டறிந்து கூறுவதால் தெரிந்துகொள்வதே அதிகம்.
ஆண்கள் தங்கள் விந்தகங்களை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் தங்கள் விந்தகங்கள் இயல்பாக இருக்கும்போது எப்படி இருக்கும், வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும், தேவையானால் மருத்துவரை அணுக வேண்டும்.
யாரெல்லாம் விந்தகங்களை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
புற்றுநோய்ப் பரிசோதனையின் ஒரு பகுதியாக மருத்துவர் விந்தகப் பரிசோதனையைச் செய்யலாம். வயதுவந்த பிறகு, எல்லா ஆண்களும் விந்தகங்ககளை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று எந்த உடல்நல அமைப்பும் பரிந்துரைக்கவில்லை. இப்படி சுயமாகப் பரிசோதனை செய்வது விந்தகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களின் வீதத்தைக் குறைப்பது பற்றியோ நோய் ஏற்படும் வீதத்தைக் குறைப்பது பற்றியோ எவ்வித ஆய்வுகளும் செய்யப்படவில்லை.
நீங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் மாதம் ஒருமுறை விந்தகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படலாம்:
குடும்பத்தில் யாருக்காவது விந்தகப் புற்றுநோய் இருந்திருந்தால்
முன்பு விந்தகக் கட்டி இருந்திருந்தால்
விதைப்பை கீழே இறங்காமல் இருந்தால்
ஒவ்வொரு மாதமும் விந்தக சுய பரிசோதனை செய்துகொள்வது என்பது அவரவர் விருப்பத்திற்குட்பட்டது. இதை சில நிமிடங்களில் எளிதாகச் செய்துவிடலாம்.
விந்தக சுய பரிசோதனையை எப்படிச் செய்வது?
வெதுவெதுப்பான நீரில் குளித்து முடித்த பிறகு விந்தக சுய பரிசோதனையைச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால், விந்தகங்களை மூடியிருக்கும் தோல் தளர்ந்து இருப்பதால் விந்தகங்கள் நன்கு தொங்கும், இதனால் எளிதாகப் பரிசோதனை செய்ய முடியும்.
ஒரு நேரத்தில் ஒரு விந்தகத்தை மட்டும் பரிசோதனை செய்யவும். முடிந்தால், ஒரு கண்ணாடியின் முன்பு நின்றுகொள்ளவும்.
விந்தகங்களை மூடியுள்ள தொலை முதலில் ஆய்வு செய்யவும், ஏதேனும் வீக்கம் உள்ளதா எனப் பார்க்கவும்.
ஒவ்வொரு விந்தகத்தையும் பரிசோதிக்க இரண்டு கைகளையும் பயன்படுத்தவும். விந்தகத்தின் மேல் பகுதியில் இரண்டு கட்டை விரல்களையும் வைத்துக்கொள்ளவும், சுட்டுவிரல்களும் நடுவிரல்களும் விந்தகத்தின் பின்புறம் இருக்க வேண்டும், இப்படி வைத்து விரல்களுக்கு இடையே விந்தகத்தை உருட்டிப் பார்க்கவும்.
விந்தகங்கள் உறுதியாக இருக்க வேண்டும், ஆனால் பாறை போலக் கடினமாக இருக்கக்கூடாது. இந்தப் பரிசோதனையைச் செய்யும்போது வலி எதுவும் இருக்கக்கூடாது.
ஒரு விந்தகம் மற்றதைவிட சற்று பெரிதாக இருப்பதும், இரண்டில் ஒன்று மற்றதைவிட சற்று கீழே தொங்கிக்கொண்டு இருப்பதும் இயல்பு தான்.
விந்தகத்தின் பின்புறம், மேல் பகுதியில் எப்பிடிமிஸ் (விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாயின் தொடக்கம்) இருப்பதை உணர முடியும். அது மென்மையாக, ஒரு கயிறு போலத் தோன்றும். சுற்றிலும் இரத்த நாளங்களுடன், விந்தணுக்களைக் கொண்டுசெல்லும் குழாய்கள் விந்தகங்களில் இருந்து மேல்நோக்கி செல்வதையும் நீங்கள் உணர முடியும்.
எங்கேனும் கடினமான வீக்கம் போன்று ஏதேனும் உள்ளதா, அல்லது மிருதுவான கட்டி போன்று ஏதேனும் உள்ளதா என்றும் விந்தகங்களின் அளவு, வடிவம் அல்லது கடினத் தன்மையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
TSE பரிசோதனையின்போது ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஏதேனும் வீக்கமோ, கட்டி போன்று இருப்பதாகவோ தெரிந்தால் அல்லது விந்தகங்களின் கடினத் தன்மை, அளவு போன்றவற்றில் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
விந்தகங்களில் வீக்கமோ, கட்டி போன்றோ இருந்தால், அது நிச்சயம் புற்றுநோயாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஹைட்ரோசீல் அல்லது வெரிக்கோசீல் போன்ற பிரச்சனைகளாகவும் இருக்கலாம். ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக உள்ளதா என்பதையும், மேலும் ஏதேனும் சோதனைகள் செய்ய வேண்டுமா என்பதையும் உங்கள் மருத்துவர் முடிவு செய்வார். ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால், விரைப்பை மற்றும் விந்தகங்களை ஆய்வு செய்வதற்காக உங்கள் மருத்துவர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யலாம்.