வெயில் காலத்தில் நாம் நமது வழக்கமான பாதுகாப்பு முறைகளை மீண்டும் கவனத்தில் கொள்வோம். கோடை என்றாலே உடலில் நீர்சத்து குறைய ஆரம்பிப்பது வெயிலில் அலையும் அனைவருக்கும் சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்று. இதுவே கூடும் பொழுது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் அதிக நீர்வற்றி ஏற்படும் பாதிப்பு ஏற்படுகின்றது.
கோடை என்றால் சரும பாதிப்பு என்பது மிக அதிகம். ஊறல், நமைச்சல், அதிக அரிப்பு, குத்துவது போன்ற உணர்வு, எரிச்சல்,வலி, கட்டி, வெடிப்பு, வீக்கம், கசிவு என பல பிரச்சினைகள் ஏற்படும்.
* வேர்குரு: குளிர்ந்த ஒத்தடங்கள் வேர்குருவிற்கு நன்கு உதவும். முட்டானி மட்டி, கடலை மாவு இவை உடலில் தடவி குளிப்பது உதவும். ஆப்பிள் சிடார் வினிகருடன் நீர் கலந்து பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடங்கள் சென்று கழுவி விட வேர்குரு அடங்கும். லவாண்டர் எண்ணெயினை வெது வெதுப்பான நீரில் கலந்து குளிக்க உஷ்ண கட்டிகள் அடங்கும்.
* மெல்லிய, பருத்தியினால் ஆன இறுகாத ஆடைகளை அணியுங்கள்.
* நடைபயிற்சி, ஓடுதல் இவற்றினை காலை, மாலை அதிக வெய்யில் இல்லாத நேரத்தில் செய்யுங்கள்.
* குளிர்ந்த அதாவது சாதாரண நீரில் குளியுங்கள்.
* உடல் மடிப்புகளில் வேர்வையின் ஈரம் படியாது உலர்ந்து இருக்கச் செய்யுங்கள்.
* கனமான கிரீம்களை இக்காலத்தில் பயன்படுத்தாதீர்கள். சருமத்தில் சிறுசிறு முடிகள் இருக்கும். இவற்றின் வேர்களில் கிருமி பாதிப்புகள் ஏற்படலாம். இவை முகம், தலை, கை மடிப்பு, முதுகு, நெஞ்சு, கழுத்து, தொடை என பல இடங்களில் ஏற்படலாம்.
நீரில் வேப்ப இலையினை முதல் நாள் இரவே நனைத்து உடல் முழுவதும் படும்படி குளிக்க இயற்கை வைத்தியத்தில் அறிவுறுத்தி பலனும் அடைந்துள்ளனர்.
மருத்துவம் எந்த முறை என்பதனை விட ஆய்வு பூர்வமாக நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டால் அதனை மனித சமுதாயம் பயன்படுத்தி பலன் பெறலாமே.
வெள்ளை வினிகர் (அ) ஆப்பிள் சிடார் வினிகர் இதனை சிறிதளவு நீரில் கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது. இத்தகு பாதிப்பு ஏற்படாது இருக்க கோடையில்
* வேர்வை உடைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
* நீச்சல் செய்பவர்கள் மிக அதிக க்ளோரின் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.
* சருமத்திற்கு எரிச்சல் அளிக்காத ஆடைகளை அணியுங்கள்.
* பெண்கள் வாக்கிங் செய்யும் பொழுதும் ஆண்கள் ஷேவ் செய்யும் பொழுதும் உங்களது சுகாதார டவல்களை உபயோகியுங்கள்.
பரு பாதிப்பு: வியர்வையும், கிருமியும் சேர்ந்தால் கட்டி, பருபாதிப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்க சுகாதாரமே முதல் அவசியம். துண்டு, தொப்பி, தலை பேண்டுகள் இவற்றினை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். எண்ணை பசை மிகுந்த க்ரீம், மாஸ்ட்ரைஸர் இவற்றினை அடியோடு தவிருங்கள். கடல் உப்பினை நீரில் கலந்து குளிக்க முதுகில் ஏற்படும் பருக்களும் நீங்கும்.
* சருமம் வறட்சி அடைவதை தவிர்க்க மிதமான காரம் கொண்ட சோப்பினை பயன்படுத்தவும். மென்மையான, மெலிதான சன் ஸ்க்ரீன் உபயோகிக்கவும், உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்படாதிருக்க இயற்கையான மஞ்சள், சந்தனம் உபயோகிக்கவும்.