திருமணம் பற்றிய பல கனவுகளிடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைவோம் ஆனால் திருமணமான அந்த முதல் ஒரு வருடம் தான் வாழ்வில் நீங்கள் சந்தித்த மிக கடுமையான வருடமாக இருக்கும். இந்த திருமணமான ஒரு வருடத்திலேயே பல கணவன் மனைவி பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் வரிசை கட்டி நிற்கும்.
ஏன் இந்த திருமணமான முதல் ஒரு வருடம் மிகவும் மோசமான வருடமாக அமைகிறது என யோசித்திருக்கிறீர்களா? இதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.
1. அதிகமான எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் அனைவரும் உங்கள் மீது பாச மழை பொழிந்து இருப்பார்கள் முக்கியமாக உங்களது மாமியார் வீட்டில் தான் பாசத்தை அதிகமாக காட்டியிருப்பார்கள். நிச்சயத்திற்கு பிறகு உங்களது வருங்கால கணவர் பல மாய வார்த்தைகளை பேசுவார் அதை எல்லாம் கண்டு மயங்கி நீங்கள் ஒரு மாய உலகத்திற்கே சென்று வாழப்போவது மாதிரியான ஒரு மிதப்பில் இருப்பீர்கள். ஆனால் இது எல்லாம் திருமணமான சில தினங்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதன் பின்னர் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்கள் இதனை உங்கள் மனம் ஏற்க மறுக்கும் இது தான் பிரச்சனைக்கு முதல் காரணம்.
2. பண பிரச்சனை திருமணத்திற்கு முன்பு ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு செலவு செய்வீர்கள் ஆனால் திருமணத்திற்கு பின்னர் என்ன தான் குறைவாக செலவு செய்தாலும், செலவை கட்டுக்குள் கொண்டுவருவது கடினமாகிவிடும். இதனால் மன வருத்தமும், முன்பை போல வாழ முடியவில்லையே என்ற ஏக்கமும் உண்டாகும்.
3. சுதந்திரம் பறிபோதல் பலருக்கும் திருமணத்திற்கு பிறகு ஒரு சில விஷயங்களை செய்வதில் தடைகள் உண்டாகும். பிடித்தது போல வாழ முடியாது. நினைத்த நேரத்திற்கு எழுந்திரிக்க முடியாது இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். சில விஷயங்களை இழக்க நேரிடுவதும், சில விஷயங்களை அனுசரித்து போவதும் இயல்பானது தான். இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு சண்டை போட கூடாது.
4. புதிய மனிதர்கள் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். திருமணமான புதிதில் ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் அவரிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டு, அவர் தான் சேகரித்த விஷயங்களை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
5. மாமியார் மருமகள் சண்டை தனது மகனை புதிதாக வந்த பெண் பறித்து விட கூடாது என்றும், தனது கணவனின் மனதில் தனக்கென ஒரு இடத்தை முழுமையாக பிடிக்க வேண்டும் என்று மருமகளும் போட்டி போட்டு கொள்வதே மாமியார் மருமகள் சண்டைக்கு காரணம். இவை காலப்போக்கில் மாறிவிடும்.
6. எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கவில்லை திருமணத்திற்கு பிறகு உலகமே தலைகீழாக மாறப்போகிறது என நினைத்துக்கொண்டிருப்போம். உண்மையில் யாருக்குமே நினைத்த வாழ்க்கை கிடைப்பதில்லை. ஒரு சில சந்தர்பங்கள் சூழ்நிலைகளை சமாளித்து போக வேண்டியது அவசியம்.
7. குழந்தையின்மை ஒரு சில வீடுகளில் திருமணமான 2 மாதத்திலேயே கர்ப்பமாக இருக்கிறாயா என கேட்க தொடங்கிவிடுவார்கள். இதனால் கணவன் மனைவி இருவரும் வாழ்க்கையில் ஒரு புரிதலுக்கு வந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்வது முடியாமல் போகிறது. உறவினர்களின் கேள்விகள் சங்கடத்தையும் மனவருத்தத்தையும் உண்டாக்குவதாகவும் உள்ளது.