“சினிமா வாழ்க்கையில் இன்று நான் ஒரு வெற்றிபெற்ற நடிகையாக இருக்கலாம். அதற்காக நிஜ வாழ்க்கையில் நான் நிறைய தோல்வியடைந்துவிட்டேன். இந்த அந்தஸ்தைப் பெற நான் இழந்தது ஏராளம். ஆரம்பத்திலிருந்து இன்று வரை அந்த இழப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்று தனது கறுப்பு பக்கத்தை திரும்பிப் பார்க்கிறார், கவர்ச்சி நடிகை சன்னிலியோன்.
“உனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் தயாரிப்பாளரோடு ஒரு நாள் இரவை கழிக்கவேண்டும். யோசித்துக் கொள். இந்த இருட்டை கடந்தால் தான் அந்த வெளிச்சம் என்று முதன் முதலாக தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தேன். என்னை குழப்பம் சூழ்ந்துகொண்டது. முடிவெடுக்கத் தயங்கினேன். நீ மறுத்தால் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு போய்விடும். என்ன சொல்கிறாய் என்று என் பதிலை எதிர்பார்த்து நின்றவர்களுக்கு சரி என்று அரைமனதோடு பதில் சொல்வதற்குள் என் உயிர் போய்விட்டது. இப்படி என் உயிரை விட்டுதான் சினிமாவில் அறிமுகமானேன். ஒரு முறையல்ல பல முறை.
சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது தவறா? சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? இன்று என்னிடம் நட்சத்திர அந்தஸ்து உள்ளது. பணம் உள்ளது. எல்லா வசதியும் உள்ளது. ஆனால் இதற்காக நான் இழந்த விஷயங்களை நினைத்து பார்க்கும்போது நெஞ்சம் குமுறுகிறது. என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது.
ஆரம்பத்தில் யாருடனும் பேச கூச்சப்படுவேன். நேருக்கு நேர் பார்க்கக்கூட பயப்படுவேன். யாராவது என்னைப் பார்த்துவிடுவார்களோ என்று ஆடைக்குள் என்னை மறைத்துக் கொள்வேன். இப்போது எங்கே போனது அந்த கூச்சம், பயம் எல்லாம்? சினிமா அவைகளை விலைக்கு வாங்கிவிட்டது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சினிமா என்னை சிதைத்துவிட்டது. இது சினிமா நடிகைகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. இப்படி எல்லாம் நான் வெளிப்படையாக பேசுவதற்கு என்னைப் போன்ற பல நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் உரக்கச் சொல்கிறேன்.. என் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக..!” என்று கனத்த இதயத்தோடு, கெட்ட கனவாகிய அந்த நாட்களை மறக்க நினைக்கிறார், சன்னி லியோன்.
“நடிகைகளின் நட்சத்திர மோகம்தான் இப்படி அவர்களை அலைகழித்து புதை குழியில் தள்ளுகிறது. மற்ற வேலைகளைப் போன்று சினிமாவும் ஒரு வேலைதான். இங்கு மட்டும் பெண்களுக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நிகழ்கிறது? கலைத் தாகத்தோடு வருபவர்களை இப்படி ஏன் நடத்த வேண்டும்? கொஞ்சம் கூட விருப்பமில்லாமல், யாரென்றே தெரியாத புதிய மனிதரோடு இசைந்துபோவதென்பது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? ஒரு பட வாய்ப்புக்காக இதைச் செய்யவேண்டும் எனும்போது வாழ்க்கையே கசந்துவிடு கிறது. அப்போது மற்றவர்களைப் பார்த்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.
நான் இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசுவதைப் பார்த்து பலர் அதிர்ந்து போனார்கள். தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு கண்டித்தார்கள். நீ செய்வது நியாயமா? நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளலாமா? என்று திட்டினார்கள். பலர் போன் செய்து நீ சொல்வது சரிதான் என்றும் பாராட்டினார்கள்.
சமூகத்தில் பல துறைகளிலும் பெண்களுக்கு எதிரான இந்த அவலம் நடக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஒரு செய்தி பரபரப்பாக வெளிவந்தது. ‘பரீட்சையில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக ஒருசில மாணவிகள் விரிவுரையாளர்களுடன் இரவில் கொட்டமடிக்கிறார்கள். அதனால் உண்மையாக படிக்கும் மாணவ–மாணவிகள் பின்தங்கி விடுகிறார்கள்’ என்ற அந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலையை எழுப்பியது.
பல்கலைக்கழகம் என்பது கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கக்கூடிய இடம். அங்கேயே இப்படி ஒரு அவலமா? என்ற கேள்வி ஒருபுறம் எழும்ப, மறுபுறம் அந்த வழியை கடைப்பிடித்த மாணவிகள் எதிர்காலத்தில் வெளியே எப்படி நடந்துகொள்வார்கள்? என்ற கேள்வியும் உருவானது.
அந்த அதிர்ச்சி செய்தி உண்மை என்றால், அந்த மாணவிகள் தேர்ந்தெடுத்த வழி தவறானது. ஆண்களின் பலகீனத்தை பயன்படுத்தி முன்னுக்கு வரநினைப்பது அவமானகரமானது.
சில பெண்கள் எக்குத்தப்பாக மாட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். மாயா, பள்ளி ஆசிரியை. திறமையால் அந்த ப ணிக்கு வந்தாள். சிறிது காலம் கழித்து பதவி உயர்வு கேட்டாள். அதை பள்ளி முதல்வர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக பேசி பணிய வைத்தார். பதவி உயர்வும் கிடைத்தது. பிறகு மாயாவிற்கு திருமணமானது. அதன் பிறகும் அவளை தொடர்பில் இருக்கும்படி அவர் சொன்னதை மாயாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரோ பழங்கதை பேசி அவளை ‘பிளாக்மெயில்’ செய்தார். மாயா நிம்மதியை இழந்தாள். திருமணமாகி இருபது ஆண்டுகளாகியும் இன்றும் ஒருவித பயத்தோடேயே மாயா வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள். பதவி உயர்விற்காக வாழ்க்கையை ரணமாக்கிக்கொண்ட அவள், எந்த நேரம் கணவருக்கு உண்மை தெரிந்துவிடுமோ என்ற பதற்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இப்படியும் பல சம்பவங்கள்.
வாழ்க்கையில் முன்னுக்கு வர குறுக்கு வழியை ஏணியாக கையாளும் பெண்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அந்த ஏணி எந்த நேரத்திலும் உங்களை கவிழ்த்துவிடும். அப்போது குற்றஉணர்வு தோன்றும். ஊரும், உறவும் கேலி செய்யும்.
அரசியலிலும் இது போன்ற தடம்மாறிய முன்னேற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விளையாட்டுத் துறையிலும் நடப்பதுண்டு.
இதை ஆதாரமாக வைத்து இந்தியில் ‘சக் தே இண்டியா’ என்ற படம் வெளிவந்தது. அதில் ஷாருக்கான் விளையாட்டு பயிற்சியாளராக இருப்பவர். அவர் ஒரு வீராங் கனையை கேப்டனாக நியமித்துவிடுவார். அதைக் கண்டு கொந்தளித்த இன்னொரு வீராங்கனை, ஷாருக்கை தன் வசப்படுத்த அவரை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். அதில் பரபரப்பான பல காட்சிகள் உண்டு. அதை பார்த்து விளையாட்டு துறையினர் அதிர்ந்தனர்.
குறுக்கு வழி மோசமானது. அதன் மூலம் கிடைக்கும் வெற்றி கசப்பானது. தற்காலிகமானது.