Tamildoctorsஅவர் பிரபலமான சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். இளம் வயது. சுறுசுறுப்பானவர். குறிப்பிட்ட ப்ராஜெக்ட் ஒன்றிற்கு தலைமை பொறுப்பை ஏற்றிருந்ததால், அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வாடிக்கையாக இருந்தது. அவருக்கு மனைவியும், ஐந்து வயது மகளும் உள்ளனர்.
மாதத்தில் பாதி நாட்களே வீட்டில் தங்கும் அவர், சமீபகாலமாக தனது மனைவியின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கவனித்தார். எப்போதும் பதற்றம், அடிக்கடி செல்போனை பார்ப்பது, நள்ளிரவு நேரத்தில்கூட திடீரென்று விழித்து வாட்ஸ் அப், பேஸ் புக் போன்றவைகளை கவனித்தல்.. இப்படி நிறைய மாற்றங்கள்.
எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த அவள், பேஸ்புக்கில் தகவல்களை பார்க்கும்போதெல்லாம் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால் உடலும் குண்டாகிக்கொண்டிருந்தது. தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை உருவாகி, ஒருகட்டத்தில் கணவர் மீதும் கோபத்தில் எரிந்துவிழத் தொடங்கினாள்.
‘ஏன் இப்படி குழப்பமிக்கவளாக நடந்துகொள்கிறாய்?’ என்று கேட்டு, அவர் மனைவியிடம் மனம்விட்டுப் பேச முயற்சித்தபோதும் அவள் ஆர்வம் காட்டாமல் கணவரை புறக்கணித்தாள்.
மனைவியின் புறக்கணிப்பும், மாற்றமும் கணவருக்கு கவலையை ஏற்படுத்தியது. தான் பெரும்பாலான நாட்கள் வீட்டிற்கு வராததால் மனைவிக்கு வேறு தொடர்புகள் ஏதேனும் ஏற்பட்டுவிட்டதோ என்று அஞ்சினார்.
அன்று அவர் அலுவலகத்தில் இருந்தபோது, ‘உங்கள் மனைவி திடீரென்று மூச்சுபேச்சில்லாமல் ஆகிவிட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்’ என்று பக்கத்து வீட்டினர், தகவல் கொடுத்தார்கள். அவர் விரைந்து சென்றார். மருத்துவமனையில் அவளுக்கு நான்கு நாட்கள் பலவிதமான பரிசோதனைகள் செய்து பார்த்தும் எந்த பாதிப்பும் தென்படவில்லை. குழப்பமடைந்த டாக்டர்கள், மனநல நிபுணரிடம் அனுப்பிவைத்தார்கள். அவரால்தான், பாதிப்பிற்குரிய உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிந்தது.
அதாவது அந்த பெண்ணின் தோழி ஒருத்தி உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளது கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். தனிமையில் வசிக்கும் அவளது செல்போனுக்கு திடீரென்று ஒருநாள் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்திருக்கின்றன. அவர்கள் அவளை விலைமாதுவாக நினைத்து தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவள், பேஸ்புக்கில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அவளது செல்போன் எண்ணும், போட்டோவும் அதில் இடம் பிடித்திருக்கிறது. அதனால் அவள் மிகுந்த அவமானத்தை சந்தித்திருக்கிறாள். குடும்பத்தினரும் அவளை தவறாக கருதியிருக்கிறார்கள்.
அந்த சம்பவத்தை கண்ணீர்மல்க இவளிடம் விவரித்த தோழி, ‘நீயும் பெரும்பாலான நாட்கள் தனிமையில் இருக்கிறாய். அதனால் கவனமாக இரு’ என்று கூறி பயமுறுத்தியிருக்கிறாள்.
அவளது வேறு சில தோழிகள் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் தகவல்களை மட்டும் தொடர்ந்து அவளுக்கு அனுப்பிக்கொடுத்து, ‘சிறுமியான உன் மகளை கவனமாக பார்த்துக்கொள்’ என்றும் உபதேசம் செய்திருக்கிறார்கள்.
முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புணர்வாகவும் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் அவள் தொடர்ந்து எதிர்மறையான தகவல்களை இரவு பகல் பாராமல் சமூக வலை தளங்களில் பார்த்துவந்திருக்கிறாள். அதற்கு அடிமையாகிப்போனதால் மெசேஜ் வந் திருக்கும் ஓசை கேட்டதும் உடனே தூக்கம் கலைந்து அது என்ன செய்தி என்று பார்த்திருக்கிறாள். அதனால் தூக்கமின்மை, மனஅழுத்தம், அதிகப்படியான உணவு உண்ணுதல் போன்ற நெருக்கடிகளுக்கு உள்ளாகி தனது ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் இழந்திருக்கிறாள்.
உண்மையை உணர்ந்து கணவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். சமூக வலைதள அடிமையாகிவிட்ட மனைவியை மீட்பதற்கும், தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அடுத்தகட்ட கவுன்சலிங்கிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
நீங்களும் சமூக வலைதளங்களில் இதுபோல் எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறீர்களா? கவனம் தேவை! பாதிப்புகள் அதிகம்!