பெய்ரோனி நோய் என்பது என்ன? (What is Peyronie’s disease?)
ஆண்குறியில் காணப்படும் டியூனிக்கா அல்பஜீனியா எனப்படும் மீள்தன்மை கொண்ட இணைப்புத் திசுச்சவ்வுக்குள் வடுத் திசு (பிளேக்) உருவாகி சேர்வதையே பெய்ரோனி நோய் என்கிறோம். இந்த பிளேக் வழக்கமாக ஆண்குறியின் மேல் பகுதி அல்லது அடிப்பகுதியில் உருவாகும். இப்படி பிளேக் படிவது தொடர்ந்து நடக்கும்போது, ஆண்குறி வளைந்துவிடும், விறைப்பாகும் போது வலி ஏற்படும்.
இப்படி ஆண்குறி வளைந்திருப்பதால் உடலுறவு கொள்ளும்போது வலி இருக்கும், உடலுறவு கொள்வதே முடியாததாகவும் ஆகிவிடக்கூடும். பெய்ரோனி நோய் முதலில் அழற்சியாக உருவாகும், பிறகு படிப்படியாக முன்னேறி கடினமான வடுவாக மாறும். 40-70 வயதுள்ள ஆண்களில் 1 முதல் 23% ஆண்களுக்கு பெய்ரோனி நோய் உண்டாகிறது.
காரணங்கள் (Causes)
பெய்ரோனி நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இந்த நோய் உண்டாவதற்கு பங்களிக்கக்கூடும் என்று சில காரணிகள் கருதப்படுகின்றன, அவை:
ஆண்குறியில் அடிபடுதல்
மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட காலம் ஆண்குறியில் ஊசி போட்டுக்கொள்ளுதல்
ஆட்டோ இம்யூன் நோய்கள்
ஆபத்துக் காரணிகள் (Risk factors)
பெய்ரோனி நோய் வருவதற்கான ஆபத்துக் காரணிகளில் சில:
ஆண்குறியில் நுண்மையான காயங்கள் ஏற்பட வழிவகுக்கும்படி கடுமையான உடல் செயல்பாடுகள் அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
சில ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் இணைப்புத் திசுக் கோளாறுகள்
வயதாவது
குடும்பத்தில் இந்தப் பிரச்சனை யாருக்காவது இருந்திருத்தல்
அறிகுறிகள் (Symptoms)
பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
ஆண்குறியில் கடினமான கட்டி போன்று தோன்றுதல்
உடலுறவின்போது அல்லது ஆண்குறி விறைக்கும்போது வலி
ஆண்குறி வளைந்திருத்தல் (விறைப்புத் தன்மை இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்)
ஆண்குறி சிறிதாவது
விறைப்பின்மைப் பிரச்சனை
நோய் கண்டறிதல் (Diagnosis)
இந்த நோயைக் கண்டறிவதில், உடல் பரிசோதனை செய்யப்படும். உங்கள் மருத்துவர் ஆண்குறியின் அளவை அளந்து பார்த்து வடுத் திசு இருக்கும் இடத்தையும் திசு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றும் கண்டறிவார். ஆண்குறி சிறிதாகியுள்ளதா என்றும் ஆய்வு செய்வார். ஆண்குறியில் கட்டி போன்று தடிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை மருத்துவர் அல்லது சிறுநீரக மருத்துவர் ஆய்வு செய்து கண்டறியலாம்.
பிளேக் இருப்பதைக் கண்டறிய பின்வரும் படமெடுத்தல் சோதனைகள் செய்யப்படலாம்:
ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் சோதனை
ஆண்குறியின் எக்ஸ்ரே
சிகிச்சை (Treatment)
பெய்ரோனி நோய் உங்களுக்கு தீவிரமான நிலையில் இல்லையெனில், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம். பெய்ரோனி நோய் தீவிரமான நிலையில் இருந்தால், மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சைகள் போன்றவை பரிந்துரைக்கப்படும்.
மருந்து: ஆண்குறி வளைந்திருப்பதைக் குறைக்க, அழற்சி, பிளேக்கின் அளவு, வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படும்.
மருத்துவ சிகிச்சைகள்: பிளேக் உள்ள பகுதியில் கதிர்வீச்சு அல்லது உயர் செறிவு கொண்ட அல்ட்ராசவுண்ட் செலுத்தப்படும்.
வளைவைச் சரிசெய்ய, கைமுறையாக நீவிவிடப்படலாம், ஆண்குறியை வளைத்தல் அல்லது நீட்டுவதற்காக வாக்கும் சாதனங்கள் பயன்படுத்தப்படலாம்.
அறுவை சிகிச்சை: நீண்ட நாட்களாக இப்பிரச்சனை இருந்துவந்தால் பிளேக்கை அகற்றவும் ஆண்குறியின் வளைவைச் சரிசெய்யவும் அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அவற்றில் உள்ளடங்குபவை:
கிராஃப்டிங்: இந்த முறையில் பிளேக் அகற்றப்பட்டு, புதிய தோலின் சிறு துண்டு, இரத்தக் குழாய் அல்லது விலங்கிலிருந்து பெறப்பட்ட பொருள் ஒட்டப்படுகிறது.
ப்ளைக்கேஷன்: பிளேக்கிற்கு எதிரே இருக்கும் சிறு திசுத் துண்டு கிள்ளி எடுக்கப்படுகிறது. இதனால் ஆண்குறி வலிமையாகும்.
ஆண்குறியில் உபகரணம் பொருத்துதல்: இந்தப் பிரச்சனையுடன் விறைப்பின்மைப் பிரச்சனையும் இருந்தால் இந்த முறைகள் செயல்படுத்தப்படலாம். இந்த உபகரணங்கள் ஆண்குறி விறைப்படைய உதவுகின்றன.
தடுத்தல் (Prevention)
பெய்ரோனி நோயைத் தடுப்பதற்கான வழிகள் பற்றி ஆராய்ச்சிகளில் எதுவும் கண்டறியப்படவில்லை.
சிக்கல்கள் (Complications)
சிக்கல்களில் சில:
உடலுறவில் ஈடுபடமுடியாமை
விறைப்பின்மை
உடலுறவில் ஈடுபட முடியுமா என்பது குறித்த மனக்கலக்கம் அல்லது மன அழுத்தம்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
ஆண்குறி வளைந்திருப்பதால் வலி இருந்தால் அல்லது உடலுறவில் ஈடுபட முடியாமல் போனால் அல்லது இது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கினால், என்ன சிகிச்சைகள் உதவக்கூடும் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் அல்லது மனக்கலக்கத்தின் அறிகுறிகள் இருந்தால், உளவியல் நிபுணரிடம் செல்லவும்.