Home இரகசியகேள்வி-பதில் இளம் பெண் மகளிர் நலவியல் மருத்துவரிடம் முதல் முறை செல்லும்போது

இளம் பெண் மகளிர் நலவியல் மருத்துவரிடம் முதல் முறை செல்லும்போது

80

மகளிர் நலவியல் மருத்துவர் என்பவர் யார்?

மகப்பேறு மற்றும் மகளிர் நலவியல் மருத்துவர் என்பவர் பெண்களின் உடல்நலத்திற்கான சிறப்பு மருத்துவராவார்.

ஓர் இளம்பெண் எப்போது மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

தி அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டெட்ரிஷியன்ஸ் அண்ட் கைனக்காலஜிஸ்ட்ஸின் மகளிர் உடல்நல நிபுணர்களின் அமைப்பின் கருத்துப்படி, ஓர் இளம்பெண் தனது 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

பொதுவாக, முதல் முறை மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்லும்போது என்ன நடக்கும்?

முதல் முறை செல்லும்போது, மருத்துவர் உங்களிடம் பலவற்றைப் பற்றிப் பேசுவார்.
உங்கள் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்பார். இவற்றில் சில மிகவும் அந்தரங்கமான விஷயங்களாக இருக்கலாம், ஆனால் உங்கள் நிலையைப் பற்றி மருத்துவர் சரியாகப் புரிந்துகொள்ள அவை முக்கியம்.

ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இப்படியான சில கேள்விகள்:

கடைசியாக உங்களுக்கு மாதவிடாய் எப்போது வந்தது?
மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு அல்லது வலி போன்ற ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா?
பெண்ணுறுப்புப் பகுதியில் ஏதேனும் வலி, வெள்ளைப்படுதல், அரிப்பு அல்லது அசௌகரியம் உள்ளதா?
தற்போது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்களா (பெண்ணுறுப்பில் உடலுறவு, வாய்வழிப் புணர்ச்சி அல்லது குதவழிப் புணர்ச்சி)?ஆம் எனில், ஆணுறை போன்ற ஏதேனும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகிறீர்களா?
சில பரிசோதனைகளும் செய்யப்படலாம்.

மகளிர் நலவியல் மருத்துவரிடம் எதைப் பற்றிப் பேச வேண்டும்?

பெரும்பாலான இளம்பெண்களுக்கு குறிப்பிட்ட சில உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம், அது போன்ற பிரச்சனைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசலாம், அவற்றில் சில:

சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள்
மாதவிடாய்க் காலத்தில் தசைப்பிடிப்பு வலிகள்
முகப்பரு
எடை சார்ந்த பிரச்சனைகள்
உணர்ச்சிகளில் திடீர் மாற்றங்கள்
குடிப்பழக்கம், புகைபிடித்தல் அல்லது போதைப்பழக்கம் போன்றவை
கருத்தடை முறைகள்
பால்வினை நோய்
உடல்நலம் பற்றிய வேறு பொதுவான கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.

முதல் முறை செல்லும்போது என்னென்ன சோதனைகள் செய்யப்படும்?

பொதுவாக செய்யப்படும் சில பரிசோதனைகள்:

பொது உடற்பரிசோதனை: உங்கள் உயரம், எடை, நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஒரு பொது உடல் பரிசோதனை ஆகியவை செய்யப்படலாம்.
மார்பகப் பரிசோதனை: மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள், வீக்கங்கள் போன்றவை உள்ளதா அல்லது வேறு பிரச்சனைகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
வெளி இனப்பெருக்கக் உறுப்புப் பரிசோதனை: உங்கள் பிறப்புறுப்பு இதழ்களைப் பார்த்து அவை இயல்பாக இருக்கின்றனவா என ஆய்வு செய்வார்.

கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனை: முதல் முறை செல்லும்போது பொதுவாக இந்தப் பரிசோதனை செய்யப்படாது. மாதவிடாயின்போது அதிக வலி, அசாதாராண இரத்தப்போக்கு அல்லது வழக்கத்திற்கு மாறான திரவங்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளதாக நீங்கள் தெரிவித்தால் மட்டுமே செய்யப்படலாம்.

கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனையில் மூன்று பகுதிகள் உள்ளன:

1. பிறப்புறுப்பு இதழ்களை ஆய்வு செய்தல்

2. ஸ்பெக்கியூலம் எனப்படும் ஸ்பூன் வடிவிலான கருவியின் உதவியுடன் யோனி மற்றும் கருப்பைவாய்ப் பகுதியை ஆய்வு செய்தல்

3. கையில் கையுறை அணிந்துகொண்டு, உங்கள் உள்ளுறுப்புகளைப் பரிசோதனை செய்து பார்த்தல்

முதல் முறை செல்லும்போது ஆய்வகப் பரிசோதனைகள் ஏதேனும் செய்யப்படுமா?

உங்கள் பொதுவான உடல்நிலை மற்றும் பிற சோதனைகளில் கண்டறியப்பட்ட முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேவைப்பட்டால் ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்கப்படலாம். உதாரணமாக, உங்களுக்கு இரத்தசோகை இருந்தால், ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிவதற்கான சோதனை செய்யப் பரிந்துரைக்கப்படலாம். சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், பிற ஹார்மோன் சோதனைகளும், தேவைப்பட்டால் கீழ் இடுப்புப்பகுதிக்கான ஸ்கேனும் செய்யப்படலாம்.

தற்போது நீங்கள் பாலியல் செயல்களில் ஈடுபடுபவர் எனில், பால்வினை நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் இருந்தால், அவற்றைக் கண்டறிவதற்காக வேறு சில சோதனைகளும் செய்யப்படலாம்.

தடுப்பூசிகள் ஏதேனும் பரிந்துரைப்பார்களா??

ஹியூமன் பாப்பில்லோமாவைரஸ் (HPV) தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு உங்கள் மகளிர் நலவியல் மருத்துவர் பரிந்துரைக்கலாம். சில குறிப்பிட்ட பிரச்சனைகள் (ஹெப்பட்டைட்டஸ் A, ஹெப்பட்டைட்டஸ் B போன்றவை) வரும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தால், அதற்கான தடுப்பு மருந்துகளை செலுத்திக்கொள்ளுமாறும் பரிந்துரைப்பார்கள்.

முதல் முறை நீங்கள் மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்லும்போது, உடல்நலத்தை எப்படிக் காப்பது என்பது பற்றியும் அடுத்த முறை வரும்போது என்னென்ன செய்யப்படும் என்பது பற்றியும் மருத்துவர் உங்களிடம் விவரிப்பார். உங்களுக்கு எந்த சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது.