அவளுக்கு 30 வயது. சாப்ட்வேர் துறையில், பெருநகரம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறாள். அவளது பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்துவைப்பதற்காக, ஐந்தாண்டுகளாக பெரும் முயற்சி செய்துகொண்டிருக் கிறார்கள். அவள் காதல்வசப்பட்டிருந்தாள். அவளது காதலன் வேலை தொடர்பாக பெரும்பாலான நாட்கள் வெளி நாடுகளிலே இருந்துகொண்டிருந்தான். அதனால் தனது திருமண விஷயத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாமல் அவள் தவித்துக்கொண்டிருந்தாள்.
‘இனியும் நீ திருமணத்தை தள்ளிப்போட்டால் நாங்கள் தவறான முடிவு எடுத்துவிடுவோம்’ என்று அவளது பெற்றோர் மிரட்டிய பின்பு, ‘சரி மாப்பிள்ளை பாருங்கள்’ என்றாள்.
அவளுக்கு முப்பது வயதாகிவிட்டதால் வரன் கிடைப்பதில் நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியில் 34 வயதான ஒருவர் கிடைத்தார். அவர் இன்னொரு பெருநகரத்தில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். அவருக்கும் அவரது குடும்பத்தினர் பல வருடங்களாக திருமணம் செய்துகொள்ள நெருக்கடி கொடுத்துக்கொண்டிருப்பதால், அவரும் வேறுவழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தார்.
‘எந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை’ என்ற மனநிலையில் அவர் இருக்க, ‘எப்படிப்பட்ட வரனாக அமைந்தாலும் கவலையில்லை’ என்ற மனநிலையில் அவள் இருந்தாள்.
இருதரப்பு பெற்றோரும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். பின்பு அவரும்- அவளும் போனில் பேசினார்கள். ரிசார்ட் ஒன்றில் சந்தித்து மனம்விட்டு பேச விரும்பினார்கள். ‘விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்கள்தானே! தனிமையில் பேசி சுப முடிவு எடுக்கட்டும்’ என்று, குடும்பத்தினரும் அனுமதித்தார்கள்.
அவர்களது தனிமை சந்திப்பு மணிக்கணக்கில் நீண்டது. அவள், அவரிடம் தனக்கு காதலர் இருப்பதை ஒத்துக்கொண்டாள். அவரையே தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதற்காக இன்னும் பல வருடங்களானா லும் காத்திருக்கப்போவதாகவும் சொன்னாள். ‘பெற்றோர் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியதால், உங்களை சந்திக்க ஒத்துக்கொண்டேன்’ என்றாள்.
அவர், ‘எனக்கு திருமண வாழ்க்கையில் நம்பிக்கை கிடையாது. தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமும் கிடையாது. எனக்கு மனைவியாக வருகிறவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்னால் இயலாது. நானும் என் பெற்றோர் வற்புறுத்துதலால்தான் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன்’ என்றார்.
திருமணத்தை விரும்பாத அவர்கள் இருவரும் அந்த தனிமை சந்திப்பில் மனம்விட்டுப்பேசி, பெற்றோரை ஏமாற்ற எடுத்த இறுதி முடிவுதான் மிகுந்த அதிர்ச்சியானது.
‘திருமணம் செய்துகொள்ளும்படி நமது பெற்றோர் தொடர்ந்து நமக்கு நெருக்கடி தந்துகொண்டேதான் இருப்பார்கள். அதில் இருந்து தப்பிக்க நாம் திருமணத்திற்கு சம்மதித்துவிடுவோம். திருமணத்தை எளிமையாக முடித்து விட்டு, நாம் வேலை பார்க்கும் நகரங்களுக்கு நாம் பிரிந்துசென்றுவிடுவோம். நமக்குள் எந்தவிதமான தொடர்பும்வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் காதலனுடன் போய் சேர்ந்துகொள்ளுங்கள். சில மாதங்களில் யாருக்கும் தெரியாமல் நாம் சட்டப்படி ரகசியமாக பிரிந்துவிடலாம். நமது குடும்பத்தினருக்கு மட்டும் நாம் கணவன்- மனைவியாக காட்டிக்கொள்வோம்’- இதுதான் அவர்கள் எடுத்திருக்கும் அதிர்ச்சியான முடிவு!
காலம்போகிற போக்கை நீங்களும் கவனத்தில்வைத்துக்கொள்ள, இதை உங்கள் காதுகளிலேயும் போட்டுவைக்கிறோம்.. அவ்வளவுதான்..!