கண்காணிப்பது வேறு… கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு… பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண் மூடித்தனமானதாக இருக்கக் கூடாது!உங்கள் வளரிளம் பருவத்தைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். அப்பருவத்தில் உங்களுக்குள் பாலுணர்வினால் உண்டான உடல் மற்றும் மன கொந்தளிப்புகளைப் பற்றி சிந்தியுங்கள். அப்போதைய சூழலுக்கு அந்த உணர்ச்சிகளை அடக்கி ஆள்வது அவசியமாக இருந்திருக்கும்.
இதுவோ செல்போன், ஃபேஸ்புக், கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயம். இன்றைய வளரிளம் பருவத்தினரிடையே ‘டேட்டிங்’ கலாசாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிறது. இது பெரிய நகரங்களில் மட்டும் அல்லாது சிறு நகரங்களிலும் சகஜமாகி வருகிறது.
‘டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம். வயசாக ஆக எல்லாம் சரியாகிடும்’ என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் இன்று மற்ற பாலினத்தாருடன் மேற்கொள்ளும் உறவுகளே நாளை அவர்களின் உறவுகள் நலமாக உருவாகுமா இல்லையா என்பதை முடிவு செய்யும். இந்த நேரத்தில் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் டேட்டிங் பற்றி கலந்தாலோசிப்பது அவசியம். அப்படிச் செய்யும்போது அவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்தபடி அதே நேரம் டேட்டிங் பற்றிய உங்கள் கொள்கைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்வதும் அவசியம்.
அந்த உரையாடலின் போது, ‘இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கோட்பாடுகள் அமைத்தீர்களேயானால், உங்கள் பிள்ளைகள் அதை மீறத்தான் நினைப்பார்கள். மாறாக அவர்களுடைய குறிக்கோள்களுக்கும், எதிர்காலத்துக்கும் எது நல்லது, எது உதவாது என்று அவர்களே உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.
சரி… பேச்சை எப்படி ஆரம்பிப்பது? இதுதானே உங்கள் குழப்பம்?
அந்த நேரம் செய்திகளில் அடிபடும் பிரபலங்களின் வாழ்க்கைச் சிக்கல்களை முன்வைத்தே இதைப் பற்றிய உரையாடலைத் தொடங்கலாம். பிரபலங்களின் வாழ்க்கைப் பிரச்னைகளில் இருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி பேசலாம். பிரபலங்களின் உறவுகளில் எவை நலமானவை, எவை நலமற்றவை என்பதை எடுத்துரைத்தீர்களேயானால் அது ஒரு லெக்சராக இல்லாமல் சுவாரஸ்யமான உரையாடலாக அமையும்.
இதுதான் நம் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்வதற்கு மாறாக, குறிப்பிட்ட அந்த பிரபலத்தின் வாழ்க்கை, சிக்கலில் முடியாமலிருக்க அவர்கள் தம் டீன் ஏஜ் பருவத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று டிஸ்கஸ் செய்தால் விதிமுறைகள் நாசூக்காக உள்ளேறும்.
பிறகு உங்கள் கட்டுப்பாடுகளை ஒப்பந்த நோக்குடன் எடுத்துச் சொல்லி, உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.
உதாரணத்துக்கு, உங்கள் பெண் ஒரு பார்ட்டிக்கு சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் திட்டத்துடன் இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம். முதலில் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நீங்களோ வேறு பொறுப்பான நபரோ அவளை கூட்டிச் சென்று அங்கு நம்பகமான, பொறுப்பான நபரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் பேசலாம். அந்த நபர், உங்கள் பெண் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்
காணிக்கக்கூடிய ஆண்மகனாகவும் இருக்கலாம்.
பிறகு 8 மணிக்கு நீங்களோ, வேறு நம்பகமான நபரோ சென்று அவளை தெரிந்த நபரிடமிருந்து அழைத்து வர, அவளுடன் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கலாம். அதை விட்டு விட்டு ‘பார்ட்டிக்கு செல்லக்கூடாது, ஆண் பிள்ளைகளுடன் நட்பு கூடாது, 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும்’ என்று நீங்கள் கட்டுப்பாடுகளை விதித்தால் உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு உள்ள உறவு முறிவதுடன், அவள் உங்கள் பேச்சை மீறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என அர்த்தம். தவிர அவள், தன் நடவடிக்கைகளை உங்களிடமிருந்து மறைக்கவும் துணிவாள்.
அவளுடன் சேர்ந்து முடிவெடுப்பதால் அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது என்ற உணர்வு ஏற்படுவதுடன், அந்த முடிவுக்கு அவளும் பொறுப்பு என்ற உணர்ச்சியை உண்டாகும். அதோடு, உங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடி, உங்கள் இருவருக்குமான பந்தம் பலப்படுத்தப்படும். “சரி, என்னுடைய பிள்ளை செக்ஸ் சிந்தனையில் ஈடுபட மாட்டாள் என்று எப்படி உறுதிப்படுத்தலாம்’’ என்று கேட்டீர்களேயானால் அதற்கு ஒரே பதில் – ‘முடியாது’.
அவள் அவ்வித சிந்தனைக்கு ஆளானாலும் பொறுப்புடன் நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையைதான் வளர்க்க முடியும். அது, நீங்கள் அவளுடன் செக்ஸ் பற்றி எவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. இன்று 10 வயது பிள்ளைகளே செக்ஸ் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனல் டி.வியில் ஆபாசக் காட்சிகள் வரும் போது ‘பார்க்காதே’ என்று கண்களை மறைப்பதோ, ‘போய் தண்ணி கொண்டு வா’ என்று திசை திருப்புவதோ இன்று பொருந்தாது. அதைத் தவிர்த்து அந்த நேரத்தில் செக்ஸ் பற்றி வயதுக்குத் தகுந்த விதத்தில் பேசினால், பிள்ளை வளர்ந்த பிறகு பாலுணர்வு பற்றி அவளுடன் பேசவும் போதிக்கவும் உதவும். அப்படிப் போதிக்கும் போது சில விஷயங்களை நீங்கள் அவசியம் வலியுறுத்த வேண்டும்.
அதாவது…
சற்றே வயது முதிர்ந்த ஆண் பிள்ளைகள், இளம்பெண்களைக் கவரக்கூடிய அபாயம் பற்றி… அவர்களில் சிலரிடம் உள்ள பணம், வாகனம் போன்றவை அந்த ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தக் கூடிய அபாயம் பற்றி…
அதன் தொடர்ச்சியாக பாலுறவில் ஈடுபடும் ரிஸ்க் தலைதூக்குவதைப் பற்றி…
அந்தத் தகாத உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் இன்னல்கள் (பாலியல் நோய் முதல் இளவயது கர்ப்பம் வரை) பற்றி…
இளவயதில் காதல் வயப்பட்டு, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து, குடும்பம் மற்றும் சமுதாய ஆதரவின்றி, தவிக்கிறவர்களைப் பற்றி…
இவை எல்லாவற்றையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தலாம். ‘என் பெண் அப்படிப்பட்டவள் அல்ல. தவறு செய்ய மாட்டாள்’ என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கும் பெற்றோர், அவர்களின் பெண் ‘காம’ வலையில் சிக்கிய பிறகு படும் அவஸ்தைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என்னிடம்… காலத்துக்கேற்ற விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதே இந்த விஷயத்தில் பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புகிற ஒரே அட்வைஸ்… விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோரே! மீடியாவின் தாக்கத்தில் டீன் ஏஜ்… எப்படி மீட்பது?