ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மிகச் சிறந்த கனவுகளோடு இருக்கும் காலம் கர்ப்ப காலம். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றிய கற்பனைகளுடன் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது ஒரு அருமையான அனுபவம்.
இந்த காலகட்டத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டும். அதே நேரம் உடலின் ஹார்மோன் மாற்றங்களால் அவ்வப்போது சில சின்ன சின்ன சிக்கல்கள் தோன்றி மறையும்.
அவ்வித சிக்கல்கள் தோன்றும் போது அதை சரியான நேரத்தில் கவனித்து சரி செய்தால் தாய் சேய் இருவருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நிலை மாற்றங்களை இங்கே தொகுத்து கூறப்பட்டுள்ளது.
இரத்தசோகை: கர்ப்ப காலத்தில் அதிக அளவு தண்ணீர் பருகுவதால், சிலருக்கு சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் .இதனை ஹீமோகுளோபின் சோதனையில் அறியலாம். அதிக சோர்வுடன் இருப்பது ,முகம் வெளிறி காணப் படுவது ,மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருக்கலாம். இவைகளை போக்குவதற்கு அதிக அளவில் இரும்பு சத்து , போலிக் ஆசிட் ஆகியவை அதிகம் நிறைந்துள்ள உணவுகள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டால் இரத்த சோகையிலிருந்து மீளலாம்.
கர்ப்பகால நீரிழிவு: இரத்த சர்க்கரை அளவு பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் மாறுபடுகிறது. சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றை ஆற்றலாக மாற்றுவதில் சிரமம் ஏற்படுவதால் கர்ப்ப கால நீரிழிவு உண்டாகிறது. க்ளுகோஸ் ஸ்க்ரீனிங் சோதனை மூலம் மற்றும் க்ளுகோஸ் சகிப்புத்தன்மை சோதனை மூலம் நீரிழிவு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது பிரசவத்தின்போதும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியம் மற்றும் சமசீரான உணவு முறையாலும், தொடர்ச்சியான உடற்பயிற்சியாலும் இந்த நீரிழிவு வராமல் கட்டுப்படுத்தலாம்.
மனச்சோர்வு: சில பெண்களுக்கு அவர்களின் தாய்மை உணர்வு தரும் மகிழ்ச்சியை விட மற்ற காரணத்தினால் ஏற்படும் கவலைகள் அதிக மனச்சோர்வை தரும். இதனால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இதன் மூலம் மூளைக்கு அழுத்தம் உண்டாகும். தாயை பாதிக்கும் அணைத்து விஷயங்களும் குழந்தையையும் பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். புகையிலை, மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள உள்ளவராயின் அவற்றை முற்றிலும் விட்டுவிடுவது நல்லது. மன நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதும் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
முன்சூல்வலிப்பு என்னும் ப்ரீக்லாம்ப்சியா : கர்ப்ப காலத்தில 20 வாரங்களில் இந்த நிலை தோன்றும். மங்கலான பார்வை, உயர் இரத்த அழுத்தம், வயிற்று வலி, தலைவலி மற்றும் கைகளின் வீக்கம் போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் வலிப்பு கூட தோன்றலாம். ப்ரீக்லாம்ப்சியா முன்கூட்டியே பிரசவத்திற்கு வழிவகுக்கும், அதேபோல் பிற தாய்வழி மற்றும் பிறப்பு அபாயங்களைத் தூண்டலாம். பிரசவம் மட்டுமே இதற்கான தீர்வாகும். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை எடுத்து கொள்ளவது நல்லது.
பரிசோதனைகள் : கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனையில் எல்லா உபாதைகளுக்கும் தீர்வுகள் கொடுக்கப்படும். அதே சமயம் மனதளவில் தைரியத்தோடும், தன்னபிக்கையோடும் முக்கியமாக மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டியது கட்டாயமாகும். குழந்தையின் முகத்தை பார்க்கும் போது இந்த அனைத்து சிரமங்களும் நம்மை பார்த்து சிரிக்கும் என்பது எல்லா தாய் மார்களுக்கும் புரிந்த ஒன்று.